Monthly Archives: ஏப்ரல் 2014

பாம்பு 5

பாம்பு (5)

 

நேத்து ராத்திரி என் கனவுல ஒரு பாம்பு வந்து என்னைக் கேட்டிச்சு, ஐயா கல்பட்டாரே எங்களெப் பத்தி கட்டுரை எளுதி எங்கெளெ ஒரே அடியா வெஷம் உள்ளவங்க, வெஷமம் செய்யறவங்கன்னு டீவீ சீரியலுங்களுலெ வர வில்லீங்க மாதிரி ஜனங்களுக்குக் காட்டீட்டீங்களே.  எங்களுக்கும் மனுசங்களுக்கும் ஆண்டாண்டு காலமா இருந்து வந்திருக்கிற தொடர்பு பத்தி ஒரு வார்த்தெ எளுதினீங்களா?  இது என்னங்க ஓர வஞ்செனெ?” ன்னு.  அதன் விளைவுதான் இந்த அஞ்சாவது கட்டுரை.

 

மனிதன் இந்த உலகில் தோன்றிய நாள் முதல் இன்று வரை பாம்பும் மனிதனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

 

Inline image 1

 

ஆதி மனிதன் ஆதாமும் ஏவாளும் ஒற்றுமை இன்றி வாழ்ந்தனர்.  ஆதாம் ஒரு சோம்பேரி.  உண்பதும் உறங்குவதுமே அவன் தொழில்.  ஏவாளின் வேலையோ அவனுக்கு உணவு தயார் செய்வது, நிலத்தைக் கொத்தி சீராக்கி பயிர் செய்வது இத்தியாதி.

 

அவர்களைப் படைத்த கடவுள் அவர்களை அறிவு புகட்டும் ஒரு மரத்தின் பழத்தினைத் தின்னக் கூடாது ஏனெனில் அது கெட்டது என்று சொல்லி இருந்தார்.

 

ஒரு நாள் ஏவாள் வேலை செய்து களைத்துத் தன் நிலையைப் பற்றி நொந்து கொண்டிருந்த போது அங்கு தோன்றிய பாம்பு அவளுடன் இதமாகப் பேசி இறைவன் தடை விதித்திருந்த அறிவு மரத்தின் பழத்தைத் தின்னத் தூண்டியது.  ஏவாள் தின்பதற்கு முன் அவள் கண்ணில் படாமல் அந்தப் பழத்தினைக் கொத்தி அதில் தன் விஷத்தை ஓரளவு ஏற்றி விட்டது.  பழத்தைத் தின்ற ஏவாள் தான் தின்றதோடு நிறுத்தாமல் ஆதாமின் உணவிலும் அதைக் கலந்தளித்து விட்டாள்.  கோபமடைந்த கடவுள் தன் கட்டுப் பாட்டை மீறிய ஆதாம் எவாளை ஈடன் நந்த வனத்தில் இருந்து விரட்டி விட்டார்.

 

ஈடனை விட்டு வெளியேறும் போது ஏவாள் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் எனச் சொல்லி ஆதாமின் கன்னத்தில் முத்தமிட்டாள்.  ஆதாம் ஏவாளை அன்புடன் பார்க்க, அணைக்க அதனைத் தொடர்ந்து நடந்ததின் விளைவே இன்றைய மனித சமுதாயம்.  கடவுளின் எண்ணத்தில் பாம்பு ஒரு கெட்ட பிராணி.  ஆதாம் எவாள் மனதிலோ பாம்பு அவர்களை சேர்த்து வைத்த ஒரு தேவ லோகத்து ராணி.  இது விக்கிபீடியாவில் கண்ட செய்தி..

 

காடுகளில் தனித் தனியே சுற்றித் திரிந்த ஆதி மனிதன் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழ ஆரம்பித்தது கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான்.  மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தது நதிகளைச் சுற்றிதான்.  முதலில் மெஸபொடோமியாவில் (இன்றைய ஈராக்கும், சிரியா, துருக்கி, ஈரான் இவைகளின் சில பகுதிகளும் சேர்ந்தது ஆரம்பித்தது மனித சமுதாயம்.  பின்னர் எகிப்து நாட்டில் உள்ள நைல் நதிப் பிரதேசம், இந்தியாவில் உள்ள சிந்து நதிப் பிரதேசம் என்று மனிதன் நதிகளைச் சுற்றியே வாழத் தொடங்கினான்.

