
காதலுக்கு ஆரம்பம் உண்டு; முடிவு இல்லை என்று ஒரு விளம்பரத்தின் ‘பஞ்ச்’ வரிகள்.
இதற்கு உதாரணமாக வாழ்பவர்கள் திரு கரம், அவரது மனைவி திருமதி கதரி சந்த் இருவரும். நீண்ட காலமாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்பவர்கள் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள்.
திரு கரம் அவர்களுக்கு 107 வயது, அவரது மனைவிக்கு 100 வயது. இந்த ஜோடிக்கு 8 குழந்தைகள்; 28 பேரன் பேத்திகள்! திருமணம் ஆகி 87 வருடங்கள் ஆகின்றன.
இவர்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன? ‘கதரியை எப்படியாவது சிரிக்க வைத்துவிடுவேன். ஜோக்குகள் சொல்லி அவளை சிரிக்க வைப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை ரொமான்ஸ் என்பது வேடிக்கையும், விளையாட்டுமாய் மனைவியை மகிழ்விப்பதுதான்!’ என்கிறார் திரு கரம்.
இவர்கள் சொல்லும் ரொமான்ஸ் ரகசியங்கள்:
எப்போதும் உண்மையாக இருப்பது: திருமண பந்தம் என்பது அதில் இணைந்த இருவரும் ஒருவர் வாழ்க்கையை இன்னொருவருக்காக உண்மையாய் வாழ்வதுதான். மிகவும் கஷ்டமான சமயங்களிலும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது தான் திருமண பந்தத்தை வலுப்படுத்தும். இருவரும் பொய் சொல்லக் கூடாது. சிலசமயங்களில் ‘அக்கரைப் பச்சை’ என்று தோன்றினாலும் உண்மையில் அக்கரை பச்சையாக இருப்பதில்லை!
ஒருவர்மேல் ஒருவர் அக்கறை செலுத்துங்கள்: துணைவருடன் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்பினால், ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொள்ள வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போதும் சரி, நிலைமை சற்று சரியும்போதும் சரி, ஒருவரையொருவர் நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். துணைவருக்காக சமைப்பது, அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது, அவர் மனமுடைந்து போகும்போது நல்ல துணையாக இருந்து அவருக்கு ஆறுதலாகத் தோள் கொடுப்பது என்று எல்லாவற்றிலும் அக்கறையைக் காட்டுங்கள்.
துணைவரை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்:
யாரிடம் இல்லை குறை? உங்கள் துணைவரை அவரது நிறை குறையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காததை சில சமயங்களில் செய்யக் கூடும். கண்டு கொள்ளாதீர்கள். பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் குறை இல்லையா? குளித்து விட்டு துணிமணிகளை அப்படியே போட்டு விட்டு வரலாம். உங்களுக்குப் பிடிக்காத பாட்டு உங்கள் துணைவருக்குப் பிடிக்கலாம்! அவரது குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவரது குறைகளின் மேல் கோவம் வரலாம். பல ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருக்க வேண்டும் என்றால் இன்னொருவரின் குறையைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகுங்கள். அல்லது அக்குறையை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் குறையே அவருக்கு நிறைவைக் கொடுக்கிறது என்று நம்புங்கள்.
துணைவரின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேளுங்கள்: திருமண பந்தத்தில் மிக முக்கியமானது துணைவர் பேசும்போது உன்னிப்பாக கேட்டுக் கொள்வது. முக்கால்வாசி பிரச்னைகள் வருவது / வளர்வது துணைவர் பேசும்போது காது கொடுத்துக் கேட்காமையால் தான். பேப்பர் படித்துக் கொண்டே, தொலைக் காட்சியில் கண்களை வைத்துக் கொண்டே ‘ஊம்’ கொட்ட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமே பிரச்னை வரும் என்றில்லை. வீட்டிலும் வரும். ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்துக் கேட்டாலே பாதி சுமை குறைந்தாற்போல இருக்கும்.
சமூக, இன மத ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் மூலம் உங்கள் குழந்தைகளும் இவற்றின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு மரியாதை கொடுங்கள்; அவர் மேல் அக்கறை கொள்ளுங்கள்; அவரது அன்பைப் போற்றுங்கள்; முழுமையாகக் காதலியுங்கள்; அவரது மதிப்பை உணருங்கள்.
உங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே உங்கள் மற்றவரையும் நடத்துங்கள்.
காதலர் தினம் – காதல் கதை 2
இசைப்பாவில் கேட்டு மகிழ: கண்டேன் கண்டேன்…….
செல்வ களஞ்சியமே – பகுதி 5
0.000000
0.000000
Like this:
Like ஏற்றப்படுகின்றது...