ரமாவும் ரஞ்சனியும்!

ரஞ்ஜனியை எல்லோருக்கும் தெரியும். அதாங்க, அ. உ. பு. பதிவாளர்!

ரமா யார்? அ. உ. பு. பதிவாளர் ரஞ்ஜனியின் அக்கா. என்னைவிட 3 வயது மூத்தவள்.

என்னைவிட புத்திசாலி. எல்லாவிதத்திலும் என்னைவிட சிறந்தவள். மிக நன்றாகப் பாடுவாள்.

சின்ன வயதில் அவளுடன் நான் எப்பவுமே எல்லாவற்றிற்கும் போட்டி போடுவேன். அவள் திருமணம் ஆகிப் போகும் வரையிலும் இது தொடர்ந்தது.

கோலம் போடுவதில் வல்லவள். புள்ளிக் கோலங்கள் அனாயாசமாகப் போடுவாள். எனக்கு வராத பல கலைகளில் இதுவும் ஒன்று. நான் போடும் கோலங்கள் மாடர்ன் ஆர்ட் வகையை சார்ந்தவை. மிகுந்த பொறுமையுடன் புள்ளிகள் வைத்து அவள் கோலத்தை போடுவதை காணக் கண் கோடி வேண்டும்.

‘நீ புள்ளி வைத்துப் போடும் கோலத்தை நான் புள்ளி இல்லாமலேயே போடுவேன்’ என்று பல தடவை சவால் விட்டு தோற்றவள் நான்.

வெள்ளிக்கிழமைகளில் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து  கூடத்தை அடைத்துக் கோலம் போடுவாள், பாருங்கள்! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்.

கோலத்திற்கு அடுத்தபடியாக இப்போது அவள் விரும்பிச் செய்வது ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பது.

திருமணம் ஆவதற்கு முன் சுருக்கெழுத்து.

வானொலியில் வரும் ஆங்கில செய்திகளை கேட்டு சுருக்கெழுத்தில்  எழுதிக் கொண்டே இருப்பாள். சுருக்கெழுத்தில், சுருக்கெழுத்தாளர் எழுதும் ஸ்ட்ரோக்ஸ் (strokes) ரொம்ப முக்கியம். அதை வைத்துதான் எழுதிய விஷயத்தை ஆங்கிலத்தில் transcribe செய்ய வேண்டும். அக்காவின் ஸ்ட்ரோக்ஸ் perfect ஆக இருக்கும். நான் எப்போதும் போல ‘சமாளி’ தான்!

அவளுக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ஆபீஸிற்கு அப்பா போன் செய்திருந்தார். ‘அக்காவை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறோம். முடிந்தால் லீவு சொல்லி விட்டு வா’ என்று.

எனக்கு ஆபீஸ் போவதை விட லீவு போடுவது பிடித்தமான விஷயம் ஆயிற்றே! உடனே லீவு சொல்லிவிட்டுப் பறந்தேன்.

இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. அம்மா அப்போதுதான் அக்காவிற்கு காபி கலந்து எடுத்துப் போகலாம் என்று வீட்டிற்கு வந்திருந்தாள். ‘கொஞ்சம் போய் அவள் பக்கத்தில் இரு’ என்றாள்.

நான் உள்ளே நுழையவும் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு ஆயா வெளியே வந்து ‘இத பாரு, உங்க அக்கா குழந்தை’ என்று சொல்லிய படியே நல்ல ரோஸ் கலரில் ஒரு பஞ்சு உருண்டையை என் கையில் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டேன்.