 

அப்படி வாழ ஆரம்பித்த மனிதர்கள் மனதில் எல்லாம் பாம்பிற்கு ஒரு நீங்காத இடம்.  எப்படி எனப் பார்க்கலாம்.

மெஸபொடோமிய இதிகாசங்கள் படி லிலித் என்பவளொரு ஒழுக்கம் கெட்ட பெண்.  புயலின் சின்னம் அவள். வியாதிகள், இறப்பு அவற்றுக்கும் காரண கர்த்தா அவளே. 

 

அவள் மானம் காக்க உடலினைச் சுற்றிக் கொள்வது ஒரு பாம்பினைத்தான்.

Inline image 2

கிரேக்கர்களின் இதிகாசங்கள் படி பாம்பு மிகவும் கெட்ட ஜந்து.  மெட்யூஸா என்பவள் மிகக் கொடியவள்.  அவள் தலையில் மயிர்களுக்குப் பதிலாக பாம்புகள் இருக்கும்.

 

Inline image 1

  மெட்யுஸா   

 

அவர் கழுத்தில் இருப்பது கார்டெர எனப்படும் அமெரிக்க நாட்டு ஓலைப் பாம்பு.

Inline image 2

இன்நாளைய மெட்யுஸா

 

எகிப்திய சரித்திரத்தில் பாம்புகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.  அவை ஒரு கடவுளாக வழிபடப் பட்டன.  எகிப்திய மன்னர்களான பாரோக்களின் மகுடத்தில் இடம் பிடித்தவை பாம்புகள்.

 

எகிப்தியர் பாம்புகளைக் கெட்ட காரியங்களுக்கும் பயன் படுத்தினர்.  எதிரிகளைக் கொல்வதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் பாம்புகள் பயன் படுத்தப் பட்டன. (அழகி கிளியோபாட்ராவின் தற்கொலை ஒரு உதாரணத்திற்கு.)

 

சிந்து நதி சமுதாயம் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  பாம்புகள் இந்து மதத்தில் பின்னிப் பிணைந்த ஒன்று.

 

Inline image 3

பரமசிவனின் கழுத்தில் நல்ல பாம்பு ஆபரணம்

Inline image 4

மகாவிஷ்ணு படுத்துறங்குவது பாம்புப் படுக்கையில்.

Inline image 5

கிருஷ்ணன் நர்த்தனமாடியது காளிங்கன் என்ற பாம்பின்      தலைமேல். 

Inline image 6

முருகனின் வாகனமான மயிலின் கால்களில் ஒரு நல்ல பாம்பு

இராமாயண காவியத்தில் இந்திரஜித் இலக்குமணன் மீது ஏவியது நாகாஸ்திரம்.  மகாபாரத யுத்தத்தில் கர்ணன் அர்ஜுனன் மீது விட்டதும் நாகாஸ்திரமே.  அவளவு ஏன்.  இன்று நம் நாட்டிலும் இருக்கிறது ஒரு நாகா ஏவுகணை.

 

இதிகாச புராணங்களை விட்டு விஞ்ஞான உலகுக்கு வருவோம். மருத்துவ உலகில் நோயாற்றும் சின்னமான அஸ்க்ளிபியஸின் கைத்தடி என்றழைக்கப் படுவது ஒற்றைப் பாம்பொன்று சுற்றிய கைத்தடி.

 

கிரேக்கர்கள் வைத்தியத் துறைக்கு உபயோகிக்கும் சின்னம் காடூசியஸ் சின்னம்.  இது ஒரு கைத்தடியில் இரண்டுபாம்புகள் சுற்றி இருப்பது போல அமைந்த ஒன்று.

