Monthly Archives: ஜூன் 2013

பெற்றோர்களே! குழந்தைகள் பத்திரம் – 4

 

முதல் பகுதி  இரண்டாம் பகுதி  மூன்றாம் பகுதி 

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு:

இவையெல்லாம் சரியான விதத்தில் செயல்முறைபடுத்தப் பட்டால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று பாரதி ஷர்மா கூறுகிறார். இவர் புது தில்லி குழந்தை நல குழுவின் முன்னாள் தலைவர். ஷக்தி ஷாலினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர். இவர் கூறுகிறார்: ‘2007 ஆம் ஆண்டு ஒரு 5 வயதுச் சிறுமி கொஞ்ச நேரம் தனிமையில் இருக்க நேர்ந்தது. (அம்மா ஊருக்குப் போய்விட்டாள்; அப்பா இரவு பணி முடிந்து திரும்ப வேண்டும்.) பக்கத்துவீட்டிலிருந்து இவளுக்குத் துணைக்கு வர வேண்டிய பெண்மணி சிறிது தாமதமாக வந்து சேருவதற்குள், அருகிலிருந்த வீட்டிலிருந்த ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அளவிற்கு காயப்படுத்தப்பட்டாள்.

அந்தப்பகுதி மக்கள் ஒன்று கூடி வேர்ல்ட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலருக்கு தகவல் கொடுக்க முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருமதி சர்மாவின் முயற்சியால் ‘ஹக்’ அமைப்பிலிருந்து இலவசமாக வாதாட ஒரு வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டார். நிலைமை முற்றிலும் மாறியது. பெற்றோர்கள் நடந்ததை இழிவாகக் கருதி அந்தக் குழந்தையை பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பவிருந்தனர். ஆனால் குழந்தைகள் நலக் குழுமமும், வக்கீலும் திரும்பத் திரும்ப எடுத்து சொல்லி அவர்களின் மனதை மாற்றினர். ஒரு அரசாங்க வக்கீலால் செய்ய முடியாத ஒன்று இது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெத்தனமாக 7 முறை வழக்கை ஒத்திவைத்தார். வக்கீல் இதனை தில்லி உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்க, வழக்கு நடைபெற வேண்டிய வழிவகைகள் வகுக்கப்பட்டன. வழக்கு நடந்து முடிக்க 3 வருடங்கள் ஆயிற்று. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை. குடும்பம் தன் பழைய நிலைக்குத் திரும்பியது; குழந்தையும் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

‘பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் சட்டஉதவி இன்றியமையாதது. பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. தேவையான பணம் இருக்காது. மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள். இந்த சூழ்நிலையில் அர்பணிப்பு நோக்கம் கொண்ட ஒரு வக்கீலின் உதவி அவர்கள் வாழ்வையே மீட்டுத் தரும்’ என்கிறார் பாரதி.

என்ன தீர்வு?

புது தில்லியில் நடந்த குழு வன்புணர்வும், 5 வயதுச் சிறுமிக்கு ஏற்பட்ட கொடூர அனுபவங்களும் நாடு முழுவதும் எல்லோருடைய உணர்ச்சிகளையும் கொந்தளிக்க செய்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களினால் இந்த விஷயங்களில் நிலவும் மௌனம் கலந்திருக்கிறது, நாட்டின் மனச்சாட்சி தட்டி எழுப்பபட்டிருக்கிறது, சட்டத் திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், இரண்டு விஷயங்கள் உறுத்துகின்றன.

முதலாவது கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது. இரண்டாவது ஆபாசப் படங்களை தடை செய்ய வேண்டும் என்பது.

நன்னெறி சார்பிலும், சட்ட விவாதங்கள் மூலமும் ஒரு ஜனநாயக குடியரசில் மரண தண்டனை சரியல்ல என்றாலும் குழந்தை வன்புணர்விற்கு மரண தண்டனை என்பது தற்கேடாகவே அமையும்.

பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் கற்பழிக்கப்பட்டன என்பதை குடும்ப மரியாதை என்ற பேரில் பேசவே விரும்புவதில்லை. இப்படி இருக்கும்போது வெளியில் சொன்னால் உங்கள் அப்பா, சகோதரர், மாமா பக்கத்து வீட்டுக்காரர் மரண தண்டனைக்கு ஆளாவார் என்றால் யார் வாயைத் திறப்பார்கள்?

ஆபாசப்படங்களுக்குத் தடை விதிப்பது சற்று சிக்கலானது என்றாலும் அதனால் பலன் ஏதும் இருக்காது.

‘அதீத காமவெறி களியாட்டங்கள் கொண்ட ஆபாசப்படங்கள் கைபேசியிலும், கணணியிலும், தொலைக்காட்சிகளிலும் வருவதைக் கட்டுபடுத்த வேண்டும்’ என்று சொல்லும் பாரதி அலி, ‘குழந்தைகள் ஒரு சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நாயகன் நாயகி நெருக்கமாக இருக்கும்  ஒரு சில காட்சிகள் வருகின்றன என்று சானலை மாற்றுவதைவிட முழு படமும் பார்க்க விடுங்கள். அப்போது பாலியல் உணர்வுகள் வாழ்வியலில் ஒரு அங்கம் என்றும், அது வெறும் உடல் சார்ந்த, தனியான, உணர்ச்சியற்ற ஒரு நடவடிக்கை அல்ல என்பதும் அவர்களுக்குப் புரியும்.’ என்கிறார்.