‘முதன்முதலில் நான் தான் உன்னைப் பார்த்தேன்; நான்தான் எடுத்துக் கொண்டேன்’ என்று (அதிலும் போட்டி!) இன்றும் என் அக்காவின் பிள்ளை சம்பத்குமாரனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை அவன் தான் என் முதல் பிள்ளை. அந்த வாத்சல்யம் இன்னும் குறைய வில்லை. அவனுக்கு மட்டுமில்லை – அவனுடைய இரு குழந்தைகளுக்கும் – (ஷ்ரேயா, மேக்னா)   நான் சித்தி தான்! இருவரையும் என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்து விட்டார். அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. அடுத்த வருடம் என் அக்காவும் அத்திம்பேரும் எங்களை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விருந்து கொடுத்தனர்.

எனக்கு பூச்சூட்டல் செய்து, சீமந்தத்திற்கு சீர்கள் கொண்டு வந்து வைத்து, தலைப் பிரசவத்திற்கும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனாள் அம்மாவாக இருந்து.

எங்கள் அத்திம்பேர் சின்ன வயதில் பரமபதித்தது எங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

தைரியமாக தனக்கு நேர்ந்ததை எதிர் கொண்டு தனி ஒருவளாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள். அம்மாவும் அவளும் அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்து இருக்கிறார்கள். நாலாயிர திவ்யப்பிரபந்தம் அத்தனையும் அத்துப்படி.

கண்களில் நீர் தளும்பப் பெருமாளை அலுக்காமல் சலிக்காமல் சேவிப்பாள்.

எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.

அவளுடன் கொண்டாடிய தலை தீபாவளி நினைவுகளுடன்………

இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ‘திவ்ய தம்பதியரின் தீபாவளி’ என்ற பதிவின் தொடுப்பை  இணைத்திருக்கிறார். அருமையான புகைப்படங்கள். தீபாவளித் திருநாளுக்கு முன்பாக திவ்ய தம்பதியரை சேவித்து ஆனந்தப் படுவோம்!

 

நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி

ரமாவும் ரஞ்சனியும்!” இல் 39 கருத்துகள் உள்ளன

 1. வணக்கம்
  அம்மா,

  உங்களின் கடந்த கால நினைவுகளை மிக அழகாக துள்ளியமான மொழி நடையில் செம்மையுற செப்பி விட்டிர்கள் உங்கள் இருவருக்கும் ஒரு போட்டிதான் இருந்தது ,இதனால் என்னால் செய்யமுடியும் ,என்னால் செய்யமுடியும் என்ற தன் நம்பிக்கை உயர்ந்தது,அந்த
  தன்நம்பிக்கைதான் இன்றும் எழுத்து துறையிலும் கானமுடிகிறது,படைப்பு நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள் அம்மா,தொடருங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. தங்களுக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.

 3. உங்களுடைய இந்த இணைப்பை பார்த்தேன்….ரசித்தேன். மெய்மறந்து அரங்கனை சேவித்தேன்.

  கிடைத்தற்கரிய புகைப்படங்கள்!

  என் எழுத்துக்களைப் படிக்க வரும் எல்லோருக்கும் திவ்ய தம்பதியினரின் சேவையும் கிடைக்கட்டும் என்று என் கட்டுரையிலேயே இந்த இணைப்பை கொடுக்கிறேன்….உங்கள் அனுமதியுடன்!

 4. பதிவை மாத்திரம் அல்ல. உன் பின்னூட்ட பதில்களையும் படித்துவிட்டு கண்ணில் வழிந்த ஜலத்தைத் துடைச்சிண்டு
  நல்ல பெண்மணி,மிக நல்ல பெண்மணி என்று நினைத்துக் கொண்டேன்.

 5. இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ‘திவ்ய தம்பதியரின் தீபாவளி’ என்ற பதிவின் தொடுப்பை இணைத்திருக்கிறார். அருமையான புகைப்படங்கள். தீபாவளித் திருநாளுக்கு முன்பாக திவ்ய தம்பதியரை சேவித்து ஆனந்தப் படுவோம்!

  நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி//

  எமது பதிவை இணைத்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

  இனிய தீபாவளி வாழ்த்துகள் !!

