அந்தநாள் முதல் இந்த நாள் வரை…..

ஜெயந்தியை நான் எப்போது சந்தித்தேன்?

நினைவில்லை.

‘உனக்கும் நினைவில்லையா?’ இருவரும் ஆச்சரியப் பட்டோம்.

ஒரே பள்ளியா? இல்லை.

ஒரே அலுவலகத்தில் வேலை செய்தோமா? இல்லை.

ஒரே வீதியில் வீடா? அதுவும் இல்லை.

பின் எப்படி தோழிகளானோம்?

பலத்த யோசனைக்குப் பின் நினைவுக்கு வந்தது. ஒரே பேருந்தில் அலுவலகத்திற்குப் பயணம் செய்திருக்கிறோம். பேருந்து தோழிகள்! அதுவும் சில மாதங்களுக்குத் தான். ஜெயந்தி பிறகு வேறு வேலைக்கு மாறிவிட்டாள்.

ஆனால் எனக்கு திருமணம் ஆகும் வரை நானும் அவளும் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாலை வேளைகளில் சந்தித்திருக்கிறோம். புரசைவாக்கம் டேங்க், எதிரில் இருக்கும் (இப்போது இருக்கிறதா?) அனுமார் சந்நிதி, கங்காதரேஸ்வரர் கோவில் என்று சுற்றிக் கொண்டே இருப்போம்.

எங்களுக்குள் பேச எத்தனையோ. ‘அதென்ன மணிக்கணக்கா பேச்சு?’ என்று இருவர் வீட்டிலும் கோபித்துக் கொள்ளுவதால் இருவரும் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றி சுற்றி வருவோம் – கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு!

பிறகு எனக்குத் திருமணம் ஆகி அசோக் நகர் வந்து விட்டேன். ஜெயந்தியின் தொடர்பும் விட்டுப் போயிற்று. ’79 இல் ஜெயந்தியின் குடும்பம் அசோக் நகரில் இருந்த போஸ்டல் குவார்ட்டர்ஸ் –இல் இருந்தபோது ஒரு முறை சந்தித்தோம். என் பெண்ணுக்கு அப்போது மூன்று வயது.

பிறகு நாங்கள் அண்ணாநகர் வந்து, அங்கிருந்து பெங்களூரு வந்து….ஜெயந்தி நினைவிலிருந்து மறைந்தே போனாள்.

இப்போது எங்கிருந்து வந்தாள் என்று கேட்கிறீர்களா?

என் ப்ளாகின் மூலம்தான்! ஆச்சரியம் இல்லையா?

எனது ப்ளாகில் ஒரு முறை திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களின் மறைவின் பின்னணியில், அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ‘கடுகு’ என்கிற திரு ரங்கநாதன் அவர்களும் அவரது கடுகு தாளிப்பு என்ற வலைப்பூவில் திரு ராகிரா பற்றி எழுதி இருந்தார். அதை அவரது தளத்தில் படித்த நான் ‘நானும் திரு ராகிரா பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்’ என்று என் வலைதளத்தின் இணைப்பையும் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன்.

ஜெயந்தி திரு ‘கடுகு’ அவர்களின் எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிப்பாள். அவள் எனது பின்னூட்டத்தைப்  படித்து விட்டு என் பதிவைப் படித்திருக்கிறாள். எனது அழகான(!!!)  புகைப் படத்தையும் பார்த்துவிட்டு நீ புரசைவாக்கத்தில் இருந்த ரஞ்சனி தானே என்று கேட்டு எங்கள் ஊர் சுற்றலையும் குறிப்பிட்டிருந்தாள்.

பல வருடங்களுக்குப் பிறகு தோழிகள் ஒருவரையொருவர் மறுபடி கண்டுகொண்டோம் கண்டு கொண்டோம்…..!!!

போன மாதம் சென்னை சென்ற போது ஒரே ஒரு நிகழ்வு:  ஜெயந்தியை சந்திப்பது மட்டும்தான்!

காலை சதாப்தி வண்டியில் கிளம்பினோம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே வருவதாக ஜெயந்தி சொல்லியிருந்தாள். நான் தான் வழக்கம்போல CCC2 கோச் என்பதற்கு பதிலாக CC1 என்று சொதப்பி இருந்தேன். பாவம் ஜெயந்தி, C1 கோச் முழுவதும் தேடி என்னைக் காணாமல் என்னவோ ஏதோ, நான் ஏன் வரவில்லை என்று பதறி எனக்கு போன் மேல் போன் செய்து….தவித்துக் கொண்டிருக்க,

நான் நிதானமாக அடுத்த பெட்டியிலிருந்து இறங்கி, யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார்கள் என்று தொலைபேசியில் கண்ணையும் கருத்தையும் வைத்துக் கொண்டு நடக்க….