வன்புணர்வுக்குப் பலியானவர்களின் நிலை:

சுநீதா கிருஷ்ணன் 25 வருடங்களுக்கு முன் – அப்போது 16 வயதுச் சிறுமி – 8 நபர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாள். அந்தக் கொடிய சம்பவத்தினால் மனம், உடல் இரண்டும் காயப்பட்டு பாதி செவிடாகவும் ஆனவள். ‘பலியானவள்’ என்று சமூகம் அவளுக்கு பெயர் சூட்ட விரும்பினாலும், தான் அந்தக் கொடுமையிலிருந்து தப்பிப் பிழைத்தவள் என்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவள் என்றும் சொல்லிக் கொள்ளவே விரும்புகிறாள். தன் முகத்தை மறைக்கவோ, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவோ வெட்கப் படுவதில்லை அவள். இந்தக் கொடுமையிலிருந்து தப்பி பிழைத்தவர்கள்தான் முதலில் தமக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து வெளி வரவேண்டும் என்கிறாள்.

‘தெஹெல்கா’ அவளை முதல் முறை சந்தித்தபோது, ஊடகங்களின் ஓரவஞ்சனையை கடுமையாகத் திட்டினாள். அவள் சில ரசிக்கத்தகாத விஷயங்களைச் சொன்னாள். ‘பத்திரிக்கையாளர்கள் கற்பழித்தவர்களை கண்டுகொள்வதில்லை  – அப்படியே செய்தாலும் அவர்கள் கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவராகவோஅல்லது பெயர் தெரியாத குற்றவாளியாகவோ இருப்பார்கள். மகளை தனியிடத்திற்கு  அழைத்துச் செல்லும் தந்தையையோ, வீட்டில் யாருமில்லாத போது மட்டுமே வரும் ‘மாமா’ வைப் பற்றியோ எழுதுவதில்லை.’

‘குடும்பங்களில், நிறுவனங்களில் நடக்கும் வன்முறைகள் வெளியே வருவதில்லை.புது தில்லி பேருந்தில் நடந்த குழு வன்புணர்வு, 5 வயதுச் சிறுமி வன்புணர்வுக்கு ஆளானது எல்லாவற்றிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வருவார்கள்; ஆனால் எண்ணிலடங்கா சிறுவர்களும் சிறுமிகளும் தினந்தோறும் இந்த மாதிரி குற்றங்களுக்கு சொந்த வீட்டிலேயே ஆளாவது, பல பெண்கள் அரசுப் பணியாளர்களால் துன்புறுத்தப்படுவது வெளியே வராது. கற்பழிப்புக்கு எதிரான சட்டம்  சரியான  வழியைக் காட்டினாலும், இராணுவ வீரர்களால் பெண்கள் கற்பழிக்கப்படுவதையும், மனைவியின் விருப்பத்திற்கு எதிராக கணவன் அவளை கூடுவது பற்றியும் அதிகமாக எதுவும் கூறவில்லை. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதைப் பற்றிய சொரணை வர வேண்டுமெனில் ஏற்படுத்த வேண்டுமெனில், இவற்றை தனியான ஒரு குற்றமாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.’

வன்புணர்வு, பலாத்காரம், கற்பழிப்பு என்று எப்படி சொன்னாலும், இந்த சமூக நோயை அடியோடு அகற்ற பிரச்னையின் ஆழத்திற்குச் சென்று தான் ஆக வேண்டும்!

 

பெற்றோர்களே! குழந்தைகள் பத்திரம் – 3

 

முதல் பகுதி   இரண்டாம் பகுதி 

குடும்பத்தின் பங்கு:

இந்தக் கதைகளின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் நினைவில் கொள்ளவேண்டியது குடும்பம் என்ற அமைப்பும், பெற்றோர்களுமே குழந்தைகளை செயலிழக்க வைக்கிறார்கள் என்பதை. முக்கிய குற்றவாளிகளாக இருப்பதுடன், இதைப்பற்றி மௌனம் சாதித்து வன்முறையை அதிகப்படுத்துகிறார்கள். இந்த மௌனத்தை உடைப்பது மிகவும் முக்கியம்.

ஹரிஷ் அய்யர் தனது 7 வது வயதிலிருந்து 18 வயதுவரை தன் வீட்டிற்குவரும் ஒரு நபரால் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதை கூறுகிறார். இவர் மறுத்தால் அந்த நபர் இவரது அந்தரங்க உறுப்பில் ஊசிகளை செருகியும், குத்தியும் இரத்தம் வரச் செய்வாராம். தன் உறுப்பில் இரத்தம் வருவதை அம்மாவிடம் தெரிவித்த போது அதிகமாக மாங்காய் சாப்பிட்டதனால் இருக்கும் என்று கூறினாராம் அம்மா.

சமூகவியலாளர் திரு ஷிவ் விஸ்வநாதன் இந்த பிரச்னையின் மையத்தை விளக்குகிறார்: ‘இந்திய குடும்பங்கள் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளன. குடும்பங்களில் நடக்கும், வன்முறைகள், வக்கிரங்கள், பாலின பிரச்னைகள், அதைத் தொடரும் மௌனங்கள் இவை இதுவரை  காணாத அளவு நெருக்கடியை உண்டு பண்ணுகின்றன. இவற்றை நாம் காண விரும்புவதுமில்லை. இதில் நாம் மானக்கேட்டைப் பார்க்கிறோம். ஆனால் இந்த மானக்கேடு தினமும் நடைபெறுகிறது. தினசரி நிகழ்ச்சியாக இதைப் பார்க்காவிட்டால் இந்த இழிசெயலை உணர்ந்து கொள்ள முடியாது.’