 

இந்திய மருத்துவக் கழகம், அமெரிக்க ராணுவ மருத்துவ பிரிவு இவற்றின் சின்னமும் காடூசியஸ் சின்னம்தான்.

Inline image 1                                                           Inline image 2

காடூசியஸ் சின்னம்                         அஸ்க்ளீபியஸ்   சின்னம்  

Inline image 3                                                        Inline image 4

இந்திய மருத்துவக் கழகம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின்            மருத்துவப்  பிரிவு  இவற்றின் சின்னமான  காடூசியஸ்  சின்னம்

மருத்துவர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கும் தொழில் துறையின் சின்னம் என்ன என்று தெரியுமா?  ஹைஜியாவின் கோப்பை (Bowl of Hygieia).  ஹைஜியா என்பவள் உடல் நலம் காக்கும் கிரேக்க பெண் தெய்வம்.

Inline image 5

ஹைஜியாவின் கோப்பை

பாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு பின்னிப் பிணைந்த தொடர்புதானே?

 

பாம்புகளைப் பற்றி எழுதும்போது பாம்புகளுக்கும் மனிதனுக்கும் ஆண்டாண்டுகளாக இருந்துவரும் தொடர்பு பற்றி எழுதாது என் தவறுதானே  அதை இப்போது ஓரளவுக்கு சரி செய்து விடேன் என நினைக்கிறேன்.

 

இத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.

 

நடராஜன் கல்பட்டு

 

நன்றி: திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு

 

 

 

பாம்பு – 4

பாம்பு   பாம்பு 2  பாம்பு 3  பாம்புக்குக் காது கேட்குமா?

பாம்பு  (4)

 

பாம்புக் கடிக்கு வைத்தியம் பற்றிப் பார்க்கப் போகுமுன் வேறு சில பாம்புகள் பற்றியும் பார்க்கலாமா?

 

விஷம் துப்பும் நாகம்  (Spitting cobra) என்ற ஒரு பாம்பு ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகிறது இந்த வகைப்பாம்பு..

Inline image 6

விஷம் துப்பும் நாகம்

இந்தப் பாம்பு தன்னைத் தாக்க வரும் எதிரிகளின் முகத்தில் விஷத்துளிகளைத் தெறிக்குமாம்.  எப்படி என்கிறீர்களா?  தன் விஷப் பையினைத் தசைகளால் சுருக்கி விஷத் துளிகள் விஷப் பற்களின் துவாரம் வழியே வெளி வரும் போது வாயினால் காற்றை திடீரெனெ பலத்துடன் வெளி விடுமாம்.  அப்போது விஷப் பற்களின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் மிக மிக நுண்ணிய துளிகளாக மாறி சுமார் 6 முதல் 10 அடி வரை பாயும்.  இந்தப் பாம்பு எதிரியின் கண்களைக் குறி வைக்குமாம்.  இவ் விஷத் துளிகள்    காயம் எதுவும் இல்லாத தோலில் விழுந்தால் ஒரு ஆபத்தும் இல்லை.  ஆனால் கண்களில் விழுந்தாலோ உடனே வைத்தியம் செய்யா விடில் கண் பார்வை போய் விடும்.

கிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பு (Rattle snake) எனப்படும் மிகக் கொடிய விஷம் கொண்ட ஒரு வகைப்பாம்பு அமெரிக்காவின் வரண்ட தென் மாகாணங்களில் காணப்படும்.  இதன் வால் நுனி உடலில் இருந்து மாறு பட்டுக் காணப் படும். இது எதிரிகளை எச்சரிக்க வாலை வேகமாக ஆட்டும்.  அப்போது ஒரு கிலுகிலுப்பையை ஆட்டியது போன்ற ஒலி கிளம்பும்.

Inline image 5

கிலுகிலுப்பை வால் கொண்ட பாம்பு

கிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பின் விஷம் முக்கியமாக நம் ரத்த மண்டலத்தைத் தாக்கும்.  ரத்தம் தனது உறையும் தன்மையை இழக்கும்.  மேலும் கடி பட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களின் புரதப்பொருட்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரியச் செய்யும்.  அதனால் கிலு கிலுப்பைப் பாம்பு கடி பட்டவர்கள் உடனே வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் கூட சில சமயம் கடி பட்ட உருப்புகளை அவர் இழக்க நேரிடும்.

