Monthly Archives: ஜனவரி 2013

தற்கொலை முயற்சியும், பின்னணியும்

ranjani narayanan

தற்கொலை முயற்சியும் பின்னணியும் 

தினமும் காலையில் செய்தித் தாளைத் திறந்தால் ஒரு தற்கொலைச் செய்தி கட்டாயமாக நம்மை உலுக்கிவிடும். பெண்கள், ஆண்கள், இளைஞர், வயதானவர், பணக்காரர், ஏழை, படித்தவர், படிக்காதவர், நல்ல வேலையில் இருப்பவர், வேலை இல்லாதவர், கடவுள் நம்பிக்கை உள்ளவர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று எல்லா தரப்பினரிடையேயும் இந்த பழக்கம் அதிகமாக பரவியுள்ளது. தற்கொலை செய்து கொள்ள ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்கள்.   நமக்கு இக்காரணங்களை  படிக்கும்  போது சில சமயம் விசித்திரமாகவும் பல சமயங்களில்  இதற்குப் போயா உயிரை விடுவது என்று அங்கலாய்க்கவும் தோன்றும்.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சுமார் 1,00,000 பேர் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். உலகில் நடக்கும் தற்கொலைகளில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக நம் நாட்டில் தான் நடக்கிறது. 4 நிமிடத்துக்கு  ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏன் இப்படி தங்களைத் தாங்களே கொன்று கொள்ளுகிறார்கள்?  உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு  என்ன நடந்திருக்கும்? எல்லாத் தற்கொலைக்கும் பொதுவான காரணம் இருக்கமுடியுமா? அப்படி இருந்தால் அது என்னவாக இருக்கும்?தற்கொலை என்பது ஒரு சிக்கலான விஷயம். சமூக, கலாசார குழப்பங்கள், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், தாய் தந்தையரிடையே உண்டாகும் மனத்தாங்கல்கள் என்று பல விஷயங்கள் காரணமாகச் சொல்லப்பட்டாலும், மனதில் ஏற்படும் தாங்க முடியாத ஒரு வலியே ஒருவரை இந்த தீவிர முடிவுக்குத் தள்ளுகிறது. வலியைத் தாங்கிக்கொள்ள முடியாத போது, அந்த வலியிலிருந்து மீள, அல்லது தப்பிக்க…

View original post 471 more words

தேசிய பெண் குழந்தைகள் தினம்

girl child

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.

இரத்த சோகை நோய் என்பது என்ன?

நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.

நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:

HB % அதிக பட்சம்….. 14.08 gm %

ஆண்கள  ……………………….       13.00 gm %

பெண்கள்     ………………………    11.00 gm %

கர்ப்பிணி பெண்கள் ……………    10.00 gm %

குழந்தைகள்   ………………………….  12.00 gm %

பள்ளி செல்லும் வயதினர் …  12.00 gm %

முதியோர்கள்                10.00 gm %

இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.

இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி  ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும்  பாதிக்கப்படுகிறது.

மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.

இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.

இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.

இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:

பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.

எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.

எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.

இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.

பெண் குழந்தைகளைக் காப்போம்!

பெண் குழந்தைகளின் உடல் நலம் 

 

நமது தேசிய கீதம் 

ப்ளாக்பெர்ரி தம்ப்!

blackberry thumb 2                                                                       blackberry thumb

 

 

போனவாரம் ஒருநாள். வழக்கம்போல் கணணி முன் அமர்ந்திருந்தவள், முழங்கையில் திடீரென ஒரு வலியை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக வலி அதிகமாயிற்று. கையை தூக்கவோ, கஷ்டப்பட்டு தூக்கினால் மறுபடி கீழே போடவோ முடியவில்லை.

‘எங்கேயாவது இடித்துக் கொண்டீர்களா?’ – ஐஸ்வர்யா கேட்டாள்.

‘இல்லையே…!’

‘ராத்திரி தூங்கும்போது ஒரே பக்கமா படுத்துக்கொண்டு விட்டீர்களா?’

‘அப்படின்னா, கை முழுக்க வலிக்கணுமே, முழங்கையில்  மட்டும் தான் வலி!’