உச்ச நீதிமன்றத்தில் வக்கீலும், குழந்தை கடத்தலுக்கு எதிராகச் செயல்படும் சக்தி வாகினி என்ற ஒரு தன்னார்வத் தொண்டு  நிறுவனத்தின் இயக்குனருமான திரு ரவி காந்த் கூறுகிறார்: ‘தந்தையால் மகள் கற்பழிக்கப்படுவது மேல்தட்டு, மற்றும் செல்வந்தர்களின் குடும்பங்களில் தான் அதிகம் நடைபெறுகிறது. ஆனால் நான் இதுவரை கையாண்ட வழக்குகளில் ஒன்று கூட கடைசி நிலையை எட்டியதில்லை. குடும்பத்தின் ‘மரியாதை’ போய்விடும் என்று  அப்பாக்கள், சகோதரர்கள், அவர்களின் மனைவிமார்கள்  எல்லோரும் முறையிட்டு வழக்கை அமுக்கி விடுகிறார்கள்.

சிறார்கள் சீர்திருத்த இல்லங்கள்:

குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் இன்னொரு இடம் இது. கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகளுக்குப் புகலிடமாகவும், அவர்களுக்கு புனர் வாழ்வு கொடுக்குமிடமாகவும் இருக்க வேண்டிய இந்த இல்லங்கள் ஏன் இப்படி மாறுகின்றன? ஆசிய மனித உரிமைகள் மையம் நான்கு காரணங்களை முன் வைக்கிறது.

முதல் காரணம்: பல மாநிலங்களில் இந்த இல்லங்களை மூன்று மாதங்களுக்கு  ஒரு முறை கண்காணிக்க, கண்காணிப்புக் குழு அமைக்கப்படாதது.

இரண்டாவது காரணம்: அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. இவை எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் வருவதில்லை.

மூன்றாவது சிறார் நீதித்துறை சட்டம் 2007 இன் படி சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் தனித்தனி இடவசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்றிருந்தாலும், இது நடமுறையில் இல்லை.

கடைசியாக, 23 மாநிலங்களில் மாநில – அளவில் 462 குழந்தைகள் நல குழுக்கள் அமைக்கப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையங்களின் நம்பகத்தன்மை பரிசோதிக்கப் படுகிறது. பல மையங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன.

2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கர்நாடக அரசு இந்தக் குழுக்கள் குழந்தை பாதுகாப்பு மையங்களின் முன் அனுமதியின்றி கண்காணிப்பு பணியை நடத்த தடை விதித்தது. இதனால் திடீர் பரிசோதனை, முன்னறிவிப்பு இல்லாத கண்காணிப்புகள் இவை நடைபெற சாத்தியமில்லாமல் போயிற்று.

சட்ட நடவடிக்கைகள்:

2007 ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பு ஆய்வறிக்கை இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பாலியல் ரீதியாகவோ, மற்ற வகையிலோ துன்பத்திற்கு ஆளாகிறது என்ற செய்தியை வெளியிட்டவுடன், போன நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு மைல்கல் சட்டம் அமலுக்கு வந்தது. ப்ரிவென்ஷன் ஆப் சைல்ட் செக்சுவல் அஃபென்செஸ் (Prevention of Child Sexual Offense – (POCSO) Act) என்றழைக்கப்படும் இந்த சட்டத்தின் படி, குழந்தைகளின் அப்பாவித்தனத்தை பயன்படுத்திக் கொள்ளுதல், குழந்தைகளை ஆபாசப் படங்களுக்கு பயன்படுத்துவது, நிர்வாணப் படங்கள் எடுப்பது, குழந்தைகளுக்கு அந்தரங்க உறுப்புகளைக் காட்டுவது போன்ற குற்றங்களுக்கு கடுமையான,  தனித்தனியான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

இதைத்தவிர சட்ட நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு உதவும் வகையில் சீரமைக்கப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலம் சீருடை அணியாத ஒரு பெண் காவல் அதிகாரியால், குழந்தை பயப்படாமல் பேச, குழந்தை தேர்வு செய்யும் இடத்தில் பதிவு செய்யப்படும். எந்த சூழ்நிலையிலும் குழந்தையை காவல் நிலையத்தில் நிறுத்திவைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு குழந்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்தும் அதைப் பற்றி காவல்துறையில் புகார் கொடுக்காதவர்களுக்கும் தண்டனை உண்டு.

கற்பழிப்பு பற்றி புகார் கொடுக்கும் சிறுவயதினருக்கு சட்ட உதவியும் உண்டு. இந்த உதவியை மாநில அளவிலான குழுமங்கள், குழந்தை நலப் பாதுகாப்புக் குழுக்கள், பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுக்க சிறார் நீதித்துறையால் நிறுவப்பட்ட சட்டபூர்வமான அமைப்புகள் செய்து தர வேண்டும்.

