காதல் கதை – 1

Longest married couple

காதலுக்கு ஆரம்பம் உண்டு; முடிவு இல்லை என்று ஒரு விளம்பரத்தின் ‘பஞ்ச்’ வரிகள்.

இதற்கு உதாரணமாக வாழ்பவர்கள் திரு கரம், அவரது மனைவி திருமதி கதரி சந்த் இருவரும். நீண்ட காலமாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்பவர்கள் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள்.

திரு கரம் அவர்களுக்கு 107 வயது, அவரது மனைவிக்கு 100 வயது. இந்த ஜோடிக்கு 8 குழந்தைகள்; 28 பேரன் பேத்திகள்! திருமணம் ஆகி 87 வருடங்கள் ஆகின்றன.

இவர்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன? ‘கதரியை எப்படியாவது சிரிக்க வைத்துவிடுவேன். ஜோக்குகள் சொல்லி அவளை சிரிக்க வைப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை ரொமான்ஸ் என்பது வேடிக்கையும், விளையாட்டுமாய் மனைவியை மகிழ்விப்பதுதான்!’ என்கிறார் திரு கரம்.

இவர்கள் சொல்லும் ரொமான்ஸ் ரகசியங்கள்:

எப்போதும் உண்மையாக இருப்பது: திருமண பந்தம் என்பது அதில் இணைந்த இருவரும் ஒருவர்  வாழ்க்கையை இன்னொருவருக்காக உண்மையாய் வாழ்வதுதான். மிகவும் கஷ்டமான சமயங்களிலும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது தான் திருமண பந்தத்தை வலுப்படுத்தும். இருவரும் பொய் சொல்லக் கூடாது. சிலசமயங்களில் ‘அக்கரைப் பச்சை’ என்று தோன்றினாலும் உண்மையில் அக்கரை பச்சையாக இருப்பதில்லை!

 

ஒருவர்மேல் ஒருவர் அக்கறை செலுத்துங்கள்: துணைவருடன் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்பினால், ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொள்ள வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போதும் சரி, நிலைமை சற்று சரியும்போதும் சரி, ஒருவரையொருவர் நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். துணைவருக்காக சமைப்பது, அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது, அவர் மனமுடைந்து போகும்போது நல்ல துணையாக இருந்து அவருக்கு ஆறுதலாகத் தோள் கொடுப்பது என்று எல்லாவற்றிலும்  அக்கறையைக் காட்டுங்கள்.

துணைவரை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்:

யாரிடம் இல்லை குறை? உங்கள் துணைவரை அவரது நிறை குறையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காததை சில சமயங்களில் செய்யக் கூடும். கண்டு கொள்ளாதீர்கள். பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் குறை இல்லையா? குளித்து விட்டு துணிமணிகளை அப்படியே போட்டு விட்டு வரலாம். உங்களுக்குப் பிடிக்காத பாட்டு உங்கள் துணைவருக்குப் பிடிக்கலாம்! அவரது குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவரது குறைகளின் மேல் கோவம் வரலாம். பல ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருக்க வேண்டும் என்றால் இன்னொருவரின் குறையைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகுங்கள். அல்லது அக்குறையை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் குறையே அவருக்கு நிறைவைக் கொடுக்கிறது என்று நம்புங்கள்.

துணைவரின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேளுங்கள்: திருமண பந்தத்தில் மிக முக்கியமானது துணைவர் பேசும்போது உன்னிப்பாக கேட்டுக் கொள்வது. முக்கால்வாசி பிரச்னைகள் வருவது / வளர்வது துணைவர் பேசும்போது காது கொடுத்துக் கேட்காமையால் தான். பேப்பர் படித்துக் கொண்டே, தொலைக் காட்சியில் கண்களை வைத்துக் கொண்டே ‘ஊம்’ கொட்ட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமே பிரச்னை வரும் என்றில்லை. வீட்டிலும் வரும். ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்துக் கேட்டாலே  பாதி சுமை குறைந்தாற்போல இருக்கும்.

சமூக, இன மத ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் மூலம் உங்கள் குழந்தைகளும் இவற்றின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு மரியாதை கொடுங்கள்; அவர் மேல் அக்கறை கொள்ளுங்கள்; அவரது அன்பைப் போற்றுங்கள்; முழுமையாகக் காதலியுங்கள்; அவரது மதிப்பை உணருங்கள்.

உங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே உங்கள் மற்றவரையும் நடத்துங்கள்.

 

காதலர் தினம் – காதல் கதை 2

 

இசைப்பாவில் கேட்டு மகிழ: கண்டேன் கண்டேன்…….

 

 

செல்வ களஞ்சியமே – பகுதி 5

Advertisements

17 thoughts on “காதல் கதை – 1

 1. சொல்லியுள்ள விஷயங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

  அவரவரை அவரவரின் குணாதிசயங்களுடன் [நமக்கு அவை பிடிக்காமலேயே இருந்தாலும் கூட] நிறை குறைகளுடன் கூடவே, நேசிக்கக்கற்றுக்கொண்டு விட்டால், பிரச்சனைகளே ஏற்படாது என்பது உண்மையே.

  இவ்வாறு நம்மை நாமே மாற்றிக்கொள்ள மிகவும் சகிப்புத்தன்மையும், மனப்பக்குவமும் தேவைப்படுகிறது. அது தான் பிரச்சனையே.

  1. வாங்கோ கோபு ஸார்!
   வேர்ட்ப்ரஸ் மேல இருக்குற கோபத்தையெல்லாம் மறந்து பின்னூட்டம் போட வந்ததற்கு நன்றி!