 

கடல் வாழ் பாம்புகள் :  பாம்புகள் நிலத்தில் மட்டும்தான் வாழும் என்பதில்லை. நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன.  அவற்றில் கடல் வாழ் பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை.  இவை கடலில் வாழ்ந்தாலும் மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதிள்கள் கிடையாது.  ஆகவே சுவாசிப்பதற்காக அவ்வப்போது தலையை நீருக்கு வெளியே கொண்டு வரவேண்டும்.  இந்தப் பாம்புகளின் வால் பட்டையாயிருக்கும்.  அதை அவை நீரில் நீந்திச் செல்ல துடுப்பு போல உபயோகிக்கும்.

Inline image 4

மஞ்சள் உதடுகள் கொண்ட கடல் கட்டு விரியன்

 

Inline image 3

பாம்பின் விஷம் : நல்ல பாம்பு, கட்டு விரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம்.(Neurotoxin)  இவ்விஷம் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் பாலமாய் உள்ள திசுக்களைச் செயலிழக்கச் செய்யும்.  அதனால் நம் உடலில் உள்ள இச்சா தசை அனிச்சா தசை இரண்டுமே வேலை செய்யாது.  அதன் விளைவாக தன்னிச்சையாகச் செயல் படும் நுரை ஈறல், இருதயம் இரண்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளும்.  உயிரும் பிரியும்.

 

கட்டு விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைப் போல பதினாறு மடங்கு வீரியம் உடையது.

 

கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் சற்று மாறுபட்டது.  அது ரத்த மண்டலத்தைத் தாக்கும் விஷம்(Heamotoxin).  ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை அழிக்கும்.  ரத்தம் உறைவதைத் தடுக்கும்.  உடல் உறுப்புகளின் செயலை அழிக்கும்.  முக்கியமாக மூத்திரக் காய்களை செயல் இழக்கச்செய்யும்.

 

பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கும் மருந்து பாம்பின் விஷத்தில் இருந்துதான் தயாரிக்கப் படுகிறது.  இந்தியாவில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் இது தயாரிக்கப் படுகிறது.  இம் மருந்து தயாரிக்க ஒரு குதிரைக்கு  வீரியம் மிகவும் குறைக்கப் பட்ட விஷத்தினை ஊசி மூலம் ஏற்றுவர்.  பின் தினமும் மெல்ல மெல்ல விஷத்தின் வீரியம் அதிகரிக்கப் படுகிறது.  குதிரையின் உடலில் இந்த விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல வளருகிறது.  எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக வளர்ந்த பின் குதிரையின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து விஷம் முறியடிக்கும் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.

 

செயற்கை முறையில் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அது நடந்தால் பாம்புக் கடி முறிவுக்கான மருந்தின் தட்டுப் பாடு நீங்கும்.

 

இருளர்களும் பாம்புகளும் :  தமிழ் நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஜில்லாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருளர்கள் என்ற ஒரு பழங்குடி வகுப்பினர் வசிக்கின்றனர்.  (இந்த இருளர்கள் மத்தியதரைக் கடல் நாடான அல்பேனியாவிலும் இருக்கின்றார்களாம்!)

 

இருளர்களின் முக்கியத் தொழில் பாம்பு, எலி பிடித்தல்.  பிள்ளைப் பிராயத்திலேயே இத்தொழிலை கற்க ஆரம்பித்து விடுகிறார்கள் இவர்கள்.  பேசும் மொழி தமிழும் தெலுங்கும் கலந்த ஒன்று.  பயிர்கள் நடவு, அறுவடை காலங்களில் அன்றாட விவசாயக் கூலிகளாக வேலையும் செய்கின்றனர்.

 

1972ல் இந்திய வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வரும் வரை இவர்கள் பிடித்த பாம்புகளைத் தோலுரித்து வெளி நாடுகளுக்கு பாம்பின் தோலை ஏற்றுமதி செய்வோருக்கு விற்று வந்தனர்.

