‘அத்தே! நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்…!’

‘எனக்கு தொலைக்காட்சியில் விளம்பர இடைவெளிதான் பிடிக்கும்….’

‘என்னங்க! இப்படி சொல்லுறீங்க?’

‘அப்பத்தானே என் பெண்டாட்டி எனக்கு சாப்பாட்டு போடுறா….’

பலமுறை கேட்ட ஜோக்.

பண்டிகை சமயங்களில் முழு சமையலையே முடித்து விடலாம் – விளம்பர இடைவெளிகளில்!

அலுப்புத் தட்டும் விளம்பரங்கள்!

இன்னொரு விஷயத்திற்காகவும் நான் விளம்பரத்திற்கு விரோதி. இந்த சானலில் விளம்பரம் என்று அடுத்த அடுத்த சானல்களுக்குப் போய், முதலில் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி எதுவென்று மறந்துவிடும் அல்லது முடிந்து விடும்!

இப்போதெல்லாம் ரிமோட் என் கையில் இருந்தால்தான் தொலைக்காட்சி பார்ப்பது என்று தீர்மானம் செய்து விட்டேன்.

காலை 6.30 (ஸ்ரீ ராமபிரான் கதையமுதம்)  மாலை 6.30 (ஸ்ரீ கண்ணபிரான் கதையமுதம்)  இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் போது மட்டும் தான் எனக்கு ரிமோட் வைத்துக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். அதாவது ரிமோட்டினால் எனக்கு பயன் ஏதும் இல்லாத போது!

ஓர் விஷயத்திற்கு பொதிகை தொலைக்காட்சியைப் பாராட்ட வேண்டும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் இடையில் விளம்பரங்கள் கிடையாது. மிகப் பெரிய ஆசுவாசம்!

இந்த நிகழ்ச்சிகள்  ஆரம்பிப்பதற்கு முன் வரும்  விளம்பரத்தின் வார்த்தைகள்தான் இந்தப் பதிவின் தலைப்பு.

இதோ முழு விளம்பரம்:

ஒரு பெண் வேகவேகமாக பாத்திரம் துலக்குகிறாள்; துணி துவைத்து காயப் போடுகிறாள்; வீட்டைக் கூட்டுகிறாள்; ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் மாமியாரின் கடுகடு பார்வை அவளின் ஒவ்வொரு அசைவையும் தொடர்கிறது.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு ‘அத்தே! நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்…!’ என்கிறாள்.

‘ஸ்கூலுக்கா? கல்யாணம் கட்டிக்கிட்டு வரச்சே என்னமோ சொன்ன, படிச்சிருக்கேன்னுட்டு….?’

தலையை ஒரு நொடிப்பு நொடித்து அத்தை கேட்கிறாள்.

மருமகள் ஒரு சிறிய புன்சிரிப்புடன் பதிலளிக்கிறாள்: ‘அட அத்தே! நா பார்ம் ஸ்கூலுக்குப் போறேன்….விவசாயத்துல புதுசு புதுசா கத்துக்க……’

உடனே விவசாயிகளுக்காக பார்ம் ஸ்கூலில் என்னென்ன சொல்லித் தருகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். முடிந்தவுடன்….

‘நீங்களும் வாங்க அத்தே! குறைந்த செலவில்……’ மருமகள் ஆரம்பிக்க ‘நிறைந்த லாபம்…’ என்று ஒரு புன்னகையுடன் அத்தை முடிக்கிறார்.

இன்னொரு விளம்பரம்:

ஒரு விவசாயி. கைபேசியில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டே வருவார். அவரது மனைவி பார்த்துக் கொண்டே இருப்பார்.

ஒரு வழியாக பேசி முடித்து விட்டு மனைவி பக்கத்தில் வந்து அமருவார்.

‘இவ்வளவு நேரம் சிரிச்சு சிரிச்சு யார் கிட்ட பேசிகிட்டு இருந்தீங்க?’

‘விவசாயிகள் கால் சென்டர்ல பயிர் பாதுகாப்பு பத்தி பேசிட்டு இருந்தேன்…’

‘காலேல சரி, மதியம் கூடவா…..?

‘ஆமா….விவசாயிகள் கால் சென்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்……’

‘ஞாயிற்றுக் கிழமை கூடவா?’

‘ஆமா, வருஷம் 365 நாளும் உண்டு….’

‘அப்படியா…? இத்தனை செலவு யார் கொடுப்பாங்க?’

‘அரசாங்கம் தான்………..ஆமா…நீ என்ன நெனச்சே…..?

‘நான் என்னமோன்னு நெனேச்சேன்……’ மனைவியில் குரலில் ஒரு நிம்மதி.

கணவன் மனைவி இருவரும் வாய் விட்டு சிரிப்பார்கள்.