அரசு வழக்கறிஞர் ஒவ்வொரு வழக்கிற்கும் இருந்தாலும், பெற்றோர்கள் வழக்குப் பதிவு செய்ய வரும்போது ஏற்படும் பலவித இடையூறு களிலிருந்து விடுபடவும், குழந்தைகளை திரும்பத் திரும்ப நடந்ததை சொல் என்று வதைக்காமல் இருக்கவும்,  பெற்றோர்களுக்கு தேவைப்படும் சட்ட உதவிகளைச் செய்யவும், இந்தச் சட்டம் உதவும் என்ற வகையில் இது ஒரு முன்னோடியாக அமைந்திருக்கிறது என்று சொல்லவேண்டும்.

ஆனாலும், இவையெல்லாமே மாயத் தோற்றம் தான். மாநில அளவிலான குழுமங்கள் நிஜத்தில் இருப்பதே இல்லை. சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, POCSO வை அமல் படுத்த மாநில அளவிலான குழுமங்கள் அமைக்கபட்டனவா என்று கேட்டு மாநில அரசுகளின் செயலர்களுக்கு கடிதம் எழுதியதற்கு  ஒடிஷா அரசும், ஹரியான அரசும் மட்டுமே பதில் எழுதின.

இந்தியாவின் எந்த அரசு பணித்துறையும் பதில் எழுதக் கூட ஆர்வம் காட்டவில்லை என்பது நம்மை பீடித்திருக்கும் ஒரு கொடிய வியாதி! எல்லா சட்டங்களையும் போலவே இதுவும் கண்துடைப்பே!

தொடரும் ….

பெற்றோர்களே! குழந்தைகள் பத்திரம்! – 2

முதல் பகுதி 

2007ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பு ஒரு அறிக்கையை அரசாங்க ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி வெளியிட்டது. அதன்படி 13 மாநிலங்களில் 12,500 குழந்தைகளை விசாரித்ததில் சுமார்  57% குழந்தைகள் அதாவது இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு மேல் பாலியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதில் 20% குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். வக்கிரமான பாலியல் இச்சைகளுக்காக பெரியவர்களினால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். இதில் சிறார்களுக்கும் சிறுமிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 57% குழந்தைகளில் பாதிக்கு மேல் சிறார்களே.

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்களில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பரவலாக கண்மூடித்தனமாக எல்லா இடங்களிலும் கலாச்சாரம், மதம், வர்க்கம் பாராமல் நடப்பதுதான். நகரங்களிலும், கிராமங்களிலும், தந்தையர்களாலும், சகோதர்களாலும், உறவினர்களாலும், அக்கம்பக்கத்திலுள்ளவர்களாலும், ஆசிரியர்களாலும், முன்பின் தெரியாதவர்களாலும் நடத்தப்படும் கொடுமை.

இன்னொரு விஷயம்: புது தில்லி மருத்துவ உதவியாளராக இருந்த பெண், மற்றும் 5 வயதுச் சிறுமி இவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்க்கும்போது இந்தக் கொடுமைகள் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, பெண்களைக் கேவலமாகப் பார்க்கும்  ஆண்களாலேயே நடத்தபடுகின்றன என்று முடிவு கட்ட ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது, இல்லையா?

இந்த வெறுக்கத்தக்க செயல் தங்கள் இழிவான பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலாத குடிகார, மனிதர்களால் செய்யப்படுகின்றன; இவர்களை தூக்கில் தொங்க விடுவது அல்லது ஒரேயடியாக ஒழித்துக் கட்டுவது சரியே என்று நினைப்பது வசதியாக இருக்கலாம். ஆனால் ஒரு வீட்டுக்குள்ளே நடக்கும் நிஜத்தை எதிர் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம்.

காக்கப்படும் மௌனம்:

‘ஹக்’ (உரிமை) என்ற குழந்தைகளுக்கான உரிமை மையத்தின் இணை இயக்குனர் இனாக்ஷி கங்குலி சொல்கிறார்: ‘குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகள் இந்த மாதிரியான வன்முறைகளுக்கு அதிகமாக ஆளாவதற்கு காரணம் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிடும்போது குழந்தைகள் தனிமையில் விடப்படுகிறார்கள். நடுத்தர, மேல் வர்க்கக் குழந்தைகள் கூட  இந்த வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மிகவும் நெருக்கமான குடும்ப வலைக்குள் இருப்பதால் அவர்களுக்கு  இதைப்பற்றி பேச யாரும் இருப்பதில்லை;  குடும்பத்தின் ‘மரியாதை’ முக்கியமாகக் கருதப்பட்டு மௌனம் காக்கப் படுகிறது.

பஞ்சாபில் இருக்கும் ஒரு தாயின் மனதில் இருக்கும் ஆறாத வடு, இந்த விஷயத்தில் இந்தியா சாதிக்கும் மௌனத்தின் அடையாளச் சின்னம்.

‘எனது 10 வயதிலிருந்து 19 வயதுவரை என் குடும்ப நபரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் பட்டேன். இத்தனைக்கும் எனக்கு அவர் தந்தையைப் போன்றவர்’

‘இந்த விஷயம் பேசப்படாமலேயே என் மனதில் தங்கி விட்டது. யாரிடமும் பேச வழியில்லை. யாரைப் பற்றி மிக உயர்ந்த எண்ணங்கள் வைத்திருந்தேனோ,  யாரிடம் பாதுகாப்பைத் தேடினேனோ, யார் என்னை மிகவும் நேசிப்பதாகச் சொன்னாரோ, அவராலேயே இழிவாக நடத்தப்பட்ட போது என் மனதிற்குள் ஏதோ நொறுங்கியது. என் மேலேயே எனக்கு வெறுப்பும், குற்ற உணர்ச்சியும் உண்டாயிற்று.’

