Tag Archives: Coffee

ஒரு கோப்பையிலே நம் வாழ்க்கை!

coffee cups and mugs

எங்கள் எதிர் வீட்டுக்காரரின் மேல் எனக்கு கொஞ்சம் (இல்லையில்லை….நிறையவே…காதில் புகை வரும் அளவுக்கு..!) பொறாமை.

எனது சமையல் அறையிலிருந்து பார்த்தால் எதிர் வீட்டு பால்கனி தெரியும். இந்த மனிதர் தினமும் காலையில்  ஒரு கையில் மணக்க மணக்க காப்பி ; மறுகையில் சுடச்சுட செய்தித்தாள் – உடன் ஸ்டைலாக நாற்காலியில் உட்கார்ந்து பேப்பரில் மூழ்கி இருப்பார்!

எந்த பிறவியில் யாருக்கு தினந்தோறும் இது போல  பேப்பரும், காப்பியும் கொடுத்து சேவை செய்தாரோ இந்தப் பிறவியில் இப்படி அனுபவிக்கிறார் என்று (புகைச்சலுடன்) நினைத்துக் கொள்வேன்.

நீங்களும் அவரைப்போல காலை எழுந்தவுடன் ஒரு கையில் காபி.. மறு கையில் செய்தித்தாள்.. என்று வாழ்க்கையை அனுபவிப்பவரா?

அப்படியானால் இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும்.

ஒரே கல்லூரியில் படித்து, இப்போது நல்ல வேலையில் இருக்கும் அந்த கால மாணவர்கள் சிலர் தங்களது கல்லூரி பேராசிரியரை சந்திக்கக் கூடினர்.

உபய குசலம் முடிந்தபின், ஒவ்வொருவரும் தங்களது உத்தியோகம் பற்றியும் அதனால் ஏற்படும் மன உளைச்சல், வாழ்க்கையையும் உத்தியோகத்தையும் சமாளிக்கும் தங்களது சாமர்த்தியம் பற்றியும் பேச (பீற்றிக்கொள்ள!) ஆரம்பித்தனர்.

பேராசிரியர் சமையல் அறைக்குச் சென்று ஒரு பெரிய ஜாடி நிரம்ப மணக்கும் காப்பி கொண்டு வந்தார். கூடவே காப்பியை ஊற்றி சாப்பிட பல வகையான கோப்பைகளைக் கொண்டுவந்தார். பிளாஸ்டிக் கோப்பைகள்; சீனா கோப்பைகள்; கண்ணாடிக் கோப்பைகள்; அவற்றுள் சில மிக விலை உயர்ந்தவை; சில சாதாரணமானவை. சில அழகிய வேலைப்பாடுகள் கொண்டவை.

‘ஹெல்ப் யுவர்செல்வ்ஸ்…!’ என்றார் பேராசிரியர்.

ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு காப்பியையும் ஊற்றிக் கொண்டு ருசிக்க ஆரம்பித்தனர்.

பேராசிரியரும் ஒரு கோப்பை காப்பியை கையில் எடுத்துக் கொண்டு பேசலானார்:

coffee cups

‘நீங்கள் எல்லோரும் அழகிய, விலை உயர்ந்த கோப்பைகளையே எடுத்துக் கொண்டுள்ளீர்கள். வாழ்வில் மிகச் சிறந்தவைகளையே அடைய வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் நினைப்பது தெரிகிறது. தவறேதும் இல்லை. ஆனால் உங்கள் பிரச்னைகளுக்கும், மன உளைச்சலுக்கும் பிறப்பிடமே அதுதான்!’

‘ஒரு விஷயம் உங்கள் நினைவில் இருக்கட்டும்: கோப்பைகளினால் காப்பியின் தரம் நிச்சயிக்கப் படுவதில்லை. உங்களுக்கு வேண்டியது காப்பி ஆனால் நீங்கள் விலையுயர்ந்த கோப்பைகளை நாடினீர்கள். அதுமட்டுமல்ல; மற்றவர்களின் கைகளில் இருந்த கோப்பைகளையும் கவனித்தீர்கள்;’

‘இப்போது ஒரு விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்:’

‘வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக் கொள்ளுவோம். உங்களது வேலை, அதில் வரும் வருமானம், அதனால் இந்தச் சமூகத்தில் உங்களுக்குக் கிடக்கும் அந்தஸ்து இந்தக் கோப்பைகள் போல. இக்கோப்பைகள் காப்பியை ஊற்றிக் குடிக்க பயன்படும் வெறும் சாதனங்கள்; இவை காப்பியை ஏந்துகின்றன  அவ்வளவே. இவற்றால் நமது வாழ்க்கை தீர்மானிக்கப் படுவதில்லை. இவை நம் வாழ்க்கையின் தரத்தை அளவிடும் அளவு கோலோ, நம் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதோ இல்லை’.

சில சமயங்களில் காப்பிக் கோப்பைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கை என்னும் ருசி மிகுந்த காப்பியை அனுபவிக்க மறந்து விடுகிறோம்.

‘கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் நன்கு சரியான அளவில் தயாரிக்கப்பட்ட காப்பியை கொடுத்திருக்கிறார். நாம் அதனை ஏதேதோ அளவுகோல் கொண்டு மதிப்பிடப் பார்க்கிறோம்’.

‘வாழ்க்கை என்னும் காப்பியை அனுபவியுங்கள். கோப்பைகளுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டாம்’.

‘சந்தோஷமாக இருப்பவர்களுக்கு சிறந்தவைகள் எல்லாம் கிடைப்பதில்லை. ஆனால் கிடைப்பவற்றுள் சிறந்தவற்றை உருவாக்குகிறார்கள். சிறந்தவற்றைப் பார்க்கிறார்கள். அதனால் தங்களைச் சுற்றி சந்தோஷத்தை பரப்புகிறார்கள்’.

‘எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். அன்பை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். மற்றவர்களை பற்றி ஆழ்ந்த அக்கறை கொள்ளுங்கள். இனியவற்றை பேசுங்கள். கனியிருப்ப காய்கள் வேண்டாம்.’

நாளையிலிருந்து காப்பி குடிக்கும் போதெல்லாம் இந்தக் கதை நினைவுக்கு வரும், இல்லையா?

புது வருடத்தில் புதிதாய் சிந்தனைகள் மலர வாழ்த்துக்கள்!

 

 

freshly-pressed-rectangle  on 24.12.2012

மக்கள் சந்தைக்காக எழுதியது.

எனது முதல் தளத்தில் இப்போது: கணிதமும் நானும்!