Monthly Archives: பிப்ரவரி 2014

வலி நல்லது!

pains

பிப்ரவரி மாதம் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான எனது கட்டுரை

‘களிமண்ணாகவே இருக்க விருப்பமா? என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது.  நான் கொடுத்திருந்த தலைப்பு : வலி நல்லது

ஒரு நாள் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு வலைப்பதிவு – அதன் தலைப்பு: என் கவனத்தைக் கவர்ந்தது. ‘Don’t waste your pains’

 

என்ன தலைப்பு இது? என்ன சொல்ல வருகிறார்  என்று புருவங்களில் முடிச்சுடன் படிக்க ஆரம்பித்தேன். படித்தபின் வியப்பின் உச்சத்திற்கே போய்விட்டேன், எவ்வளவு பெரிய உண்மையை அவர் விளக்கி இருக்கிறார் என்று. ரொம்பவும் சஸ்பென்ஸ் வைக்காமல் அதை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

‘நான் எத்தனை பாடுபட்டிருக்கேன் தெரியுமா? வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்திலேயும் துன்பங்கள், அவமானங்கள், வேதனைகள், வலிகள்…. ‘

 

இப்படி நம்மில் பலர் சொல்கிறோம். இந்த மாதிரி துன்பங்கள், வறுமை, அவமானங்கள் இவற்றிலிருந்து நீங்கள் எதுவும் கற்றுக் கொள்ளவில்லையானால் நீங்கள் உங்கள் வலிகளை வீணாக்குகிறீர்கள் என்கிறார்.  இவர் சொல்வதை மேலும் கேட்போமா?

 

“என் வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது என்னை மாற்றவும் என்னை சரியான வழியில் நடத்துவும் என்றும் நம்புகிறேன் நான்.

 

என் இளமைக்காலம் அப்படியொன்றும் துன்பமயமாக இல்லை; அதே சமயம் சுலபமாகவும் இல்லை. மனம் சோர்வாக இருக்கும்போது என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம்; நிறைய நடக்ககூடாதவைகள் நடந்து விட்டன என்று தோன்றும். நல்ல மனநிலையில் இருக்கையில் ‘அப்படித் துன்பப்பட்டதால் தான் நான் ஒரு நல்ல பெண்மணியாக இன்று உருவாகியிருக்கிறேன்’ என்று தோன்றும்.

 

இந்தத் துன்பங்கள் எல்லாம் என்னை பலசாலி ஆக்கியிருக்கிறது. நான் எவ்வளவு பலசாலி என்று என்னை உணர வைத்திருக்கிறது. இந்த மனோபலம் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் தெரிந்து கொண்டிருக்கிறேன். வாழ்வின் அக்கரையிலிருந்து பார்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால் மற்றவர்களின் வலிகளை உணர முடிகிறது. வாழ்க்கை சுலபமாக இருந்திருக்கலாம். சுலபமாக இருக்கும் வாழ்க்கை நிச்சயம் நல்லபடியாக இருக்கும் என்று சொல்லமுடியாதே! எனக்கு ரோஜா மலர்களால் ஆன பாதை இருந்திருந்தால் நான் இப்போது இருக்கும் நானாக இருந்திருக்க மாட்டேன்.

 

சில சமயங்களில் நம் வலிகள் தான் நம்முடன் சத்தமாகப் பேசி நம்மை நல்வழிப் படுத்தும் ஆசிரியர் என்று தோன்றும்.

 

ஒரு அறிஞர்  கூறுகிறார்: ‘நமது சந்தோஷங்களின் போது இறைவன் நம் காதுகளில் கிசுகிசுப்பாகப் பேசுகிறான். நாம் பகுத்தறிவுடன் செயல்படும்போது சாதாரண குரலில் பேசுகிறான். ஆனால் வாழ்க்கையில் நாம் வலியை உணரும்போது சத்தம் போட்டு பேசுகிறான். வலிதான் இந்த காது கேளாத உலகத்தை தட்டி எழுப்ப அவன் பயன்படுத்தும் ஒலிபெருக்கி’ என்று.

 

அவர் சொல்வது முற்றிலும் சரி. நல்ல விஷயங்கள் நம் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன. ஆனால் கெட்ட விஷயங்கள்தான் நம்மை முட்டிப்போட வைத்து, நம் தவறுகளை நமக்கு உணர்த்தி, நம்மை வளரச்செய்து நம்மை மாற்றவும் செய்கின்றன. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பருவமும் ஒரு பயனுக்காகவே. இன்றைக்கு நான் அனுபவிக்கும் இன்னல்கள் நாளைய இன்னல்களை எதிர்கொள்ள எனக்கு உதவுகின்றன. அவைகளிலிருந்து நான் கற்றுக்கொள்ளும் பாடங்கள் என்னை  மெருகேற்றுகின்றன’.

 

இந்தக் கட்டுரையாளர் சொன்னதையே இந்தக் கதையும் சொல்லுகிறது, படியுங்கள்.

 

ஒரு தம்பதி. அவர்களுக்கு அழகிய கலைப் பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் அதிகம். ஒரு முறை  ஒரு அலங்காரப் பொருட்கள் கடைக்குச் சென்றனர். அங்கு ஒரு தேநீர் கோப்பை அவர்களின் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது. அதைக் கையில் எடுத்து வைத்துக்  கொண்டு ரசித்துக் கொண்டிருந்த போது அது பேச ஆரம்பித்தது.

 

‘நான் எப்போதுமே இதைப் போல ஒரு அழகிய தேநீர்க் கோப்பையாக இருந்ததில்லை. முதலில் நான் ஒரு சிவப்புக் களிமண்ணாக இருந்தேன். என்னைக் கைகளால் நன்கு பிசைந்து பிசைந்து தட்டித்தட்டிக் கொடுத்தார் எனது முதலாளி. ‘ என்னை விட்டுவிடுங்கள்’ என்று சத்தம் போட்டேன். ‘இப்போதைக்கு உன்னை விடுவதாக இல்லை’ என்றார். பிறகு என்னை சக்கரத்தில் வைத்து சுற்ற ஆரம்பித்தார். ‘எனக்கு தலைசுற்றல் தாங்கவில்லை, என்னை விட்டுவிடுங்கள்’ என்று கத்தினேன்.  ‘இப்போது இல்லை’ என்றார் அவர். பிறகு என்னை கொதிக்கும் உலையில் வைத்தார். கடவுளே! இப்படி ஒரு சூட்டை நான் அனுபவித்ததே இல்லையே! ஓ ஓவென்று கதறினேன். ‘என்னை வெளியில் விடுங்கள், வெளியில் விடுங்கள்’ என்று கூப்பாடு போட்டேன். எதற்காக என்னை இப்படிச் சுட வேண்டும் என்று புரியவே இல்லை. என்ன மனிதர் இவர்!

 

ஒரு வழியாகக் உலையிலிருந்து என்னை எடுத்து வெளியில் வைத்தார். சூடு மெல்லமெல்லக் குறையத் தொடங்கியது. அப்பாடி என்று பெருமூச்செறிந்தேன். சற்று ஆறியவுடன் என் மேல் வண்ணக் கலவைகளைக் கொண்டு ஓவியம் தீட்ட ஆரம்பித்தார். வண்ணங்களின் வாசனையை என்னால் தாங்கவே முடியவில்லை. மூச்சு முட்டியது. ‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’ என்று கெஞ்சினேன். ஊஹூம் அவர் காதில் என் கெஞ்சல் விழவேயில்லை.

 

மறுபடியும் என்னை உலையில் வைத்தார். முதலில் நான் பட்ட வேதனை அடங்குமுன் இப்படியா? ஆனால் அந்த சூடு தேவலை போலிருந்தது. இந்த சூடு அதைப்போல இருமடங்கு வேதனையைக் கொடுத்தது. கதறினேன். அனல் தாங்க முடியாமல் புழுவாகத் துடித்தேன்.  துவண்டேன். எனக்குப் புரிந்தது, இந்த வேதனையிலிருந்து எனக்கு விடிவு இல்லை. இனி இப்படி ஒரு துன்பத்தை தாங்கும் வலிமை என்னிடம் இல்லை. நான் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தபோது என்னை உலையிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். ஒரு மணி நேரம் கழித்து என்னை ஒரு கண்ணாடியில் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். வியந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை! நானா? இந்த தேநீர் கோப்பை எத்தனை அழகாக இருக்கிறது! இல்லையில்லை நான் எத்தனை அழகாக இருக்கிறேன்!

 

என் முதலாளி சொன்னார்: ‘ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். இத்தனை கஷ்டங்கள் உனக்கு ஏற்படவில்லை என்றால் நீ வெறும் களிமண்ணாகவே இருந்து உலர்ந்து போயிருப்பாய். உன்னை சக்கரத்தில் வைத்து சுற்றும்போது நீ கத்தினாய். அப்போது உன்னை நான் விட்டிருந்தால் உடைந்து போயிருப்பாய். உலையில் உன்னை வைக்கவில்லை என்றால் நீ இறுகி இருக்க மாட்டாய். வண்ணக் கலவைகள் உன் உடம்பில் ஓவியமாக மாற உன்னை மறுபடி சுட வேண்டியிருந்தது. நீ இப்படித்தான் ஆக வேண்டும் என்று நான் மனதில் நினைத்தபடி உன்னை உருமாற்றி விட்டேன்’.

 

இந்த முதலாளி போலத்தான் கடவுளும். கடவுள் நம்மை உருவாக்கும் குயவன். அவர் மனதில் நாம் எப்படி உருவாக வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்படி உருவாகவே நமக்கு வலிகளையும், வேதனைகளையும் கொடுக்கிறார். நம்முடைய பலங்கள், பலவீனங்கள் எல்லாமே அவருக்குத் தெரியும்.

அவர் கொடுக்கும் வலிகளையும் வேதனைகளையும் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து கற்போம் வாழ்க்கை என்னும் கல்வியை.

முதலில் குறிப்பிட்ட கட்டுரை, தேநீர் கோப்பையின் கதை இரண்டையும் படித்ததிலிருந்து ஒரு விஷயத்தை நான் உறுதியாகத் தெரிந்து கொண்டுள்ளேன். அது: எந்தப் பாடமும் கற்காமல் என் வலிகளை மறக்க நான் விரும்புவதில்லை. வலிகள் நிறைந்த பாதைகளைக் கடந்து சென்று ஒரு வலிமையான பெண்மணியாக, பக்குவப்பட்ட பெண்மணியாக உருவாக வலிகளை வீணாக்காதீர்கள்! வலி நல்லது!