வலியுடனேயே யோகா வகுப்புக்கும் போய்விட்டு வந்தேன். வலி மட்டும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. டாக்டர் மதுகர் ஷெட்டியிடம் தஞ்சமடைந்தேன்.

மருத்துவ மனையில் காத்திருக்கும்போது நிதானமாக யோசிக்க நேரம் கிடைத்தது. ஏன் இந்த வலி?

சட்டென்று ‘பல்ப்’ எரிந்தது!

ஒரு மாதத்திற்கு முன் என் கணணி கொஞ்ச நேரம் பயன்படுத்தினாலே சூடாக ஆரம்பித்தது. திடீரென்று ஒரு நாள் நின்றே போய் விட்டது. என் பிள்ளை பார்த்துவிட்டு, ஒரு ஃபேன் ஸ்டாண்ட் வாங்கி வந்து அதன் மேல் கணணியை வைத்துக் கொடுத்து மேலும் ஏதேதோ செய்து (நமக்கு அதெல்லாம் புரியாதுங்கோ!) அதை பழையபடி நான் பயன்படுத்தும்படி (அல்லும் பகலும் அனவரதமும்!) செய்து கொடுத்தான்.

இதன் விளைவாக கணனியின் உயரம் அதிகரித்து விட்டது. நான் இனிமேல் உயர முடியாதே! கையை மிகவும் கஷ்டப்பட்டு, டைனிங் டேபிளின் மேல் கைகளை (கோணாமாணா என்று) வைத்து கொண்டு கணணியை இயக்கி இருக்கிறேன். அதுதான் இந்த வலி!

அடுத்தநாள் யோகா வகுப்பிற்குப் போகும்போது என் தோழி ஜோதி சொன்னாள்: ‘என் பிள்ளையின் கல்லூரியில் இன்று ஒரு போட்டி. ஒரு நிமிடத்திற்குள் அலைபேசியில் யார் அதிக மெசேஜ் அனுப்புகிறார்கள்’ என்று. என்பிள்ளைக்கு முதல் பரிசு!’

பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரை போட்டி கேள்விப் பட்டிருக்கிறோம். இதென்ன விசித்திரமான போட்டி என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று செய்தி தாளில் ஒரு செய்தி: இன்றைய யுவ, யுவதிகள்  அலை பேசியில் இருக்கும் சின்னஞ்சிறு கீ போர்டில் விரல்களை அழுத்தி அழுத்தி வேக வேகமாக குறுஞ்செய்தி அனுப்புவதால் விரல்களில் ஒருவித வலி உண்டாகிறதாம். அதற்கு ‘ப்ளுபெர்ரி தம்ப்’ (Blueberry thumb) என்று பெயராம்.

இதைபோல உண்டாகும் இன்னொரு வலிக்கு ஐ-ஃபோன் ஃபிங்கர் என்று பெயராம்.

ஆரம்பிக்கும்போது கட்டை விரலில் சிறிது உளைச்சல் ஏற்படும். இதை அலட்சியம் செய்தீர்களானால் விரல்களில் வீக்கம் ஏற்படும். விரல்கள் மரத்துப் போகும். மணிக்கட்டுக்களில் வலி ஏற்படும். குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்து என்று இதற்கு அர்த்தம்!

மருத்துவரை பார்ப்பதற்கு முன் அல்லது வலி ஆரம்பமாகும் அறிகுறிகள் தென்பட்டால் சில பயிற்சிகள் செய்தால் ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கும்.

கட்டைவிரலை வளைத்தல்: (Outward thumb bending)

கட்டைவிரலை இறுக்கமாக வைத்துக்கொண்டு உங்கள் உள்ளங்கை நோக்கியும், வெளிப்பக்கமாகவும் வளையுங்கள்.

கட்டைவிரலை சுழற்றுதல்: (Thumb Rotation)

வலியிலிருந்து ஆறுதல் பெற கட்டைவிரலை வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் வட்டமாக சுழற்றவும். இறுகிப் போன மூட்டுகள் தளரும்.

வெந்நீர் ஒத்தடம்:  (Hot Fermentation)

இந்த முறையால் தசைகள் தளர்ந்து கொடுக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

சிறிய கிண்ணத்தில் வெந்நீர் எடுத்துக் கொண்டு அதில் எப்சம் உப்பு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். ஒரு டவலை இந்த உப்புத் தண்ணீரில் முக்கி, நன்றாகப் பிழிந்து விட்டு வலி இருக்கும் இடத்தில் வைக்கவும். ஐந்து முறை இதைபோல செய்யவும்.

இரவு நேரம்: வலிக்கும் கட்டைவிரலின் மேல் அழுத்தம் ஏற்படாதபடி தூங்கும் போது கட்டைவிரலை சுற்றி பஞ்சு வைத்து கட்டவும்.

கட்டைவிரலுக்கு ஓய்வு கொடுக்கவும். சிறிது நாட்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தவும். சற்று ஓய்வு கொடுப்பதனால் உங்கள் கட்டைவிரல் வலியிலிருந்து ஆறுதல் அடையும். இந்த ஓய்வு கட்டாயம் தேவை.

விரல்களில் வலி ஏற்படும் போதே ஜாக்கிரதையாக இருந்து விடுவது நல்லது. வலியுடனேயே, அல்லது வலியைப் பொருட்படுத்தாமல் விரல்களை பயன்படுத்தினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அதனாலும் பெரிய பலன் இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதனால் வருமுன் காப்போம்! இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் சேர்த்துதான் என்பதை உணர்ந்தே இதை எழுதுகிறேன்.

 

தொழிற்களம் பதிவு 

 

இசைப்பாவில் குறையொன்றுமில்லை கேட்டீர்களா?

 

இதையும் படிக்கலாமே:

செல்வ களஞ்சியமே – பகுதி -1

செல்வ களஞ்சியமே – பகுதி 2 

 

நிர்பயாவிற்கு ஒரு கவிதை

சமீபத்தில் நமது தலைநகரில் ஒரு பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை எல்லோரும் அறிவோம்.

திரு அமிதாப்பச்சன் அவள் நிலையில் இருந்து எழுதிய ஒரு கவிதையும் அதன் தமிழாக்கமும்

திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பதிவில்.

ஹிந்தி மூலமும்,  அதன் தமிழாக்கமும்

http://venkatnagaraj.blogspot.com/2013/01/blog-post_11.html

 

 

 

 

இசைப்பாவில் கேட்டீர்களா?

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்!

பற்பசை – பல் தேய்க்க மட்டுமல்ல!

பற்பசை எதற்கு பயன்படும்? என்ன கேள்வி இது? சின்னக் குழந்தையைக் கேட்டாக்கூட சொல்லிவிடும் – பற்களை சுத்தம் செய்ய என்று! மிகவும் சரி.
ஆனால் எனக்கு வந்த இமெயிலில் பற்பசையின் உபயோகத்தைப் பற்றி படு ஆச்சர்யமான விஷயங்களை சொல்லி இருந்தார் அதை அனுப்பிய நண்பர். அதை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

நம்மைப் பொறுத்தவரை பற்பசை நம் பற்களை துலக்கும்; பளபளப்பாக்கும்; கிருமிகள் அண்டாமல் பாதுகாக்கும்; கறைகளைப் போக்கும்; பற்களின் எனாமலை புதிப்பித்து பாதுகாக்கும். இவற்றைத் தவிர பற்பசையின் சுத்தப்படுத்தும் தன்மை பல்வேறு பொருட்களிலும் பல ஆச்சர்யங்களை நிகழ்த்தும்!

நம் முத்துப் பற்களை வெள்ளைவெளேரென்று ஆக்கும் பற்பசை வீட்டில் இருக்கும் பாத்திரம் பண்டங்களையும் பளபளப்பாக்கும். சின்ன சின்ன காயங்களை ஆற்றி இதம் தரும். கறைகளையும், வேண்டாத துர் நாற்றங்களையும் கூட விரட்டி அடிக்கும். ஆனால் ஜெல் இல்லாத பற்பசை மட்டுமே இந்த அதிசயங்களைச் செய்யும். நம் பற்களில் குழிகள் வராமல் காத்து, நம் சுவாசத்தை புத்துணர்வாக்கும் பற்பசை செய்யும் அற்புதங்களைப் பார்க்கலாமா?