‘ரஞ்சனி……’ என்று ஓடி வந்தவள் என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

‘உங்களைக் காணோமென்று ஆடிப் போய்விட்டாள்’ என்றார் ஜெயந்தியின் துணைவர் திரு ஸ்ரீதரன்.

‘ஸாரி, ஸாரி’ என்று அசடு வழிந்தேன். ஜெயந்தி என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

‘நீங்கள் வரப்போவது அமெரிக்கா முதல் ஆஸ்திரியா வரை தெரியும்…’

ஜெயந்தியின் பிள்ளைகள் இருவரும் இந்த இரண்டு ஊர்களில் இருந்தனர்.

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ?’ என்பார்கள். ஆனால் நாங்கள் இருவரும் விடாமல் – மூச்சு விடாமல் பேசினோம். வீடு போய் சேரும்வரை, சேர்ந்த பின், சாப்பிடும்போது, பேசிக் கொண்டே, பேசிக் கொண்டே……!

ஜெயந்தியின் அம்மா பக்கத்திலேயே இருந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘என்ன ரஞ்சனி, எத்தனை குழந்தைகள், எல்லோருக்கும், கல்யாணம் ஆயிற்றா, பேரன், பேத்திகள் இருக்கிறார்களா…..?’ என்றார்.

‘ஐயோ! மாமி அதையெல்லாம் கேட்காதீங்கோ! நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்றேன்.

எவ்வளவுதான் இந்த நாளின் நிஜம் இருவருக்கும் தெரிந்தபோதும், மறுபடி மறுபடி பழைய நினைவுகளிலேயே இருவரும் மூழ்க ஆசைப்பட்டோம்.

‘குட்டி குட்டியா நகம் வளர்த்துப்பியே என்ன ஆச்சு?’ என்றாள் ஜெயந்தி.

‘பேருந்தில் நம்முடன் கூட ‘குட்டி ப்ளஷ்டோர்’ அலுவலகத்தில் வேலை செய்யும் சௌபாக்யவதி என்ற ஒரு பெண் வருவாள் நினைவிருக்கிறதா?’- நான்.

‘ஓ!…’

‘நான் அவளிடம் உனக்கு சௌபாக்யவதி என்று பெயர் வைத்திருக்கிறார்களே…கல்யாணப் பத்திரிகையில் சௌபாக்யவதி சௌபாக்யவதிக்கு என்று போடுவார்களா என்று ஒரு நாள் கேட்டேன்….!’

இருவரும் பெரிதாகச் சிரித்தோம்….எங்கள் துணைவர்கள் இருவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு!

அந்தநாள் நடந்த சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் நினைவலைகளில் மோதி மோதி வந்தன.

அரவிந்த அன்னையின் பக்தையாகி விட்டாள் ஜெயந்தி. ‘பிரார்த்தனை நேரத்தில் ஒருமுறை கூட உன் நினைவு வந்ததில்லை ரஞ்சனி. ஆனாலும் நீயும் நானும் மறுபடி சந்திக்க வேண்டும் என்று அன்னை நினைத்திருந்தாள் போலிருக்கிறது. அதனால் தான் என் உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் படி ‘கடுகு தாளிப்பு’ படிக்க ஆரம்பித்தவள் அதன் மூலமே உன்னையும் மறுபடியும் சந்தித்தேன். இல்லையானால் நான் எங்கே நீ எங்கே?’

அன்னை சேர்த்து வைத்தாளோ? இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ? எப்படியானால் என்ன? அந்தநாள் முதல் இந்த நாள் வரை எங்கள் நட்பு மாறவில்லை என்பதை ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்திருந்த விதம் சொல்லியது.

Advertisements

33 thoughts on “அந்தநாள் முதல் இந்த நாள் வரை…..

 1. //அன்னை சேர்த்து வைத்தாளோ? இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ? எப்படியானால் என்ன? //

  அதானே! எப்படியோ பிரிந்தவர்கள் கூடினீர்களே!! மிகவும் ஆச்சர்யம் தான்!!!

  >>>>>>

 2. //கல்யாணப் பத்திரிகையில் சௌபாக்யவதி சௌபாக்யவதிக்கு என்று போடுவார்களா என்று ஒரு நாள் கேட்டேன்….!’//

  ;))))) செளபாக்யவதி என்ற பெயரைக்கேட்டாலோ உச்சரித்தலோ மிகவும் சந்தோஷமாகவே உள்ளது, மேடம். நல்லதொரு பெயர். கல்யாணப்பத்திரிகையில் இரண்டுமுறை போட வேண்டியிருக்கும் தான்.

  >>>>>>>

 3. //நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ //

  ஆம். நாம் கடைசியாகப்பழகிய நினைவுகள் தான், மீண்டும் சந்திக்கும் போது நமக்குள் ஏற்படும்.

