Monthly Archives: மார்ச் 2013

இன்று சிட்டுக்குருவிகள் தினம்

ranjani narayanan

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்.

இந்தச் சிட்டுக் குருவிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. கூட்டங்கூட்டமாக வசிப்பவை. மிகுந்த இரைச்சல் போடுபவை; நாம் சாப்பிடும் சாப்பாடோ, மற்ற தின்பண்டங்களோ துளி கீழே சிந்தினாலும் எங்கிருந்தோ ‘சிட்டா’ க பறந்து வந்து தன் அலகினால் கொத்தி எடுத்துக் கொண்டு ‘சிட்டா’ க பறந்து போவதால்தான் இதற்கு சிட்டுக் குருவி என்று பெயர் வைத்தார்களோ?

வீட்டு முற்றங்கள் தான் இவைகளின் ராஜ்ஜியம். இவை குதித்துக் குதித்து வரும் அழகே தனி.

இவைகளின் இரைச்சல் தாங்காமல் எவ்வளவு முறை விரட்டினாலும் திரும்பவும் வெகு சகஜமாக  வீட்டுக்குள் நிழைந்து வீட்டு உத்தரங்களிலும், சுவர்களில் இருக்கும் சின்னச் சின்னப் பொந்துகளிலும் கூடு கட்டுபவை. குருவி கூடு கட்டுவது குடும்பத்திற்கு நல்லது என்று கருதப் பட்டதால் குருவிக் கூட்டைக் கலைக்க மாட்டார்கள்.

இந்தக் குருவிகள் பெரும்பாலும் தானியத்தைத் தின்று வாழ்பவை. பழங்கள், கொட்டைகள், குப்பைகள், பிரட் துண்டுகள் என்று கிடைத்ததை தின்று வாழக் கற்றவை. இந்த குணமே இவை உலகெங்கிலும் காணக் கிடைப்பதற்குக் காரணம். நகரப் புறங்களில் வீடுகளிலும், கிராமப் புறங்களில் வயல் வெளிகளிலும், தானியக் கிடங்குகளின் அருகிலும் வாழக் கூடியவை.

இவைகளின் அபரிமிதமான எண்ணிக்கை, எந்தச் சூழலிலும் வாழும் பாங்கு, மனிதர்களைக் கண்டு பயப்படாத தன்மை இவற்றினாலேயே சிட்டுக்குருவிகள் பறவை இனங்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. இவைகளைப் பற்றிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? இதுவரை இவைகளைப் பற்றி…

View original post 343 more words

ஆரோக்கியத்திற்கு தேன் – இலவங்கப் பட்டை

“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்” என்றாள் அவ்வைப் பாட்டி.

தேன் ஒரு இயற்கை உணவு. அவ்வைப் பாட்டி காலத்திலிருந்தே தேன் ஒரு அரிய விஷயமாக எல்லோரும் அதனைப் பற்றி கட்டாயம் அறிய வேண்டிய விஷயமாக  இருந்திருக்கிறது. அக்காரணம் கொண்டே அவ்வைப் பாட்டி கடவுளுக்கு தேனை கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள்.

தேன் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாதது. சில சமயங்களில் நீண்ட நாட்கள் உபயோகப் படாமல் இருந்தால் படிகங்கள் உருவாகி விடும். அப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்து தேன் பாட்டிலின் மூடியை சிறிது திறந்து விட்டு பாட்டிலை சூடு தண்ணீருக்குள் வைத்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். தேன் மறுபடி உருகி பழைய நிலைக்குத் திரும்பும். தேனை ஒருபோதும் கொதிக்க வைக்கக் கூடாது. மைக்ரோ வேவ் அவனிலும் வைக்கக் கூடாது. இப்படி செய்வது தேனில் இருக்கும் இயற்கையான உயிர் சத்தை கொன்று விடும்.

வெறும் தேன் மட்டுமல்லாமல் அதனுடன் இலவங்கப் பட்டை சேர்ப்பதால் பல நோய்கள் குணமாகும் என்று மருத்துவர்களும் அறிவியலாளர்களும் கூறுகிறார்கள். இந்தக் கலவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் சொல்லுகிறார்கள்.
தேனின் இயற்கையான இனிப்பு, சரியான அளவில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கூட கெடுதல் செய்யாது.

இலவங்க பட்டையை நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தேன் ஒரு பாட்டில் வீட்டில் எப்போதும் இருக்கட்டும்.
இனி இவற்றை வைத்துக் கொண்டு என்ன என்ன நோய்களை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்:

இருதய நோய்:
தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக்  குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு  நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால்  மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். . வயது ஏற ஏற நம் இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சில மருத்துவ மனைகளில் சில நோயாளிகளுக்கு இந்த தேன், லவங்கப் பட்டை சேர்ந்த உணவைக் கொடுத்து ஆராய்ந்ததில் இம்முடிவு தெரிந்தது.