விவசாயிகள் கால் சென்டரில் இருப்பவர்களுடன் சிரித்து சிரித்து (!!) பேச முடியுமா என்று தோன்றினாலும் பெரிய பெரிய பிராண்ட் பொருள்களுக்கு காட்டப்படும் விளம்பரங்களின் அசட்டுத் தனங்கள் (நீ பஜ்ஜி சாப்பிடும்மா… ) இதில் மைனஸ்.

மூன்றாவதாக ஒரு சாமியார்: விவசாயிகளுக்கு  பயிர் விளைச்சல் பற்றியும், பாதுகாப்பு பற்றியும் சாமியார் சொல்வதெல்லாம் பலிக்கிறதாம். ஒரு நாள் சாமியாரின் குட்டு வெளிப்பட்டது! (இந்த சமயத்தில் சாமியார் தொலைபேசியில் – விவசாயிகள் கால் சென்டரில் விவரங்கள் கேட்டுக் கொண்டே தன் சாமியார் ‘விக்’ கை எடுப்பார். வாசலில் இரண்டு போலீஸார்கள்!) நல்ல காமெடி!

போலித்தனங்கள் இல்லாமல் வெகு இயற்கையாக அமைந்திருக்கும் இந்த விளம்பரங்கள்.

இதில் நடித்திருப்பவர்கள் வழக்கமான நடிகர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.

ஆண்கள் ஷேவ் செய்வது பெண்களுக்காகவே என்பது போலவும், பெண்களின் சிகப்பழகு கிரீமை எடுத்துக் கொண்டு ஆண் ஓடுவது போலவும், இளம் பெண்களை கைகளைத் தூக்குங்கள் என்று சொல்லுவதும் லெட்ரீன் கம்மோடை வலது கையால் தடவிப் பார்த்து ஆனந்திக்கும் (!?) இல்லத்தரசியும் – விளம்பரம் உருவாக்குபவர்களுக்கு கிரியேட்டிவிட்டி என்பதே இருக்காதோ என்று நினைக்க வைக்கும்.

மருத்துவ மனையில் உடல் முழுக்க கட்டுகளுடன் படுத்திருக்கும் ஒருவரை தூக்கி நாற்காலியில் உட்கார வைத்து விட்டு தொலைக்காட்சி பார்க்கும் இளைஞன், ‘உங்கள் சந்தோஷத்தை திறவுங்கள்’ என்கிறான் கோகோகோலா பாட்டிலைத் திறந்தபடி!

கற்பனையை மூட்டை கட்டிப் போட்டு விட்டு அல்லது கற்பனைக் குதிரையை கன்னாபின்னாவென்று தாறுமாறாக ஓடவிட்டு இந்த விளம்பரங்களை எடுத்து இருப்பார்களோ என்று தோன்றும். (சந்தோஷத்தைத் திறக்க கற்பனையை மூடி விடு!)

இன்னொரு விளம்பரம் வொண்டர் கேக்-கிற்கு வருவது. அதில் வரும் சின்னப்பையன் இப்போது வளர்ந்து திருமணம் ஆகி அப்பா ஆகி இருப்பான். வருடக்கணக்காக அதே சின்னப் பையனையும், அதே ‘அ..ஹ்..ஹஹா…….வொண்டர் கேக் …’ பாடலையும் மாற்றாமல் பயன்படுத்தி வருகிறார்கள். கடைகளில் போய் வொண்டர் கேக் இருக்கிறதா என்று கேட்க பயம்.  எப்போதோ தயார் செய்த விளம்பரம் போல எப்போதோ தயார் செய்த அதே கேக்கைக் கொடுத்தால் என்ன செய்வது என்று!

நான் ரசிக்கும் விளம்பரங்கள் பொதிகை தொலைக்காட்சியில் மட்டுமே வரும்; அதுவும் நான் சொன்ன நேரங்களில் மட்டுமே!

 

 

Advertisements

5 thoughts on “‘அத்தே! நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்…!’

 1. இவ்வளவு எழுத உங்களுக்கு எப்படி முடிகிறது என்று நான் வியந்து கொண்டிருக்க இத்தனை விளம்பரங்களையும் விடாமல் பார்க்கிறீர்கள் என்றும் வியக்கிரென் வாழ்க வளர்க

 2. //பண்டிகை சமயங்களில் முழு சமையலையே முடித்து விடலாம் – விளம்பர இடைவெளிகளில்!//

  haa haa …

  //இன்னொரு விஷயத்திற்காகவும் நான் விளம்பரத்திற்கு விரோதி. இந்த சானலில் விளம்பரம் என்று அடுத்த அடுத்த சானல்களுக்குப் போய், முதலில் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி எதுவென்று மறந்துவிடும் அல்லது முடிந்து விடும்!
  //

  Same Blood

  பொதிகை விளம்பரங்களில் விஷயம் இருக்கும் ஆனால் கவர்ந்திழுக்கும் அந்த கவர்ச்சி இருக்காது …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s