‘அன்றிலிருந்து யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. எனக்கே நான் அன்னியமானேன். என்னால் யாரையும் நம்ப முடியவில்லை; என் உடலையே நான் வெறுக்கிறேன். ஆடைகள் அணிவதை அசிங்கமாக உணருகிறேன். 31 வருடங்களுக்குப் பின்னும் இந்த நிலை. இன்றும் கூட ஒரு ஆண் ஒரு குழந்தையுடன் நிற்பதைப் பார்த்தால் எனக்குக் குமட்டுகிறது.’

வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால் இந்திய குழந்தை வன்புணர்வு பிரச்னை என்பது நம் சமூகத்தில் ஆழப் புதைந்து இருக்கும் ஒரு இரக்கமற்ற பிரச்னை என்று சொல்லலாம்.

காணாமல் போகும் குழந்தைகள்:

5 வயதுச் சிறுமி காணாமல் போனபோது காவல்துறையினரால் முதல் அறிக்கை பதிவு செய்ய மறுக்கப்பட்டனர் அவளது பெற்றோர்கள். மேலோட்டமாக அவளைத் தேடும் முயற்சி கூட எடுக்கப்படவில்லை. கடைசியில், அதே கட்டிடத்தில் ஒரு அறையில் அடைக்கப் பட்டிருந்த அந்தச் சிறுமியின் அலறல் தான் அவளை கண்டுபிடிக்க உதவியது.

பதிவு செய்யப்பட்ட குற்றங்களை மட்டும் பார்த்தாலே தெரியும் எத்தனை குழந்தைகள் தாங்கள் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள் என்று.

வன்புணர்வுக்கு ஆளான குழந்தைகளின் கதைதான் காணாமல் போன குழந்தைகளின் கதையும். தேசிய குற்றப் பதிவு மையத்தின் அறிக்கைப்படி இந்தியாவில் 8 நிமிடத்திற்கொரு ஒரு குழந்தை காணாமல் போகிறது.

நிதாரி கொலைகள் நினைவுக்கு வருகின்றனவா? கிழக்கு தில்லியில் இருக்கும் பெற்றோர் காணாமல் போன தங்கள் குழந்தைகளைப் பற்றி ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று மறுபடி மறுபடி புகார் கொடுத்ததன்  பேரில் குழந்தைகளின் உடல்கள் கற்பழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன.

எங்கே போகிறார்கள் இந்தக் குழந்தைகள்? ஆயுதம், போதைமருந்துக் கடத்தலுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருக்கும் சட்ட விரோதமான தொழில் குழந்தை கடத்தல்.

மும்பையில் இயங்கி வரும் ஆஸ்தா பரிவார் என்ற தொண்டு நிறுவனம் சிவப்புவிளக்குப் பகுதியில் இளம் பெண்களை கண்டுபிடிப்பது வழக்கம். இவர்கள் தங்களை 18  வயது நிரம்பியவர்களாகச் சொல்லிக் கொள்ளுவார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் 14 அல்லது 15 வயதிற்குட்பட்டவர்களே.

ஒரு முறை இந்தப் பெண்கள் கடத்தப்பட்டவுடன், இவர்களை வைத்து வியாபாரம் செய்யும் காமத் தரகர்கள் இவர்களைப் பற்றிய பொய் தகவல்கள் அடங்கிய ஆவணங்களைத்  தயாரிக்கின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் வெளிநாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடிகிறது.  இதற்காக ஒரு பெரிய கூட்டமே கைகோர்த்து  செயல்படுகிறது.

இந்தக் குழந்தைகள் பெரியவர்களைப் போல யோசிக்கவும், பணமா, ஒழுக்கமா என்ற கேள்வி வரும்போது பணத்தை தேர்ந்தெடுக்கவும் கற்றுக் கொள்ளுகிறார்கள். 6 வயதில் கடத்தப்பட்டு இப்போது 18 வயதாகும் ரேஷ்மா கேட்கிறாள்: ‘ஏன் அப்பாக்களையும் சகோதரர்களையும் வேறு மாதிரி பார்க்கிறீர்கள்? அவர்களும் சராசரி  ஆண்கள்தானே? நாங்கள் படும் துன்பத்தை  எந்த ஒரு மனைவியோ, மகளோ தாங்கிக் கொள்ள முடியாது!’

காவல்துறையினரின் அலட்சியப் போக்கு:

கற்பழிக்கும் தந்தைகள், முகம் தெரியாதவர்கள், வீட்டிற்குள்ளேயோ அல்லது சிவப்பு விளக்குப் பகுதியிலேயோ நடக்கும் வன்புணர்வுகள், பருவம் நிரம்பாத குழந்தைகள், அல்லது இரண்டும்கெட்டான் பருவத்தில் இருக்கும் பெண்கள் – எப்படியாயினும், முறையான நிவர்த்திக்கு வழி கோல வேண்டும். அதற்கு இவர்கள் முதலில் சந்திப்பது காவல் துறையைத்தான்.