 6. அன்பான அக்கா உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பொதுவாகவே அக்கா தங்கைகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவுதான். பெரிய அக்காவாக இருத்தால் , எத்தனையோ பொறுப்பு வேறே.

  ஆனால் சித்தியாக இருப்பதில் மிக சுகம். மருமான்களும் மருமாக்களும், ரொம்ப ஸ்வாதீனம் தான். சித்தீன்னு கூப்பிட்டாலே … மனம் நிறைகிறது.

  என்ஜாய். தீபாவளி வாழ்த்துக்கள்.

  1. ரொம்ப சிறப்பாக சொல்லிவிட்டீர்கள் பட்டு!

   என் அக்கா பிள்ளைக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும் அவன் எனக்கு இன்னும் சம்பத் குட்டி தான்!

 7. தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா!! இப்படிப்பட்ட சகோதரி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!!
  நானும் ஒரு சித்தியாக இருப்பதால் உங்கள் முதல் குழந்தை பாசத்தை உணர முடிகிறது!!

  1. வா சமீரா!

   நீயும் ஒரு சித்தியா? வாழ்த்துக்கள். நமது பகிரப்படாத அன்பு நம் அக்காவின் முதல் குழந்தைக்குக் கிடைக்கிறது, இல்லையா?

   உனக்கும் உன் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  1. நேற்றைக்கு இந்தப் பதிவைப் படித்து விட்டு, எத்தனை நன்றாக எழுதி இருகிறாய் என்று நெகிழ்ந்து போய் விட்டாள் என் அக்கா!

   நன்றி ஆதி!

 8. //‘நீ புள்ளி வைத்துப் போடும் கோலத்தை நான் புள்ளி இல்லாமலேயே போடுவேன்’ என்று பல தடவை சவால் விட்டு தோற்றவள் நான்.//

  நம் பெண்களில் பலர் புள்ளி வைத்து, கோலப்பொடியாலும், இழை கோல மாவாலும், அழகாக மிகவும் அழகாக, அனாயாசமாக, எந்த ஒரு அளவுகோலும் இல்லாமல், கண் அளவாக நெளிநெளியாக, ஸ்பீடாக, கோலம் போடும் கலை என்னையே மிகவும் அதிசயிக்க வைத்ததுண்டு. பேப்பரில் நாம் வரையும் ஓவியத்திற்கும், தரையில் அதுவும் கிராமத்தின் மேடு பள்ளங்களுடன் கூடிய மண் தரையில் போடுவதற்கும் நிறைய வித்யாசம் உண்டு. பாராட்டப்பட வேண்டிய கலை தான். .

  //வெள்ளிக்கிழமைகளில் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து கூடத்தை அடைத்துக் கோலம் போடுவாள், பாருங்கள்! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்.//

  நான் இவ்வாறு அழகாகக் கோலம் போடுபவர்களை வியந்து பார்த்து, உற்சாகப்படுத்தி பாராட்டுவதும், அவற்றை உடனே போட்டோ எடுப்பதும் உண்டு. அதுவும் இழைகோலம் செம்மண் இட்டு போடுவார்களே, அவை காய்ந்தவுடன், எவ்வளவு அழகாகக் கண்ணைப்பறிப்பதாக இருக்கும்.!

  >>>>>>>>>

 9. //நான் உள்ளே நுழையவும் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு ஆயா வெளியே வந்து ‘இத பாரு, உங்க அக்கா குழந்தை’ என்று சொல்லிய படியே நல்ல ரோஸ் கலரில் ஒரு பஞ்சு உருண்டையை என் கையில் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டேன்.//

  இதுபோன்ற ரோஜாக்குவியல் போன்ற புத்தம் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளை கையில் வாங்கிக்கொள்ள ஓர் தனி அனுபவம் வேண்டும். எனக்கு அந்த சுகானுபவம் நிறையவே உண்டு. பின் தலைக்கும், கழுத்துக்கும், முதுகுக்குமாக நம் கையை வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்.

