Tag Archives: அந்தமான் தீவுகள்

பாம்புக்குக் காது கேட்குமா?

பாம்பு  பாம்பு 2 பாம்பு 3

பாம்பு-1-மலைப் பாம்பு

பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.

 

புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

 

எனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

 

இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான டாக்டர் கண்ணன் தெரிவித்ததாவது:

 

“பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.

 

பாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.

 

அதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.

 

பாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.

 

குளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.

 

இக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:

 

“பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகிலுள்ள பாம்புகளில் 10 சதவிகிதப் பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.

 

இந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.

எனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.