ஆஸ்தா பரிவார் தொண்டு நிறுவனத்தின் ஆர்வலர் ஆஷா, தனது தோழி நீலிமாவை அவளது பக்கத்துவீட்டு வாலிபன் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை காவல்துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த காவலர் ஒரு துண்டு சீட்டில் தனது தொலைபேசி எண்ணை எழுதக் கொடுத்து ‘எப்போது நிஜமாகவே பலாத்காரம் நடக்கிறதோ, அப்போது எங்களைக் கூப்பிடு!’ என்றாராம்!

2012 ஆம் ஆண்டு தெஹெல்காவில் வெளியான ஒரு கட்டுரை  பெண்களையும், வன்புணர்வுகளையும் ஆணாதிக்கத்தன்மையுடனேயே பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், காவலர்களை வெளிக்காட்டியது.  இந்த மனநிலையிலேயே குழந்தைகளின் மேல் நடக்கும் கொடுமைகளையும் இவர்கள் அணுகுவது அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

‘இப்போது நிலைமை சற்று பரவாயில்லை.’ என்கிறார் சமூக ஆர்வலர் சுதா திவாரி. இருந்தாலும் இன்னும் சில இடங்களில் காவல்துறையின் இரக்கமற்ற தன்மை தொடருகிறது. பெண் காவலர்கள் இருப்பது உதவுமா என்றால் அதுதான் இல்லை. ‘ஹக்’ ஆர்வலர் பாரதி அலி சொல்கிறார்: ‘பெண் காவலர்கள் இந்த மாதிரி வழக்குகளை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இவ்விஷயங்களை மூடி மறைக்கவே விரும்புகிறார்கள். இந்த கொடுமைகளை அவர்களும் அனுபவிக்கிறார்கள் அல்லது அனுபவித்து இருப்பதால் மற்றவர்களிடம் கருணை காட்ட முன் வருவதில்லை. பெண் காவலர்கள் தங்கள் அலுவலக உடையுடன் வீடு செல்ல விரும்புவதில்லை. அங்கு அவர்களின் அதிகாரம் செல்லுபடியாகாது. வீட்டில் அடியும் உதையும் தான் காத்திருக்கும்.’

வெறுப்பு, தவறான எண்ணங்கள், தினமும் சந்திக்கும் சமூக வெறிச்செயல்கள், இவைகள் மட்டும் காவல்துறையின் இந்த போக்கிற்குக் காரணங்களாக இருக்க முடியாது.

தில்லியில் 5 வயதுக் குழந்தைக்கு நடந்த அநியாயத்தை மூடி மறைக்க காவல்துறை பெற்றோர்களுக்கு லஞ்சம் கொடுக்கத் துணிந்ததற்குக் காரணம் தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையா, அல்லது அவர்களை சுரண்டவா அல்லது தங்களது கண்காணிப்பின் கீழ் இது போல ஓர் கொடூரச் செயல் நடந்தது என்பதை சொல்ல  பயமா தெரியவில்லை.

இனாக்ஷி கங்குலி காவல்துறையினருக்குக் கொடுக்கப்படும் ஊக்கத் தொகை பற்றிக் குறிப்பிடுகிறார்: ‘அவர்கள் பகுதியில் குற்றங்கள் நடக்காமல் இருந்தால் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இது தவறான செய்தியைப் பரப்புகிறது. ஒரு வழக்கை உரிய நேரத்தில் பதிவு செய்து அதை திறம்பட கையாள்வதற்கு அல்லவா ஊக்கத் தொகை கொடுக்கவேண்டும்? அது இல்லாதபோது தொந்திரவு இல்லாமல் பார்த்துக் கொண்டு வரும் வழக்குகளைக் கை கழுவி விடுவதே சுலபமாக இருக்கிறது. தங்கள் ஏரியாவில் குற்றங்களே நடப்பதில்லை என்று நாடகமாடுகிறார்கள் காவல்துறையினர்.’

‘பல சட்டங்கள் எழுத்தில் இருந்தாலும் இவை எத்தனை தூரம் செல்லுபடியாகும் என்பது அந்தந்த காவல் நிலைய மேலதிகாரியைப் பொறுத்தது. சிறிது காலத்திற்கு முன், நாங்கள் மாதாமாதம் குழந்தைகள் நல குழுமங்கள், இளம் குற்றவாளிகளின் நீதித்துறை வாரியம், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் மற்றும் நீதிபதி கலந்து கொள்ளும்  ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். இப்போது வந்திருக்கும் மேலதிகாரி இந்தச் சந்திப்பினால் பயனில்லை என்று கருதுவதால் இப்போது இது நிறுத்தப்பட்டுவிட்டது.’

தில்லி போலீஸ் கமிஷனர் திரு நீரஜ் குமார், ‘என் ராஜினாமா கற்பழிப்பை தவிர்க்கும் என்றால், நான் ஆயிரம் தடவை என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ என்று கூறியது ஓரளவிற்கு சரி. கற்பழிப்புக் குற்றங்களைக் குறைப்பது அவர் கையில் இல்லை என்றாலும்,  அவரது உடனடி நடவடிக்கை நிச்சயம் பலன் அளிக்கும். அவரும் அவரது சகாக்களும் தங்கள் கடமை என்ன என்பதை உணர்ந்தால் போதும்.