 • பூச்சிக் கடியா? கொப்புளங்களா? அல்லது புண்ணா? நம் மிருதுவான சருமத்தை ஒரு வழி பண்ணும் இவற்றின் மேல் ஒரு சொட்டு பற்பசையை பூசுங்கள்.பொதுவாக இந்தகைய காயங்கள் ஒருவித அரிப்பை உண்டு பண்ணும். சில சமயம் நீர் கசியவும் செய்யும். நம் சூப்பர் பற்பசை இந்தப் புண்களை உலர்த்துவதுடன், அரிப்பு மற்றும் வீக்கத்தையும் போக்கிவிடும். இரவு நேரத்தில் தடவிக் கொள்ளுவது நல்லது.
 • நெருப்புக் காயங்கள்: சிறிய நெருப்புக் காயங்கள் மேல் பற்பசையைத் தடவும் போது எரிச்சல் நீங்கி குளுமை ஏற்படுகிறது. நெருப்புக் காயம் பட்டவுடனே பற்பசையை இதமாகத் தடவுவதால் நீர் கோர்த்துக் கொள்ளாமலும், காயம் திறந்து கொள்ளாமலும் இருக்கும்.
 • முகத்தில் ஏற்படும் மருக்களை குறைக்க, முழுமையாக மறைக்க வைக்க இரவு நேரத்தில் சிறிய அளவில் துளி பற்பசையைப் பூசுங்கள். காலையில் முகத்தைக் கழுவுங்கள்.
 • பற்களை மட்டும்தான் பற்பசைகொண்டு துலக்க வேண்டுமா? நமது விரல் நகங்கள் கூட இனாமலினால் ஆனாதுதான். சுத்தமான, பளபளப்பான, உறுதியான (பற்களுக்கு மட்டுமல்ல,) நகங்களுக்கும் கூட பற்பசையை பயன் படுத்தலாம். பல் துலக்கும் பிரஷ் கொண்டு நகங்களின் அடிப்புறத்திலும், நகங்களின் நுனிகளிலும் நன்றாக தேய்க்கவும்.
 • தலைக்குப் போடும் ஜெல் தீர்ந்து விட்டதா? ஜெல் இருக்கும் பற்பசையைக் கொண்டு உங்கள் அழகிய கூந்தலை படிய வைக்கலாம். தலைக்குப் போடும் ஜெல் மற்றும் பற்பசையில் இருக்கும் ஜெல் இரண்டுமே ஒரே விதமான நீரில் கரையக் கூடிய பல்படிப் (பாலிமர்) பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.
 • வெங்காயம், பூண்டு நறுக்கும் போதும், மீனை சுத்தம் செய்யும் போதும் நம் கைகளில் ஒருவித துர்நாற்றம் வீசும். கைகளையும் விரல் நகங்களையும் பற்பசை கொண்டு தேய்த்துக் கழுவவும். கைகள் கம கம!
 • துணிகளிலும் உங்கள் வீட்டு வரவேற்பறையில் விரித்திருக்கும் தரை விரிப்புகளிலும் ஏற்பட்டிருக்கும் கரைகளுக்கும் பற்பசை ஒரு சிறந்த கரை நீக்கியாகும். துணிகளில் ஏற்பட்டிருக்கும் கரைகளின் மேல் நேராகவே பற்பசையை தடவி அழுத்தமாக கரை நீங்கும் வரை பிரஷ் செய்து வழக்கம் போல் துவைக்கலாம். ஒரு சிறிய எச்சரிக்கை: கலர் துணிகளில் வெள்ளை நிறப் பற்பசையை பயன்படுத்தும் போது சில சமயங்களில் சாயம் வெளுக்கக் கூடும். தரை விரிப்பின் மேலும் பற்பசையைத் தடவி பிரஷ்ஷினால் தேய்த்து பிறகு அலசவும்.
 • காலணிகள்(ஷூக்கள் ) அழுக்காகி விட்டனாவா? கவலை வேண்டாம். பற்பசையை காலணிகளின் மேல் அழுக்கான பகுதிகளின் மேல் தடவி நன்றாக தேய்த்து துடைத்து விடவும். உங்கள் பற்களுக்கு சமமாக உங்கள் லெதர் காலணிகளும் ஜொலிக்கும்.
 • வெள்ளி பாத்திரங்கள் பளபளக்க: பற்பசையைத் தடவி ஒரு இரவு விட்டுவிடவும். ஒரு சுத்தமான துணியினால் காலையில் துடைத்து விடவும். வெள்ளிப்  பாத்திரங்கள் புதிது போல பப்பள பளபள!
 • அடுத்தாத்து அம்புஜத்தின் வைரத் தோடு பளபளக்கும் ரகசியம் என்ன தெரியுமா? தன் பற்களை மட்டுமல்லாது வைரத்தோடுகளையும் மாமி பற்பசை கொண்டே விளக்குகிறார். இங்கும் ஒரு சிறு எச்சரிக்கை: முத்துத் தோட்டிற்கு பற்பசை ஆகாது. முத்து நிறம் மங்கி கெட்டுப் போய்விடும்.
 • கீறல் விழுந்த CD, DVD க்களை சிறிதளவு பற்பசை தடவித் துடைக்கலாம். இந்த முறை அவ்வளவாக வெற்றி என்று சொல்ல முடியாது. அதனால் யோசித்துச் செய்யுங்கள். சிறிய மேலோட்டமான கீறல்களுக்கு பரவாயில்லை.
 • பியானோ வாசிப்பவரா நீங்கள்? பியானோவின் கீபோர்டு மேல் படிந்திருக்கும் அழுக்கை பற்பசை கொண்டு துடைக்கலாம். ஈரத்துணியில் பற்பசையை எடுத்துக்கொண்டு கீபோர்டு மேல் தடவவும். இன்னொரு ஈரத் துணியினால்துடைத்து விடவும்.
 • குழந்தைகளின் பால் பாட்டிலிலிருந்து ஒருவித பால் வாசனை வரும். சிறிதளவு பற்பசை, நீர், பாட்டில் பிரஷ் கொண்டு நன்றாக அலம்பவும். கவனமாக நிறைய தண்ணீர் விட்டு பலமுறை கழுவவும்.
 • இஸ்திரி பெட்டியின் அடியில் துருப் பிடித்துப் போயிருக்கிறதா? பற்பசையில் இருக்கும் சிலிக்கா துருக் கறைகளை அகற்றிவிடும்.
 • நீச்சல் வீரர்கள், ஆழ் கடலில் நீந்துபவர்கள் கண்களில் அணியும் காகிள்ஸ் (goggles) ஏற்படும் பனிப் படலத்தை (fog) போக்க பற்பசையை பயன்படுத்தலாம். சிறிது பற்பசையை இரண்டு லென்ஸ்களின் மேலும் தடவி நன்றாக நீரில் அலசவும். வாவ்! காகிள்ஸ் சுத்தம் செய்யவென்றே விற்கும் ஜெல் வேண்டவே வேண்டாம். அதிகமாக தேய்க்க வேண்டாம். லென்ஸ்களில் கீறல் விழக்கூடும்.

சரி அம்மணி, எல்லாம் சொல்லி விட்டீர்கள், பற்களைத் தவிர இதையெல்லாம் சுத்தம் செய்ய எத்தனை கிலோ பற்பசை வாங்குவது? யார் வாங்கிக் கொடுப்பார்கள்? பற்பசை விலை தெரியுமா? என்று கேட்கிறீர்களா? எஸ்கேப்!!!

இன்று இசைப்பா கேட்டிர்களா?

பழ முதிர் சோலை எனக்காகத்தான்!

மாலைப்பொழுதினிலே……மலரும் நினைவுகள்!

220px-Ms_subbulakshmi

திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தேன் குரலில் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு ‘கொசுவர்த்தி சுருள்’ தான்.

இந்தப் பாட்டை நான் பாடி, நடனம் அமைத்து…. அடடா என்ன இனிமையான நினைவுகள்!

அப்போது புரசைவாக்கத்தில் இருந்தோம். என் அண்ணா, அவனது நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஒரு ‘ரிக்ரியேஷன் க்ளப்’ ஆரம்பித்தனர். பெயர் என்ன வைக்கலாம் என்று யோசித்த போது என் அண்ணா ஒரு பேப்பரில் எழுதினான். “ELITE RECREATION CLUB” உடனே நான் படித்தேன்: எலைட் ரிக்ரியேஷன் க்ளப் என்று. என் அண்ணாவுக்கு வந்ததே கோவம்!