 

தானியகளை அதிக அளவில் (25 சதவிகிதத்துக்கு மேல்) தின்று தீர்ப்பது எலிகள் என்பதாலும்,  அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாம்புகள் என்பதாலும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டப்படிபாம்புகளைப் பிடிப்பதும், பாம்புத் தோல் ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப் பட்டது.  இதனால் வருவாய் இழந்த இருளர்கள் வறுமையில் வாட ஆரம்பித்தனர்.

 

இருளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டாகர் என்பவரும் (சென்னை கிண்டி பாம்புகள் பூங்கா, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைகள் பண்ணை இவைகள் தோன்றக் காரணமாய் இருந்தவர்மற்றும் ஒத்த கருத்துடையவர்களுமாகச் சேர்ந்து இருளர் கூட்டுறவுச் சங்கத்தினை ஆரம்பித்தனர்.  இந்த சங்கம், அங்கத்தினர்கள் பிடித்து வரும் ஒவ்வொரு விஷப் பாம்புக்கும் ரூ.150/– கொடுக்கிறது.

 

இவர்கள் பிடித்து வரும் பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கப் படுகிறது.  மூன்று வாரங்கள் வைத்திருந்துபாம்புகளிலிருந்து விஷம் கறந்த பின் அவை மீண்டும் காட்டிற்குள் விட்டு விடப் படுகின்றன.

 

Inline image 1

பாம்பின் விஷம் கறத்தல்

சர்வதேசச் சந்தையில் ஒரு கிராம் விரியன் பாம்பின் விஷம் சுமார் 2,000 டாலர்கள்.  நல்ல பாம்பின் விஷத்தின் விலை குறைவு.  சுமார் 1,000 டாலர்களே.  காரணம் நல்ல பாம்புகள் அதிக அளவில் கிடைப்பதுதான்.

 

கறந்து சேகரிக்கப் பட்ட பாம்பின் விஷம் திரவ நிலையில் இருக்கும்.  அதற்கு அதீதக் குளிரூட்டி பொடியாக மாற்றி சிறிய கண்ணாடிக் குழாய்களில் அடைத்து பாம்புக் கடிக்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப் படுகிறது.

 

பாம்புக் கடியும் மாந்திரீகமும் மந்திரத்தில் மாங்காய் விழுமோ விழாதோ எனக்குத் தெரியாது.  ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட நாட்களில் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த என் தந்தை சொன்ன ஒரு செய்தி என் ஞாபகத்துக்கு வருகிறது.  அந்த நாட்களில் ஒரு ரயில் நிலய இயக்குனர் (Station master) பாம்புக் கடிக்கு மந்திரிப்பதில் வல்லவராம்.  எவருக்கு பாம்பு கடித்தாலும் உடனே அவருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினால் அவர் எதோ மந்திரம் ஜபித்து தான் அணிந்துள்ள துணியிலிருந்து ஒரு சிறிய துண்டைக் கிழித்துப் போடுவாராம்.  அதே சமயம் அது வரை படுத்திருந்த பாம்புக் கடி பட்ட மனிதர் எழுந்து உட்காருவாராம்.  அன்றைய அரசாங்கம் எல்லா ரயில் நிலய இயக்குனர்களுக்கும் ஒரு ஆணை பிறப்பித்திருந்ததாம், எந்த ஒரு ரயில் நிலையத்திலும் எந்த வேளையிலும் ஒருவர் வந்து இன்னாரை பாம்பு கடித்து விட்டது என்று சொன்னால் அந்த செய்தி உடனே அந்த குறிப்பிட்ட நிலைய இயக்குன்ருக்கு இலவசமாகத் தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று. இன்நாட்களில் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்களோ  இல்லையோ தெரியாது.  ஆனால் மந்திரிப்பதாகச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

 

இனி ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்றால் செய்யக் கூடாதவை என்னென்ன, செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

 

முதலில் செய்யக் கூடாதவை பற்றி.