   நீங்கள் சொல்லும் சகிப்புத்தன்மை, மனப் பக்குவம் பெறுவது கஷ்டம்தான். ஆனாலும் நாம் விரும்பும், நம்மை விரும்பும் ஒருவருக்காக இது கூடச் செய்யலைன்னா எப்படி?

 2. திரு கரம், அவரது மனைவி திருமதி கதரி சந்த் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்…

  /// பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை…
  காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை…
  மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை…
  சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை… ///

  இருக்கும் போது யாருடைய மதிப்பும் தெரிவதில்லை… துணைவியிடமே அனுசரித்து, விட்டுக்கொடுத்து, சந்தோசமாக வாழ தெரியாதவர்களால்… மற்றவர்களிடம் எப்படி…? (தனது குழந்தைகள் உட்பட…)

  அதனால் தான் மனிதனின் பிரச்சனைக்கு காரணம் – ‘ஒப்பிட்டுப் பார்த்தல்’ என்று பதிவிட்டேன்…

  /// உங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ… அப்படியே உங்கள் துணைவரையும் நடத்துங்கள்… ///

  நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்… ‘துணைவரையும்’ என்பதற்கு பதில் ‘மற்றவரையும்’ என்று மாற்றுங்கள்… ஏனென்றால், திரு கரம் அவர்கள் பாடுகிறார்கள் :

  உள்ளம் இரண்டும் ஓன்று…
  நம் உருவம் தானே இரண்டு…
  உயிரோவியமே… கண்ணே…
  நீயும் நானும் ஓன்று… (படம் : புதுமைப்பித்தன்)

  நன்றி அம்மா…

 3. வாருங்கள் தனபாலன்!
  மிகவும் அனுபவித்து உங்கள் பின்னூட்டத்தை எழுதி இருக்கிறீர்கள்.

  உங்கள் கருத்துக்களுடன் நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஒத்துப் போகிறேன்.

  நீங்கள் சொன்னபடியே ‘மற்றவரையும்’ என்று மாற்றிவிட்டேன்.
  நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி!

 4. “பேப்பர் படித்துக் கொண்டே, தொலைக் காட்சியில் கண்களை வைத்துக் கொண்டே ‘ஊம்’ கொட்ட வேண்டாம்”
  எனக்கென்றே சொன் மாதிரி இருக்கு.
  இனிக் கவனம் எடுக்கிறேன்.

 5. நமக்கு நாமே மதிப்பெண்கள் கொடுத்துக் கொண்டால் நம்முடைய தகுதி புலப்படும்.. எவ்வளவு அருமையான யோசனைகள். கட்டுபடியாகுமா?முயற்சி செய்து பார்க்கணும்.
  80 வயஸுக்கு மேலேயா? அப்படியெல்லாம் கேட்காதே!
  அவசியமான வழிகள். இப்படியெல்லாம் யோசனை, எங்கிருந்து வருகிரது ?

  1. இந்தமாதிரி யோசனை உங்கள் அனுபவத்திலிருந்து தான் வருகிறது. இந்த வயதில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே , அதுவே பாராட்டப் பட வேண்டியதுதான்!

 6. திரு கரம் தம்பதியினரின் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு ஏற்ற டிப்ஸ் அருமை.

  //பல ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருக்க வேண்டும் என்றால் இன்னொருவரின் குறையைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகுங்கள். அல்லது அக்குறையை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் குறையே அவருக்கு நிறைவைக் கொடுக்கிறது என்று நம்புங்கள்.//

  மிகச்சிறப்பான விஷயம்.
  நல்லதொரு பதிவு, ரஞ்சனி மேடம். பகிர்வுக்கு நன்றி.

  1. வாருங்கள் ரமா!
   எல்லோருக்குமே இந்த டிப் தான் ரொம்பவும் பிடித்திருக்கிறது!

   இதுதான் திருமண வாழ்வின் எஸ்சென்ஸ் என்று தோன்றுகிறது இல்லையா?

   நன்றி ரமா!

 7. நம் வீரமெல்லாம் வீட்டில் துணையுடன் தான் இருக்கும்.
  வெளியில் நிறைய பேர் எலியாகத் தான் இருப்பார்கள்.
  வீட்டில், எலியாக இருக்கச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் துணைக்காக கொஞ்சமே கொஞ்சம் சகிப்புத் தன்மையுடன் இருந்தால் நிறைய தம்பதிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வாய்ப்புண்டு .
  இதை அருமையாக திரு . கரம் தம்பதியினரை வைத்து சொல்லிவிட்டீர்கள்.

 8. சகிப்புத்தன்மை தான் பெரும்பாலும் வருவதில்லை, இல்லையா ராஜி! வயதாக ஆக, ‘நான்’ தான் பெரியவன் / பெரியவள் என்ற எண்ணமே மேலோங்குகிறது.
  ‘நம் வீரமெல்லாம் வீட்டில் துணையுடன் தான் இருக்கும்’ நன்றாகச் சொன்னீர்கள்!

  வருகைக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 9. உங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே உங்கள் மற்றவரையும் நடத்துங்கள்.

  நீண்ட காலமாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்பவர்கள் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் அருமையாக வாழ்க்கை ரகசியங்களை பகிர்ந்திருக்கிறார்கள்…

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

 10. அருமையான பதிவு. வாசிக்கனவே மகிழ்வாக உள்ளது.
  அனைத்துக் கருத்தகளும் கூட ரசிக்கும் விதத்தில் உள்ளது சகோதரி.
  புத்திமதிகளும் அருமை. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s