‘ச்சே! என்ன படிக்கிற, எலைட் –ஆ? எடு, எடு டிக்ஷ்னரியை. உச்சரிப்பு பாரு. எலைட்டாம் எலைட்டு!’

எனக்குப் புரிந்து விட்டது தவறான உச்சரிப்பு என்று. எழுந்து போய் டிக்ஷ்னரியை எடுத்து வந்து உச்சரிப்புப் பார்த்துவிட்டு சொன்னேன். ‘எலீட்  ரிக்ரியேஷன் க்ளப்’. அண்ணாவின் முகம் மலர்ந்தது.

‘பேரு நன்னாருக்கு இல்ல?’

அர்த்தம் புரிந்தால்தானே? ‘ஓ!’ தலையாட்டி விட்டேன். அர்த்தம் புரியவில்லை என்றால் மறுபடி டிக்ஷ்னரி எடு என்பான்.

க்ளப் ஆரம்பித்தாயிற்று. மாதம் ஒரு முறை சந்தித்தோம், எங்கள் வீட்டில் தான். ஏதாவது செய்ய வேண்டுமே. என்ன செய்யலாம்?

கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிக்கலாம். கதை, கவிதை யார் யாருக்கு என்னென்ன வருமோ அதை எழுதிக் கொண்டு வரலாம். எல்லோருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.

எல்லோரும் கொண்டு வருவதை அழகாக தைத்து படிக்கும் படி செய்ய வேண்டியது என் வேலை. என் அக்கா பாதுகா பட்டாபிஷேகம் எழுதினாள். அதற்கு பரதன் தலைமேல் பாதுகையை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போகிறாப்போல படம் வரைந்து கொடுத்தேன் நான். முதல் இதழே வெற்றிகரமாக அமைந்து விட்டது. மாதாமாதம் கையெழுத்துப் பத்திரிகை வர ஆரம்பித்தது. நான் எதுவும் எழுத மாட்டேன்; எனக்குப் படித்த கல்கியின் கதாபாத்திரங்கள் ஆன நந்தினி, குந்தவை இவர்களை வரைந்து கொடுப்பேன்.

நாடகம் போடலாம் என்று அடுத்த முடிவு. வெறும் நாடகம் மட்டுமில்லாமல் நடனம், பாடல், நாடகம் எல்லாம் இருக்கட்டும் என்று முடிவு செய்தோம்.

நான் அப்போது எஸ் எஸ் எல் ஸி படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் ‘Merchant of Venice’ நாடகம் வந்திருந்தது – நீதி மன்றக் காட்சி மட்டும்.  ஏற்கனவே பள்ளிக் கூடத்தில் ஒரு முறை நான் நடித்து அரங்கேறிய நாடகம். நான்தான் கதாநாயகி போர்ஷியா. அவள் நீதி மன்றத்தில் பேசும் பேச்சு மிகப் பிரபலம். கிட்டத்தட்ட மோனோ ஆக்டிங். அதையே திரும்ப செய்துவிடு என்றார்கள்.

இசை? நான் மிகவும் விரும்பிப் பாடும் பாடல் ‘மாலைப்பொழுதினிலே ஒரு நாள்…’ அதைப் பாடுகிறேன் என்றேன்.

அண்ணாவின் நண்பர்களில் ஒருவர் சொன்னார். அதற்கே நடனமும் இருந்தால் நன்றாக இருக்கும். அது வள்ளியும், முருகனும் உரையாடுவதுபோல அமைந்த பாடல். கல்கி அவர்கள் இயற்றியது.

நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு இரண்டு பெண்கள் விஜயா, அல்லி என்று. விஜயா பெரியவள். அல்லி அவள் தங்கை. சரி அல்லியை வள்ளியாகவும், விஜயாவை முருகனாகவும் வைத்துக் கொண்டு நடனம் அமைக்கலாம் என்று தீர்மானம் செய்தோம். நடன ஆசிரியர்?