  அனைத்து நிகழ்வுகளையும் அமர்க்களமாக உங்களுக்கே உரித்தான பாணியில் வெகு அழகாக எழுதியுள்ளீர்கள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  VGK

 4. ரஞ்ஜனி,

  பிரிந்தவர் மீண்டும் கூடிய சந்தோஷம் ஒவ்வொரு எழுத்திலும் வெளிப்படுகிறது.

  “ஐயோ! மாமி அதையெல்லாம் கேட்காதீங்கோ! நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்றேன்”_____ இதைப் படித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.எப்படிங்க இப்படியெல்லாம் காமெடியா எழுதறீங்க!

  “அன்னை சேர்த்து வைத்தாளோ? இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ?” ____ இந்த வரிகளுமே ரஞ்ஜனியுடைய பதிவு என நிரூபித்துவிட்டது.

  உங்களுக்கு ஒரு “சௌபாக்கியவதி” என்றால் எனக்கு ஒரு “திருமதி”யாக்கும்.

  1. ஜயந்தியின் அம்மாவுக்கும் நான் இப்படி சொன்னது ரொம்பவும் சிரிப்பை வரவழைத்தது!

   உங்கள் ‘திருமதி’ பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன்!

   கடுகு ஸாருக்கு நன்றி சொல்ல வேண்டும்
   தோழியை மறுபடி பெற்றதற்கும், ஒரு பதிவு எழுத சந்தர்ப்பம் உருவாக்கிக் கொடுத்ததற்கும்!

   நன்றி சித்ரா

 5. சுவாரசியமான பதிவு!

  ஆனால் தலைப்பே சின்ன பிழைபோல் தெரிகிறது….. கவனிக்கவும்…..
  சரிதான் என்றால் பொறுத்தருளவும்.
  என் நண்பர்களும் சூழ்நிலைகாரணமாக பிரிந்திருக்கிறார்கள்.
  அவர்களையும் எந்நாளாவது சந்தித்தால் பகிர்கிறேன்….
  நன்றி,

  தமிழ்

  1. பிழைதான் தமிழ்!
   இரவு மிகவும் தாமதமாக பதிவேற்றியதில் சரியாக கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.
   சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
   வருகைக்கும், கருத்துக்கும் இன்னொரு நன்றி!

 6. பிளாக் பிரிந்த பல நண்பர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது. இதற்கு முன் படித்த சில தளங்களிலும் இதைப் பார்த்திருக்கிறேன். இப்போது உங்கள் தளத்திலும்.

  பல நாட்கள் கழித்து நண்பரைப் பார்த்தால் கிடைக்கும் ஆனந்தம் அளவிடமுடியாதது தான். நகைச்சுவையோடு சொல்லிப்போன விதம் அழகு. ரசித்துப் படித்தேன்.

 7. ஓ!! நீங்க ரொம்ப லக்கிம்மா.. ரொம்ப நாள் அப்புறம் ஏதோ ஒரு வழியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கபெற்றீர்கள்.. நானும் என் கல்லூரி தோழி மற்றும் என்னுடன் சின்ன வயதில் சேர்ந்து சுத்திய ஒருத்தியை தேடி கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம் அம்மா கிடைபர்களா என!!!
  என்ன ஒரு அழகான சந்திப்பு!!!

 8. அந்தநாள் முதல் இந்த நாள் வரை எங்கள் நட்பு மாறவில்லை என்பதை ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்திருந்த விதம் சொல்லியது.

  அழகான கவிதையாய் நட்பூ …மலர்ந்த பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..

 9. படித்து முடித்து எனது பல நண்பிகளையும் நினைவு படுத்திப்பார்த்துக்கொண்டேன் அருமையான நினைவுகள்
  நான் முன்பு எழுதிய விமர்சனம் எங்கு போனதொ தெரியவில்லை

 10. வணக்கம்
  ரஞ்ஜனியம்மா

  கல்லுக்குள் இருந்து ஈரம் கசிவது போல
  உங்கள் மனதில் இருந்து அன்பு பாசம் என்ற ஈரக்கசிவை உங்கள் தோழிமீது வைத்ததை அழகாக சொல்லிவிட்டிர்கள் அருமையான படைப்பு, உங்கள் இருவர் நட்பும் நகமும் சதையுமாக இருக்க வாழத்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 11. புரசைவாக்கம கொஞ்சம் தான் மாறியிருக்கிறது.
  பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ?
  ஆனால் நீங்கள் இருவரும் பேசிக் .
  கொண்டேயிருந்திருக்கிறிர்கள்.
  பழைய நட்பை புதிப்பித்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
  அழகான, நகைச்சுவையான பதிவு.பாராட்டுக்கள்.

  ராஜி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s