மூன்றாவது பகுதி

பெற்றோர்களே! குழந்தைகள் பத்திரம்!

crime against children

ஒரு மாதப் பத்திரிக்கைக்காக குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் ரீதியான அநீதிகளைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுத, ஒரு ஆங்கில செய்தித்தாளில் வந்திருந்த கட்டுரையை மொழி பெயர்க்க வேண்டியிருந்தது.

குழந்தைகள் என்றாலே நமக்கு கள்ளங்கபடமற்ற சிரிப்பும், கவலையில்லாத முகமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் எத்தனை எத்தனையோ குழந்தைகள் வாழ்வில் இவை இல்லவே இல்லை என்பதை அந்த ஆங்கில கட்டுரை மூலம் அறிந்த போது இரண்டு மூன்று நாட்கள் இரவில் தூக்கமே வரவில்லை. இப்படியும் நடக்குமா, என்ன அநியாயம் இது என்று மனது பரிதவித்துப் போயிற்று.

ஒட்டு மொத்த சமுதாயமே குழந்தைகளுக்கு எதிராக இருப்பது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. சொந்த தந்தையாலேயே சின்ன பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது, சொந்தக்காரர்களால் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது என்று எத்தனை எத்தனை கொடுமைகள்! அவரவர்கள் வீட்டிற்குள்ளேயே குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொட்டில் அறைந்தாற்போல சொல்லியிருந்தார்கள் அந்த செய்திதாளில்.

பெற்றோர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்:

முன்பின் தெரியாதவர்களுடன் குழந்தைகளை விடாதீர்கள். இந்த வன்முறைக்கு ஆளாவதில் ஆண் பெண் குழந்தைகள் என்ற வேறுபாடே இல்லை.

குழந்தைகளை தனியே விட்டுவிட்டு பல மணி நேரம் வெளியே போகாதீர்கள்.

குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும். உங்கள் பெண்ணோ, பிள்ளையோ உங்களிடம் வந்து ‘இந்த அங்கிள்/ஆன்டி –யை பிடிக்கவில்லை என்று சொன்னால் குழந்தைகளை கடிந்து கொள்ளாதீர்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கும். உடனே கவனியுங்கள் – அந்த நபரை. அவரது நடவடிக்கை, பார்வை சந்தேகத்திற்கு உரியதாக இருந்தால் அவரை அப்படியே ‘கட்’ பண்ணுங்கள். நீங்கள் இல்லாதபோது/குழந்தைகள் தனிமையில் இருப்பது தெரிந்து  வரும் நபரும் சந்தேகத்திற்கு உரியவரே.

யாராவது அவர்களுக்குப் பிடிக்காத முறையில் அவர்களைக் கட்டிப் பிடிப்பதோ, எங்கெங்கோ தொடுவதோ செய்தால் உடனே உங்களிடம் வந்து சொல்லச் சொல்லுங்கள்.

இதோ நான் மொழி பெயர்த்த கட்டுரை – எடிட் செய்யப்படாதது.

முதல் பகுதி:

இந்தக் கதையைக் கேளுங்கள்: நமது தலைநகரில் ஓர் இளம்பெண் ஒரு கூட்டத்தால் வன்புணர்வுக்கு ஆளான செய்தி உலகையே உலுக்கிய அடுத்த நாள் ஒரு 3½ வயதுச் சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளது ஆடை முழுவதும் இரத்தக்கறையும், வாந்திகறையும்.

அவளது தந்தை ககன் ஷர்மா (பெயர் மாற்றப் பட்டுள்ளது) 2003 ஆம் ஆண்டு கொல்கத்தாவிலிருந்து மேற்கு தில்லியில் உள்ள ஒரு சேரிப் பகுதிக்கு சற்று மேலான வாழ்க்கைக்காக குடி பெயர்ந்தவர்.

இந்தச் சிறு பெண்ணிற்கு முதலிலிருந்தே பள்ளி செல்வதற்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.  இப்போது என்னவாயிற்று என்று அம்மா கேட்டபோது தட்டுத்தடுமாறி தனக்கு நேர்ந்ததை மிகுந்த பீதியுடன் சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு வழுக்கை தலையர் – தன் பள்ளி முதல்வரின் கணவர் – பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறாள். அவர் செய்ததையெல்லாம் பெற்றோர்களிடம் சொன்னால் அவளை உத்தரத்தில் இருக்கும் மின்விசிறியில் கட்டித் தொங்கவிட்டுவிடுவேன் என்று அவர் பயமுறுத்தினாராம்.

அவர் தன்னை பாத்ரூமிற்குள் கூட்டிக் கொண்டுபோய் கீழே படுக்கச் சொல்லி தனது ஆண்குறியையும், விரல்களையும் இவளது  பெண் உறுப்பிற்குள்ளும் மலத்துவாரத்திலும் சொருகியத்தை கூறுகிறாள். இந்தப் பெண் போடும் சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்று தனது அறைக்குள் பெரிதாக இசையை அலறவிடுகிறார்.  இதைப்போல பலமுறை செய்ததாகக் கூறும் இந்தச் சிறுமி இதைப்பற்றி யாரிடமாவது சொன்னால் அவளது பெற்றோர்கள் பலவித கொடூர அனுபவங்களுக்கு ஆளாக நேரும் என்று அந்த வழுக்கைத் தலையர் பயமுறுத்தியதாகவும் சொல்லுகிறாள்.