நானே முன்வந்தேன். எங்கள் பள்ளியில் நடன நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். அவற்றில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் ரிகர்சலை பலமுறை பார்த்து ரசிப்பேன். எங்கள் பாட்டு டீச்சர் திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன் மிக அருமையாக பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதத்திற்கு’ மெட்டமைத்து, நடனமும் வடிவமைத்து இருந்தார். அவற்றை வீட்டில் வந்து ஆடுவேன்.

இந்த அனுபவம் போதாதா? தினமும் விஜயாவிற்கும் அல்லிக்கும் பயிற்சி கொடுத்தேன்.

எங்கள் நிகழ்ச்சி ஸர் எம்.சி.டி.எம். முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வகுப்பறை ஒன்றில் நடந்தேறியது வெற்றிகரமாக! முதல்முறையாக ‘மைக்’ கில் பாடினேன். பக்கவாத்தியங்கள் கிடையாது. சோலோ பாட்டு மட்டும். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு நரசிம்மன் தலைமை தாங்கினார். எங்கள் எல்லோரையும் பாராட்டி, வாழ்த்திவிட்டு சென்றார்.

அதற்குப் பிறகு எங்கள் க்ளப் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. அண்ணாவிற்கு வேலை கிடைத்து தும்பா (கேரளா) சென்றான். எனக்கு வேலை கிடைத்தது. ஒவ்வொருவராக விலக, நினைவுகள் மட்டுமே மிச்சம்.

இந்தப் பாட்டை முழுமையாக கேட்க (என் குரலில் இல்லீங்க!) திருமதி எம்.எஸ். குரலில் இங்கே க்ளிக் செய்யவும்.

என் விருப்பத்திற்காக இந்த முழு பாடலையும், பாடல் வரிகளுடன் தங்கள் இசைப்பா தளத்தில் போட்டிருக்கும் திரு தமிழுக்கும், திரு ஓஜஸ்ஸுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

 

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

அழகுக் குறிப்பு!

freshly-pressed-rectangle

ranjani narayanan

ஒரு நாள் ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு போன் செய்திருந்தேன். இன்டர்நெட் மூலம் என் படைப்புகளை அனுப்ப இமெயில் ஐடி கேட்டேன். உடனே பத்திரிகை அலுவலர் “என்ன மேடம், சமையல் குறிப்பா?” என்றார். எனக்கு கொஞ்சம் கோவம், வியப்பு; பெண்களின் படைப்பு என்றால் சமையல் குறிப்பு, கோலம் இவை தானா? சரி அவரையே கேட்போம் என்று “ஏன் சார், பெண்கள் என்றால் சமையல் குறிப்பு தானா?” என்றேன். “பொதுவா அப்படித்தான்……” என்றார்.

இந்த உரையாடலுக்குப் பிறகு எனக்குள் ஒரு குறுகுறுப்பு. “பெண்கள் இன்டர்நெட்டில் எதை அதிகம் படிக்கிறார்கள்?” என்று ஆராய்ந்தால் முதல் இடம் சமையலுக்குத்தான்! அடுத்தாற்போல் அழகு குறிப்பு; மூன்றாவது இடம் எடை குறைப்பது. சரி நான் இப்போது எதைப் பற்றி எழுதுவது? சமையல்? அழகுக் குறிப்பு? எடை குறைப்பு?

சமையல் குறிப்பு நிறைய நிறைய இருக்கிறது; சரி எடைக்குறைப்புப் பற்றி எழுதலாம் என்றால் ‘முதலில் நீ உன் எடையைக் குறைத்து விட்டு பிறகு எழுது’ என்று என் மனசாட்சி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் சொன்னது. கடைசியில் அழகுக் குறிப்பு எழுதலாம் என்று தீர்மானம் செய்தேன். ‘முதலில் நீ அழகாக………….’ என்று ஆரம்பித்த மனசாட்சியை ‘ஏய்! சும்மா இரு. அழகாக இருப்பவர்கள் அழகுக் குறிப்பு எழுதுவதில்லை, முட்டாள் மனசாட்சியே!’ என்று அடக்கினேன்

ரொம்ப நேரம் யோசித்து சரி புதுவிதமான அழகுக் குறிப்பு ஏதாவது கிடைக்கிறதா என்று கூகுளில் தேட ஆரம்பித்தேன்.  தலை முடியில்…

View original post 342 more words