 

1.  பதட்ட மடையாதீர்கள்.  நீங்களும் பதடமடைந்து கடி பட்டவரையும் பதட்டம் அடையச் செய்யாதீர்கள்.  பதட்டம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து விஷம் உடலில் பரவுவதை துரிதப் படுத்தும்.

 

2.  கடி பட்டவர் மேல் கைகளால் தட்டுவதும், கடி பட்ட இடத்தினைத் தேய்ப்பதும் கூடவே கூடாது.  இதனாலும் விஷம் உடலில் வேகமாகப் பறவும்.

 

3.  கடி பட்ட இடத்தில் கத்தியால் கீறி வாயினால் ரத்த்தோடு விஷத்தையும் உரிஞ்சித் துப்பிவிட முயற்சி செய்யாதீர்கள்.  இப்படிச் செய்வதால் மூன்றுவித பாதிப்புகள் ஏற்படலாம்.  ஒன்று கடித்த பாம்பு கண்ணாடி விரியனாக இருந்தால் ரத்தத்தின் உறையும் தன்மை போய்விடுமாதலால் நிற்காத ரத்தப் பெருக்கெடுத்து அதனாலேயே அவர் உயிர் போகலாம்.  இரண்டாவது உங்கள் வாயில் புண் இருதால் அதன் வழியே உங்களுக்கும் விஷம் பரவலாம்.  மூன்றாவது உங்கள் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் கடி பட்டவருக்குப் பரவலாம்.

 

4.  முன் காலத்தில் பெரிதும் சொல்லப் பட்ட ஒரு முதலுதவி கடி பட்ட இடத்துக்கு மேல் ஒரு கயிற்றினைக் கட்டி, அதற்குள் ஒரு பென்சிலைச் சொருகி, அந்தப் பென்சிலைச் சுற்றுவதன் மூலம் கட்டு இறுகி (Torniquet) ரத்த ஓட்டமும் விஷம் பரவுதலும் தடைப்படும் என்படதாகும்.  ஆனால் எற்படக் கூடியது என்ன தெரியுமா?  கடி பட்ட இடத்தில் உள்ள திசுக்கள் சிதைந்து பின்னர் அவருக்கு பாம்புக் கடிக்கான வைத்தியம் செய்யப் பட்டு அவர் உயிர் பிழைத்தாலும் கடி பட்ட உறுப்பினக் கழித்து விட வேண்டிய நிர்பந்தம் வரும்.

 

5.  கடித்த பாம்பினைத் தேடி அதை அடிப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள்.  அதனால் இரண்டு பாதிப்புகள்.  ஒன்று கடி பட்டவருக்கு உடனே தேவையான சிகிச்சை அளிப்பதின் பொன்னான நேரம் விரயமாதல்.  மற்றொன்று அந்தப் பாம்பு உங்களையும் கடிக்க நேரிடலாம்.

 

6.  கடி பட்ட உறுப்பினை, அது காலோ, கையோ, இருதய மட்டத்திற்கு மேலாக வைக்காதீர்கள்.  அப்படி வைப்பதால் விஷம் வேகமாகப் பறவும்.

 

7.  கடி பட்டவரை நடக்க வைக்காதீர்கள்.  அதனால் அவரது ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக உடலில் பறவும்.

 

இனி செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.

 

நீங்கள் சரியான (RIGHT) நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது என்ன சரியான நடவடிக்கை எங்கீறீர்களா?  மேலே படியுங்கள்.

 

1.  கடி பட்டவருக்கு தைரியமூட்டுங்கள்.  எல்லாப் பாம்புகளுமே விஷப் பாம்புகள் அல்ல. (Reassure)

 

2.  பாம்புக் கடி பட்டவரையும் கடி பட்ட அவயவத்தினையும் அசைய விடாதீர்கள்.  கடி பட்ட இடத்துக்கு மேல் இருகக் கட்டும் பட்டிச் சுருளினால் (Compression bandage) ஒரு அளவு கோலையோ பட்டையான குச்சியையோ வைத்து கட்டுப் போடுங்கள்.  (Immobilize)

 

3.  உடனே எந்த வைதிய சாலையில் பாம்புக் கடிக்கான மருந்து இருக்கிறது என்பதை  விசாரித்தறிந்து நேராக அங்கு கூட்டிச் செல்லுங்கள்.  ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  (Go to Hospital)

 

4.  பாம்பு கடி பட்டவருக்கு கீழ்க் கண்ட மாறுதல்கள் ஏற்படலாம்.