  சில கண்களைத் திறந்து திறந்து மூடும். சில சிரிக்கும். சில அழும். சில கொட்டாவி விடும். சில சோம்பல் முறிக்கும். சில தூங்கும். சில வாயில் விரல் போட்டுக்கொள்ளும். மிகவும் வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கும்.

  உரிச்ச வேர்க்கடலையில் உள்ளே உள்ள பச்சை நிலக்கடலை போன்ற நிறத்தில் இருக்கும். கைவிரல்களெல்லாம், வாழைப்பூவின் கடைசி மொட்டுப்பகுதியில் உள்ள, குட்டிக்குட்டி வாழைப்பூக்கள் போலல்லவா இருக்கும். ;)))))

  1. //உரிச்ச வேர்க்கடலையில் உள்ளே உள்ள பச்சை நிலக்கடலை போன்ற நிறத்தில் இருக்கும். கைவிரல்களெல்லாம், வாழைப்பூவின் கடைசி மொட்டுப்பகுதியில் உள்ள, குட்டிக்குட்டி வாழைப்பூக்கள் போலல்லவா இருக்கும்//

   மிக அழகான உதாரணம்!

   திரும்பத்திரும்பப் படித்து ரசித்தேன்.

 10. //தைரியமாக தனக்கு நேர்ந்ததை எதிர் கொண்டு தனி ஒருவளாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள். அம்மாவும் அவளும் அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்து இருக்கிறார்கள். நாலாயிர திவ்யப்பிரபந்தம் அத்தனையும் அத்துப்படி.

  கண்களில் நீர் தளும்பப் பெருமாளை அலுக்காமல் சலிக்காமல் சேவிப்பாள்.

  எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.

  அவளுடன் கொண்டாடிய தலை தீபாவளி நினைவுகளுடன்………//

  தங்களின் அக்காவைப்பற்றியும், அவர்களுக்கும் தங்களுக்கும் உள்ள பாசப்பிணைப்பினைப்பற்றியும் வெகு அழகாக எழுதி முடித்துள்ளீர்கள்.

  இத்தகைய அன்புத்தங்கையை அடைந்த அவர்களும், தாய் போன்று உங்களிடம் பாசம் செலுத்திவரும் அவர்களும், உண்மையிலேயே மிகவும் கொடுத்து வைத்தவர்களே.

  என் மீது மிகுந்த பாசம் கொண்ட என் பெரிய அக்கா நினைவுகளும் எனக்கு வந்தது.

  தங்களுக்கும் தங்கள் அக்காவுக்கும் பாராட்டுக்கள்.
  மனமார்ந்த வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன்
  vgk

 11. ”திவ்ய தம்பதியரின் தீபாவளி”
  என்ற பதிவின் இணைப்பினைக்
  கொடுத்து படிக்கச்செய்தது ……..
  தீபாவளி போனஸ் கிடைத்தது போல
  மகிழ்ச்சியளிக்கிறது. ;)))))

  அதற்காக தங்களுக்கும், அந்தப்பதிவை
  எழுதி தங்களுடன் பகிர்ந்து கொண்டவர்களுக்கும்
  நன்றியோ நன்றிகள்.

 12. பின்னூட்டம் எழுத வந்தால் உங்கள் முத்திரை பாதிக்காமல் போவதே இல்லை.

  என் பதிவை விட உங்கள் பின்னூட்டத்திற்கு அதிக ரசிகர்கள்!

  நன்றி!

 13. நான் வலிகளை அதிகம் அனுபவித்தவன் அல்ல. காரணம், அனைத்தையும் அப்பா,அம்மா, அக்கா பகிர்ந்துகொண்டார்கள்.
  தங்கள் பதிவினை படிக்கும் போது அதன் வாசம் மேலும் கூடுகிறது.

  கண்களில் ஆனந்த கண்ணீருடன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s