மூட்டு நோய்:
மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.

சிறுநீர் பை தொற்று நோய்:
சற்று வெது வெதுப்பான நீரில் இரண்டு மேசைக் கரண்டி இலவங்கப் பட்டை பொடி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட நோய் கிருமிகள் அழியும்.

கொலஸ்ட்ரால்:
16 அவுன்ஸ் டீ தண்ணீருடன் 2 மேசைக் கரண்டி தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு இறங்கிவிடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்திரவுகள் குறையும்.

ஜலதோஷம்:
ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.

வயிற்றுத் தொல்லை:
வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும் இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து.

வாயுத் தொல்லை:
ஜப்பான் நாட்டில் நடந்த ஆய்வு மூலம் இலவங்க பட்டை பொடியை தேனுடன் குழைத்து  சாப்பிட வாயுத் தொல்லை தீரும் எனத் தெரிய வந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி:
தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.

அஜீரணக் கோளாறு:
இரண்டு மேசைக் கரண்டி தேனை எடுத்து அதன் மேல் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவி சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறும், அசிடிடியும் குறையும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் இந்தப் பொடியை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை ஜீரணிக்க உதவும்.

ஃப்ளு ஜுரம்:
இந்த ஜுரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை தேனின் இயற்கைத் தன்மை அழித்து விடுகிறது.

நீண்ட ஆயுளுக்கு:
ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை மூன்று கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் நான்கு டீஸ்பூன் தேன் சேர்த்து டீ செய்யவும். கால் கப் வீதம் மூன்று அல்லது நான்கு முறை குடிக்கவும். சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், வயதாவதையும் தடுக்கிறது. இளமையிலேயே இந்த மாதிரி டீ பண்ணிக் குடித்து வந்தால், நூறு வயதுவரை கூட வாழலாம்.

முகப் பருக்கள்:
3 மேசைக் கரண்டி தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்யவும். இதப் பேஸ்ட்டை முகப் பருக்களின் மேல் நேரடியாக இரவு படுக்கப் போகுமுன் பூசவும். காலையில் எழுந்திருந்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை அலம்பவும். தினசரி தொடர்ந்து செய்து வர முகப் பருக்கள் அடியோடு மறையும்.

சரும தொற்றுநோய்கள்:
தேனையும் இலவங்கப் பட்டை பொடியையும் சம அளவில் எடுத்து குழைத்து சொறி, சிரங்கு படை முதலியவற்றின் மேல் போட இவை மறைந்து விடும். தழும்பு கூட ஏற்படாது.

உடல் இளைக்க:
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை உணவிற்கு முன்னும், இரவு தூங்கப் போவதற்கு முன்னும் குடிக்கவும். இந்தக் கலவையைக் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படி கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். மிகவும் பருமனான உடல் இருப்பவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம்.

புற்று நோய்:
சமீபத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த ஆராய்ச்சியில் வயிறு, எலும்பு இவற்றில் உண்டாகும் புற்று நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் கூட இந்த இரண்டு பொருட்களின் கலவையால் சரி செய்யலாம் என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு மேசை கரண்டி தேன், ஒரு டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடி கலந்து தினமும் மூன்று வேளை என்று ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும்.

மிதமிஞ்சிய அசதி:
தேனில் இயற்கையாய் இருக்கும் இனிப்பு, நம் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. இந்த இனிப்பு நம் உடலுக்குத் தீங்கிழைப்பதில்லை. வயதானவர்கள் தேன், இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிடுவதால், உடலாலும் மனதாலும் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார்கள்.  வயதானவர்களுக்கு மதியம் ஒருவித அயர்ச்சி ஏற்படும். பலவீனமாக உணர்வார்கள். அப்போது ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு மேசைக் கரண்டி தேன் சேர்த்து, அதி சிறிதளவு இலவங்கப் பட்டை தூவி, காலை பல் தேய்த்தபின்னும் மதியம் மூன்று மணி அளவிலும் குடித்துவர, அலாதியான தெம்புடன் நடமாடுவார்கள். ஒரே வாரத்தில் அசதி நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.

வாய் துர் நாற்றத்திற்கு : ஒரு டம்ளர் சுடு நீரில் ஒரு டீஸ்பூன் தேன், சிறிது இலவங்கப் பட்டை பொடி போட்டு வாய் கொப்பளித்து வர துர் நாற்றம் விலகும்.

காது கேளாமை: தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சம அளவில் எடுத்து காலை, இரவு வேளைகளில் தினமும் சாப்பிட்டு வர காது கேளாமை நீங்கும்.

இயற்கையுடன் இயைந்து வாழும்போதும், இயற்கை மருந்துகளை பயன்படுத்தும்போதும் நம் நோய்கள் தானாகவே அகன்று விடுகின்றன.

வீட்டு வைத்தியம் – பகுதி 1

வீட்டு வைத்தியம் பகுதி 2

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே….!

train

திரு பன்சல் அவர்களின் ரயில் பட்ஜெட்,  திரு சிதம்பரம் அவர்களின் வருடாந்திர பட்ஜெட் எல்லாம் வந்தாயிற்று. வழக்கம்போல ஆளும் கட்சி ‘நாங்கள் கொடுத்திருக்கும் இந்த பட்ஜெட் போல முன்னே யாரும் கொடுத்ததே இல்லை; இனி யாரும் கொடுக்கப் போவதும் இல்லை’ என்று முழங்கிவிட்டு ஓய்ந்துவிட்டது. எதிர்கட்சிகள், ஆளும் கட்சியின்  மீதான தங்கள் சாடலை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த பட்ஜெட்டுகளில் ஏதாவது புதுமை உண்டா தெரியாது. ஆனால் ரயில் பட்ஜெட் பற்றிய செய்திகளின் நடுவே ரயில் நிர்வாகம், நம்மூர் ரயில்களின் வேகம் என்று சிலபல  சுவாரஸ்யமான குட்டிக்குட்டி செய்திகளை போட்டிருந்தது டைம்ஸ் பத்திரிக்கை.

அவை உங்களுக்காக இதோ. யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக!

ரயில்களின் வேகம் என்று பார்த்தால் பிரான்ஸ்(350 கி.மீ./ ph), பெல்ஜியம்(3௦௦ கி.மீ/ ph), ஜெர்மனி (3௦௦ கி.மீ. / ph), ஜப்பான்(3௦௦ கி.மீ./ph)  நாடுகளின் அருகில் கூட நாம் போக முடியாது. சீனர்கள் (3௦௦ கி.மீ./ph) கூட  நம்மைவிட வேகமாக ரயில்களை இயக்குகிறார்கள்.

  • முதல் ராஜ்தானி விரைவு வண்டி ஹௌராவுக்கும், புது தில்லிக்கும் இடையே 1969 ஆம் ஆண்டு ஓடத் துவங்கியது. இப்போது தில்லியையும் வேறு பல நகரங்களையும் இணைக்கும் ராஜ்தானி தான் மிக விரைவு வண்டி. மணிக்கு 140 கி.மி. வேகத்தில் மிக நீண்ட தூரம் போகும் ரயில் இதுதான்.
  • வேகமாகச் செல்லும் ரயில்களின் தேவை இருந்தாலும், நம் நாட்டில் விரைவு வண்டிகளுக்கென்று தனிப்பட்ட ரயில் தடங்கள் இல்லாதது பெரிய குறைதான்.
  • மிகச் சிறிய பெயர் கொண்ட ரயில் நிலையம் : LB – ஒடிஷாவில் உள்ளது.
  • மிக நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் :ஸ்ரீவேங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா – ஆந்திரப்பிரதேசம்
  • நிறுத்தங்கள் இல்லாமல் செல்லும் நீண்ட தூரப் பிரயாணம்: 528 கி.மீ. வதோதரா என்றழைக்கப்படும் பரோடாவிற்கும், ராஜஸ்தானில் உள்ள கோட்டாவிற்கும் இடையில் இந்த தூரத்தை திருவனந்தபுரம்- ஹசரத் நிஜாமுதீன் ராஜ்தானி விரைவு வண்டி. 6.5 மணி நேரத்தில் கடக்கிறது.  
  • அதிக பட்ச நிறுத்தங்கள் கொண்ட விரைவு வண்டி : ஹௌரா-அமிர்தசரஸ் விரைவு வண்டி. மொத்தம் 115 நிறுத்தங்கள்.
  • புது தில்லி-போபால் ஷதாப்தி விரைவு வண்டி அதி விரைவு வண்டி 704 கி.மீ. தூரத்தை 7 மணி 5௦ நிமிடத்தில் கடக்கிறது. ஃபரிதாபாத் – ஆக்ரா இடையே தனது அதிகபட்ச வேகத்தை – 150 கி.மீ./ ph எட்டுகிறது.
  • தாமதமாக வந்து பெயர் வாங்கும் ரயில்: கௌஹாத்தி-திருவனந்தபுரம் விரைவு வண்டி இந்தப் பிரயாணத்தின் மொத்த நேரம் 65 மணி நேரத்திற்குச் சற்றுக் கூடுதல்! கிட்டத்தட்ட 1௦ லிருந்து 12 மணி நேரத் தாமதம் எப்பவுமே! (என்னக் கொடுமை இது சரவணன்?)

முதல் ரயில் எப்போது விடப்பட்டது பார்ப்போமா?

  •  இந்தியாவின் முதல் ரயில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு போரி பந்தர் (Bori Bunder) என்ற இடத்திலிருந்து 21 முறை துப்பாகி குண்டுகள் வெடித்து மரியாதை செலுத்த புறப்பட்டது.
  •   இந்த வண்டி 14 பெட்டிகளுடன்  சாஹிப், சிந்த், சுல்தான் என்று மூன்று புகை இஞ்சின்கள் இழுக்க 400 விருந்தாளிகளுடன் தன் முதல் பயணத்தை தொடங்கியது.

அறிமுகங்கள் சில:

  • முதல் ரயில்: பம்பாயிலிருந்து தானே – வருடம் 1853, 4 கோச்சுகள்  400 பிரயாணிகள்
  • முதல் ரயில் பாலம்: டபூரி (Dapoorie viaduct) வயாடக்ட் – மும்பை-தானே வழித்தடத்தில்.
  • முதல் மின்சார ரயில் பாம்பே வி.டி. இலிருந்து குர்லா – 1925 ஆம் ஆண்டு 
  • முதல் ஏ.சி. கோச்: வருடம் 1925
  • முதன்முதலாக டாய்லெட் வசதி 1891 ஆம் வருடம் முதல் வகுப்பிற்கும் மற்ற வகுப்புகளுக்கு 1907 ஆம் வருடமும் ஏற்படுத்தப்பட்டது.

மற்ற தகவல்கள்:

  • நீண்டதூரம் ஓடும் ரயில்: கன்னியாகுமரியிலிருந்து டிப்ரூகர் வரை 4,286 கி.மீ.
  • நீண்ட நேரம் ஓடும் ரயில்: கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு தாவி வரை 3751 கி.மீ. தூரத்தை ஹிம்சாகர் விரைவு வண்டி 74 மணி  55 நிமிடங்கள்.
  • குறைவான தூரம் ஓடும் ரயில் நாக்பூரிலிருந்து அஜ்னி வரை : 3 கி.மீ.
  • மகாராஷ்டிரா அஹ்மத்நகரில் ஒரே ரயில் நிறுத்தத்தின் இரண்டு பக்கங்களிலும் வேறு வேறு ரயில் நிலையங்கள்! ஸ்ரீராம்பூர் ஓர் பக்கமும், பேலாபூர் ஒரு பக்கமும் அமைந்திருக்கின்றன.
  • நவபூர் ரயில் நிலையம் பாதி மகாராஷ்ட்ராவிலும், பாதி குஜராத்திலும் அமைந்திருக்கிறது. பவானி மண்டி ரயில் நிலையம் பாதி மத்திய பிரதேசத்திலும் பாதி ராஜஸ்தானிலும் இருக்கிறது.
  • நேரோ கேஜ், மீட்டர் கேஜ், பிராட் கேஜ் என மூன்று கேஜ்களும் அமைந்திருக்கும் ஒரு ரயில் நிலையம் சிலிகுரி.

இந்தியாவின் நான்கு திசைகளிலும் இருக்கும் கடைசி ரயில் நிலையங்கள்:

வடக்கு : ஜம்மு அண்ட் காஷ்மீர்

தெற்கு: கன்னியாகுமரி

கிழக்கு: லேடோ – அஸ்ஸாம்

மேற்கு: நாலியா – குஜராத்

பல்வேறு நகரங்களை இணைக்கும் நம் ரயில்வே நிர்வாகம், பல விளையாட்டு வீரர்களையும் தனது அலுவலகத்தில் பணி அமர்த்திக் கொண்டுள்ளது.

நமது கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோணி முதலில்   தென்கிழக்கு ரயில்வே, கரக்பூர் பகுதியில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில் டிக்கெட் கலெக்டர் ஆக  பணியாற்றினார்.

 

பொதுவாக அமைச்சர்கள் பட்ஜெட் வழங்கிப் பேசும்போது நடுநடுவே சில கவிதைகளையும் சொல்லுவார்கள். திரு பன்சல் சொன்ன கவிதை இதோ:

Song of the Engine

by Christine Weatherly

When you travel on the railway,

and the line goes up a hill,

just listen to the engine

as it pulls you with a will.

Though it goes so very slowly

It sings this little song

I think I can, I think I can

And so it goes along…..

மேலிடத்தை சந்தோஷப்படுத்தும் பட்ஜெட் கொடுக்க “I think I can… “ என்று மனதில் நினைத்துக் கொண்டே இந்தக் கவிதையை திரு. பன்சல் வாசித்திருப்பாரோ?

ஒரு என்ஜின் டிரைவரின் பேட்டி படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி திரு மோகன்குமார் – வீடு திரும்பல்

பெங்களூருக்கு மாடி ரயில்!

 

தொழிற்களப் பதிவு :http://tk.makkalsanthai.com/2013/03/blog-post_8695.html