இவற்றில் எந்த மாறுதல்கள் காணப் பட்டன என்பதை மனதில் இருத்தி மறக்காமல் வைத்தியரிடம் சொல்லவும்.

 

அ.  கடிபட்ட இடத்திலிருந்து ரத்தப் பெருக்கு.

ஆ.  கண் பார்வை மங்குதல்.

இ.  தோளில் எரிச்சல்.

ஈ.  வலிப்பு.

உ.  பேதி.

ஊ.  மயக்கம்.

எ.  அதிகமாக வியர்த்து விடுதல்.

ஏ.  ஜுரம்.

ஐ.  அதிகமாக தாகம் எடுத்தல்.

ஒ.  தசைளை இயக்க முடியாமை.

ஓ.  வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.

ஒள. மறத்துப் போதலும் ஊசிகள் குத்தும் உணர்ச்சியும்.

அ.அ.  இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தல்.

ஆ.ஆ.  அதீத வலி.

இ.இ.  தோலின் நிறம் மாறுதல்.

ஈ.ஈ.  கடித்த இடத்தில் வீக்கம்.

உ.உ.  சோர்வு.

 

பாம்பை நீங்கள் பார்த்திருந்தால் அதன் நிறம், உடலில் காணப் பட்ட குறியீடுகள், கடிக்கும் போதோ பின் அடிக்கும் போதோ படமெடுத்ததா என்பது போன்ற விவரங்களையும் வைத்தியரிடம் சுருக்கமாகச் சட்டென்று சொல்லுங்கள்.  (Tell the doctor)

 

மேற்சொன்னவையே ஒருவரை பாம்பு கடித்து விட்டால் நீங்கள் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகள்(RIGHT actions).

 

கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா?” என்பது பழமொழி.  “பாம்பு கடித்து பாம்பு சாகுமா?” என்பது கேள்வி.  சாகாது,ஒரே ரகப் பாம்பாயிருந்தால்.  காரணம் அதன் உடலிலே அதன் விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி உள்ளடங்கி இருப்பதுதான்.

 

கட்டுரையை முடிக்கும் முன் இரு  வேண்டுகோள்கள்.

 

ஒன்று:  பாம்பினைக் கண்டால் அதை உடனே அடித்துக் கொல்லாதீர்கள்.  பயத்திற்கு அடிமையாகி அதைவெறுக்காதீர்கள்.  அவை மனித குலத்திற்கு இழைக்கும் தீங்கினைவிட நன்மை பல மடங்கு அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

 

இரண்டு:  உங்கள் ஊரில் உள்ள எந்தெந்த மருத்துவ மனைகளி லெல்லாம்  பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கத் தேவையான மருந்து கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  இது உங்களுக்கும் உதவியாக இருக்கும்.  பிறருக்கும் உதவியாக இருக்கும்.  காரணம் பாம்பு கடித்தால் ஓரிரு மணி நேரத்திற்குள் வைத்தியம் செய்யா விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.                     

 

கட்டுரையை இத்தோடு முடித்திட நினைத்தேன்.  ஆனால்……

 

நடராஜன் கல்பட்டு

 

 

 

 

 

பாம்புக்குக் காது கேட்குமா?

பாம்பு  பாம்பு 2 பாம்பு 3

பாம்பு-1-மலைப் பாம்பு

பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.

 

புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

 

எனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

 

இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான டாக்டர் கண்ணன் தெரிவித்ததாவது:

 

“பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.

 

பாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.

 

அதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.

 

பாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.

 

குளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.

 

இக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:

 

“பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகிலுள்ள பாம்புகளில் 10 சதவிகிதப் பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.

 

இந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.

எனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.