அந்தக் குழந்தையின் வாய் முழுவதும் புண்கள். தான் அவளை வன்புணர்வு செய்யும்போது அவள் சுயநினைவில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரமோத் மாலிக் என்ற அந்தச் சண்டாளன் கொடுத்த மருந்துகளின் விளைவு இது!

இந்தச் சம்பவத்தின் கொடூரத்திலிருந்து நாம் வெளிவரும் முன், பிறகு நடந்தது என்ன என்று பார்த்தால் கொடூரத்திலும் கொடூரம் அது.

காவல் நிலையத்திற்கு சென்று முதல் அறிக்கை பதிவு செய்ய பெற்றோர்களுக்கு 12 மணி நேரம் ஆகியிருக்கிறது.

அங்கிருந்த ஒரு பெண் காவல் அதிகாரி பெற்றோர்களைப் பார்த்து  ‘மானமில்லாதவர்கள்’  இருக்கும் பகுதியில் வசிக்கும் உங்களுக்கு மானம் ஒரு கேடா என்று இகழ்ச்சியாகக் கேட்கிறார்.  அந்தச் சிறுமி 3 காவலர்களின் முன்பு மறுபடியும் தனக்கு நேர்ந்ததை சொல்ல வைக்கப்படுகிறாள். விசாரணை ஆரம்பிக்கும் முன்பு பெண் அதிகாரி சிறுமியிடம் கூறுகிறார்:

‘நீ உண்மையைக் கூறவேண்டும் இல்லையென்றால் உன் மீது பூச்சிகளை ஊர விடுவேன்; உன் அம்மாவையும், அப்பாவையும் அடித்து துவைத்துவிடுவேன்’

இத்தனை மிரட்டல்களுக்குப் பிறகு அந்தப் பெண் தன் அம்மாவிடம் கூறியதை திரும்பவும் கூறுகிறாள். மாஜிஸ்திரேட் முன் இன்னொமொரு தடவை. மருத்துவ பரிசோதகர் இது வன்புணர்வு இல்லை என்று குறிப்பிட்டு தெளிவில்லாத ஒரு அறிக்கையைக் கொடுக்கிறார். தலைமையாசிரியர் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜாமீனில் வெளி வந்துவிடுகிறார். ககன் ஷர்மாவின் வீட்டு சொந்தக்காரர் இவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்லுகிறார். இவர்கள் இன்னும் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்குத் தெரியமா, பத்து வருடங்களில் 48,838 குழந்தைகள் வன்புணர்வுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் தேசிய குற்றப் பதிவு மையம் தருவது. இது நாட்டில் நடக்கும் குற்றங்களில் 25% மட்டுமே. 2001 லிருந்து 2011 க்குள் குழந்தை வன்புணர்வு நிகழ்வுகள் திடுக்கிடும் அளவில் 336% அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 3% மட்டுமே காவல் நிலையத்தை அணுகுகிறார்கள். குழந்தை வன்புணர்வு விஷயத்தை எவ்வளவு மெத்தனமாக எடுத்துக் கொள்கிறோம் என்பதின் ஆழம்  புரிகிறதா?

இந்த ஏப்ரல் மாதத்தில் கிழக்கு தில்லியில் ஒரு 5 வயதுச் சிறுமி இரண்டு குடிகார பக்கத்து வீட்டு ஆசாமிகளால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது கழுத்தை நெறிப்பதற்கு முன் அவளது அந்தரங்க உறுப்பில் மெழுகுவர்த்திகளையும், பிளாஸ்டிக் கூந்தல் தைல பாட்டிகளையும் சொருகியிருக்கிறார்கள் இந்தக் குடிகாரர்கள்.

இந்த விஷயம் ஊடகங்களில் வந்த பின்புதான் இதுவரை அலட்சியப் படுத்தப்பட்டிருந்த  இதைபோன்ற கட்டுப்பாடற்ற குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.

9 வயதுச் சிறுமி அசாமில் கடத்தப்பட்டு, வன்முறைக் கும்பலால் வன்புணர்வுக்கு ஆளாகி, கடைசியில் தொண்டைஅறுபட்ட நிலையில் அவளது உடல் கிடைத்தது,

10 வயது தலித் சிறுமி 35 வயது ரஜபுத்திரன் ஒருவனால் உத்திரப் பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்டது,

போபாலில் தனது மூன்று வயது மகளை ஒரு கம்பவுண்டர் தன் மனைவி அவர்களது 5 வயது மகனை பள்ளியில் விடப்போகும்போது கற்பழித்தது,

திரிபுராவில் 10 வயதுப் பெண்ணை வன்புணர்வு செய்ததற்காக ஒரு 75 வயதுக்காரர் கைதானது என்று

இந்த கதைகள் எல்லாம் தாமதாமாகவேனும் வெளிச்சத்திற்கு வந்தது நல்ல ஒரு விஷயம் என்றாலும், மிகவும் பரபரப்பான, புது தில்லி கற்பழிப்புப் போல இருக்கும் குற்றங்கள், ஒருதலை பட்சமான செய்திகள் மட்டுமே ஊடகங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளி வருவது வருத்தமான விஷயம். இதனால் நிஜமான பின்னணி தெரிவது இல்லை. சிறார்களின் மேல் நடத்தப்படும் வன்புணர்வு என்பது இந்தியா எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளில்  ஒரு சிறு அங்கமே.

அடுத்த பகுதி