Monthly Archives: நவம்பர் 2013

நான் மலாலா – புத்தகம்

 

ஆழம் நவம்பர்  இதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரை

மலாலாவும் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் கிறிஸ்டினா லேம்ப் என்பவரும் இணைந்து எழுதிய ‘நான் மலாலா’ (உப தலைப்பு: கல்விக்காகக் குரல் கொடுத்து தாலிபன்களால் சுடப்பட்ட பெண்) அக்டோபர் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. ‘இன்றுதான் புத்தகம் வெளியாகியுள்ளது. அதற்குள்  இதற்குக் கிடைத்திருக்கும் மக்களின் அமோக ஆதரவு ஆச்சரியப்பட வைக்கிறது’, என்கிறார் இஸ்லாமாபாத்தில் இருக்கும் மிஸ்டர் புக்ஸ் புத்தகக்கடையின் விற்பனையாளர். ‘நானும் ஒரு பெண்ணாக இருப்பதால், மலாலாவுக்கு என் ஆதரவு உண்டு. பெருமையும் புகழும் அந்தப் பெண்ணுக்குச் சேரட்டும்!’

லிட்டில் பிரவுன் அண்ட் கம்பெனி வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தை உடனே தடை செய் என்கிறது தாரிக் இ தாலிபான். மீறி வாங்குபவர்கள் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல்லா ஷாஹித் கூறுவதைக் கவனியுங்கள். ‘மலாலா எந்த வீரச் செயலும் செய்யவில்லை; இஸ்லாமை மதச்சார்பின்மை என்ற பெயரில் பண்டமாற்று வியாபாரம் செய்துவிட்டாள். இதற்கு அவளுக்கு இஸ்லாமின் விரோதிகளிடமிருந்து விருது கிடைத்திருக்கிறது’. கூடவே ஒரு எச்சரிக்கை. ‘மலாலாவைக் கொல்வதற்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால் நிச்சயம் தவறவிடமாட்டோம். அவள் எழுதிய புத்தகத்தை வாங்குபவர்களையும் நாங்கள் குறி வைப்போம்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கைக்குப் பலனும் கிடைத்திருக்கிறது. பெஷாவரில் உள்ள ஒரு பெரிய புத்தகக் கடை மலாலாவின் புத்தகத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. ‘பலர் எங்களை தொலைபேசியில் அழைத்து இந்தப் புத்தகம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இதன் விநியோகிப்பாளர் யார் என்று தெரியாது என்று சொல்லிவிடுகிறோம்’ என்கிறார் புத்தகக் கடையின் சொந்தக்காரர்.

படிக்காத ஒரு அம்மாவுக்கும், பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்த ஒரு அப்பாவுக்கும் பிறந்தவள் மலாலா. தனது 11 வது வயதிலேயே ஸ்டீஃபன் ஹாகிங்ஸ் எழுதிய ‘எ ப்ரீப் ஸ்டோரி ஆப் டைம்’ என்ற புத்தகத்தை படித்தவள். கேட்பவரை மயக்கும் பேச்சு வல்லமை கொண்ட இந்தப் பெண் தனது வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.

புத்தகத்திலிருந்து சில வரிகள்:

‘நடு இரவில் உதயமான நாட்டில் பிறந்தவள் நான். ஒரு நண்பகலில் கிட்டத்தட்ட இறந்து பிழைத்தவள்’

‘ஆண் குழந்தைகளைக் கொண்டாடும் சமூகத்தில் நான் பிறந்தபோது என் அம்மாவை எல்லோரும் ‘பெண் குழந்தையா?’ என்று துக்கம் விசாரித்தனர். என் அப்பாவை யாரும் வாழ்த்தவில்லை.’

‘நான் படிக்கும் புத்தகங்களில் வரும் காட்டேரிகள் போன்ற தாலிபன்கள் பெண்களின் பள்ளிக்கூடங்களை அழித்தனர். இசையையும், காணொளிகளையும் தடை செய்தனர். பழம் பெருமை வாய்ந்த புத்தர் சிலைகளை குண்டு போட்டு தகர்த்தனர். ஆனால் எதையும் புதிதாக உருவாக்கவில்லை’

‘என்னைச் சுடுவதன் மூலம் மக்களின் குரல்வளையை நெறித்து விடலாம்; யாரும் இதைப் பற்றிப்பேச மாட்டார்கள் என்று நினைத்தனர். இப்போது ஏன் என்னை சுட்டோம் என்று வருந்திக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.’

 

 

 

 
 

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா

 

 

 

 

 

 

 

 

முதலாண்டு நிறைவைக் கொண்டாடும் இசைப்பா விற்கு வாழ்த்துகள்!

valentines day

இசைப்பாவில் எனது பங்களிப்பு

ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பாடல்களை ரசிப்பார்கள். நாங்கள் தும்கூரில் இருந்தபோது என்னுடன் ஆசிரியை ஆக இருந்த  தோழி உமா கேளடி கண்மணி’ படத்தில் வரும் ‘நீ பாதி, நான் பாதி’ பாடலை எப்படி ரசிப்பார் தெரியுமா? அவர் சொல்வார்: ‘இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். ‘நீ பாதி நான் பாதி கண்ணே’ என்று அந்த ‘கண்ணே’ வை அப்படியே காற்றில் ஊதி விடுவதுபோலப் பாடுவார். அது அப்படியே மிதந்து கொண்டு நிற்கும்’ இப்படிக் கூட பாடலை ரசிக்க முடியுமா என்று என்னை வியப்பில் ஆழ்த்தியவர் உமா. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தவறாமல் இவரை நினைத்துக் கொள்ளுவேன்.

பொதுவாக பாடல் பாடும்போது கடைசி வார்த்தையை கொஞ்சம் இழுத்தாற்போல பாடி முடிப்பார்கள். இந்தப் பாடலில் ஜேசுதாஸ் அப்படி இழுக்காமல் அந்த வார்த்தையை அப்படியே விட்டுவிடுவார். மிகத் திறமை வாய்ந்த, இசையை தன் வசம் கொண்டு வர ரொம்பவும் கடுமையாக உழைத்த ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம்.

இவரைப் போலவே குரலை தன் வசப்படுத்தி, தன் பாட்டு மூலம் கேட்பவர்களை தன்வயப்படுத்தும் இன்னொரு பாடகர்  நான் மிகவும் ரசிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் திரு ஹரிஹரன்.

இன்றைய இசைப்பாவில் நான் பகிரப்போகும் பாடல் ‘சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா’ பாடல். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் வரும் பாடல் இது. பின்னணி இசை எதுவுமில்லாமல் வெறும் சுருதி மட்டும் ஒலிக்க ஹரிஹரன் பாடியிருப்பார். பாடும் பாட்டில் பாவத்தையும் கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே.

 

தொடர்ந்து படித்து பாடலை ரசிக்க : சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா