Monthly Archives: திசெம்பர் 2012

ஒரு கோப்பையிலே நம் வாழ்க்கை!

coffee cups and mugs

எங்கள் எதிர் வீட்டுக்காரரின் மேல் எனக்கு கொஞ்சம் (இல்லையில்லை….நிறையவே…காதில் புகை வரும் அளவுக்கு..!) பொறாமை.

எனது சமையல் அறையிலிருந்து பார்த்தால் எதிர் வீட்டு பால்கனி தெரியும். இந்த மனிதர் தினமும் காலையில்  ஒரு கையில் மணக்க மணக்க காப்பி ; மறுகையில் சுடச்சுட செய்தித்தாள் – உடன் ஸ்டைலாக நாற்காலியில் உட்கார்ந்து பேப்பரில் மூழ்கி இருப்பார்!

எந்த பிறவியில் யாருக்கு தினந்தோறும் இது போல  பேப்பரும், காப்பியும் கொடுத்து சேவை செய்தாரோ இந்தப் பிறவியில் இப்படி அனுபவிக்கிறார் என்று (புகைச்சலுடன்) நினைத்துக் கொள்வேன்.

நீங்களும் அவரைப்போல காலை எழுந்தவுடன் ஒரு கையில் காபி.. மறு கையில் செய்தித்தாள்.. என்று வாழ்க்கையை அனுபவிப்பவரா?

அப்படியானால் இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும்.

ஒரே கல்லூரியில் படித்து, இப்போது நல்ல வேலையில் இருக்கும் அந்த கால மாணவர்கள் சிலர் தங்களது கல்லூரி பேராசிரியரை சந்திக்கக் கூடினர்.

உபய குசலம் முடிந்தபின், ஒவ்வொருவரும் தங்களது உத்தியோகம் பற்றியும் அதனால் ஏற்படும் மன உளைச்சல், வாழ்க்கையையும் உத்தியோகத்தையும் சமாளிக்கும் தங்களது சாமர்த்தியம் பற்றியும் பேச (பீற்றிக்கொள்ள!) ஆரம்பித்தனர்.

பேராசிரியர் சமையல் அறைக்குச் சென்று ஒரு பெரிய ஜாடி நிரம்ப மணக்கும் காப்பி கொண்டு வந்தார். கூடவே காப்பியை ஊற்றி சாப்பிட பல வகையான கோப்பைகளைக் கொண்டுவந்தார். பிளாஸ்டிக் கோப்பைகள்; சீனா கோப்பைகள்; கண்ணாடிக் கோப்பைகள்; அவற்றுள் சில மிக விலை உயர்ந்தவை; சில சாதாரணமானவை. சில அழகிய வேலைப்பாடுகள் கொண்டவை.

‘ஹெல்ப் யுவர்செல்வ்ஸ்…!’ என்றார் பேராசிரியர்.

ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு காப்பியையும் ஊற்றிக் கொண்டு ருசிக்க ஆரம்பித்தனர்.

பேராசிரியரும் ஒரு கோப்பை காப்பியை கையில் எடுத்துக் கொண்டு பேசலானார்:

coffee cups

‘நீங்கள் எல்லோரும் அழகிய, விலை உயர்ந்த கோப்பைகளையே எடுத்துக் கொண்டுள்ளீர்கள். வாழ்வில் மிகச் சிறந்தவைகளையே அடைய வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் நினைப்பது தெரிகிறது. தவறேதும் இல்லை. ஆனால் உங்கள் பிரச்னைகளுக்கும், மன உளைச்சலுக்கும் பிறப்பிடமே அதுதான்!’

‘ஒரு விஷயம் உங்கள் நினைவில் இருக்கட்டும்: கோப்பைகளினால் காப்பியின் தரம் நிச்சயிக்கப் படுவதில்லை. உங்களுக்கு வேண்டியது காப்பி ஆனால் நீங்கள் விலையுயர்ந்த கோப்பைகளை நாடினீர்கள். அதுமட்டுமல்ல; மற்றவர்களின் கைகளில் இருந்த கோப்பைகளையும் கவனித்தீர்கள்;’

‘இப்போது ஒரு விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்:’

‘வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக் கொள்ளுவோம். உங்களது வேலை, அதில் வரும் வருமானம், அதனால் இந்தச் சமூகத்தில் உங்களுக்குக் கிடக்கும் அந்தஸ்து இந்தக் கோப்பைகள் போல. இக்கோப்பைகள் காப்பியை ஊற்றிக் குடிக்க பயன்படும் வெறும் சாதனங்கள்; இவை காப்பியை ஏந்துகின்றன  அவ்வளவே. இவற்றால் நமது வாழ்க்கை தீர்மானிக்கப் படுவதில்லை. இவை நம் வாழ்க்கையின் தரத்தை அளவிடும் அளவு கோலோ, நம் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதோ இல்லை’.

சில சமயங்களில் காப்பிக் கோப்பைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கை என்னும் ருசி மிகுந்த காப்பியை அனுபவிக்க மறந்து விடுகிறோம்.

‘கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் நன்கு சரியான அளவில் தயாரிக்கப்பட்ட காப்பியை கொடுத்திருக்கிறார். நாம் அதனை ஏதேதோ அளவுகோல் கொண்டு மதிப்பிடப் பார்க்கிறோம்’.

‘வாழ்க்கை என்னும் காப்பியை அனுபவியுங்கள். கோப்பைகளுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டாம்’.

‘சந்தோஷமாக இருப்பவர்களுக்கு சிறந்தவைகள் எல்லாம் கிடைப்பதில்லை. ஆனால் கிடைப்பவற்றுள் சிறந்தவற்றை உருவாக்குகிறார்கள். சிறந்தவற்றைப் பார்க்கிறார்கள். அதனால் தங்களைச் சுற்றி சந்தோஷத்தை பரப்புகிறார்கள்’.

‘எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். அன்பை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். மற்றவர்களை பற்றி ஆழ்ந்த அக்கறை கொள்ளுங்கள். இனியவற்றை பேசுங்கள். கனியிருப்ப காய்கள் வேண்டாம்.’

நாளையிலிருந்து காப்பி குடிக்கும் போதெல்லாம் இந்தக் கதை நினைவுக்கு வரும், இல்லையா?

புது வருடத்தில் புதிதாய் சிந்தனைகள் மலர வாழ்த்துக்கள்!

 

 

freshly-pressed-rectangle  on 24.12.2012

மக்கள் சந்தைக்காக எழுதியது.

எனது முதல் தளத்தில் இப்போது: கணிதமும் நானும்!

நாளைப் பாடு……!

I forget things!

இன்னும் நான்கு நாட்களில் என் முதல் வலைபதிவு குழந்தைக்கு ஒரு வருடம் நிரம்புகிறது.

நாளைக்கு இருப்போமா என்பதே சந்தேகம்….இன்னும் நாலு நாள் கழித்து நடக்கப் போவதை பற்றி பேசுகிறாயே என்கிறீர்களா?

அடுத்த வருடம் இந்த நாளில் போன வருடம் இப்படியெல்லாம் பயந்து கொண்டிருந்தோம் என்பதையே மறந்து விடுவோம், சரி தானே?

நம் நினைவாற்றல் மீது நம் எல்லோருக்குமே இந்த நம்பிக்கை உண்டு. எத்தனைகெத்தனை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அத்தனைகத்தனை வேகமாக மறந்து விடுவோம்!

இந்த ஞாபக மறதி பற்றி ஒருவர் எழுதி இருந்தார்.

ஒரு நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தாராம். கணவன், மனைவி இருவருமே சற்று வயதானவர்கள். பேசிக்  கொண்டு இருக்கும்போது கணவர் சொன்னாராம்: “நேற்று ஜயநகரில் புதிதாக திறந்திருக்கும் ஒரு  உணவகத்திற்குப் போனோம். சாப்பாடு நன்றாக இருந்தது. நீயும் மனைவி குழந்தைகளுடன் போய்விட்டு வா..”

“அப்படியா? உணவகத்தின் பெயர் என்ன?”

சில நிமிடங்கள் யோசித்த கணவர், “ம் ம் …. ஒரு பூ இருக்குமே….சிவப்பு நிறத்தில்….அடுக்கடுக்காக…..முள் கூட இருக்கும்…அதன் பெயர் என்ன…?”

“ரோஜா…”

“கரெக்ட்! பெயரை நினைவூட்டியதற்கு நன்றி!…” என்றவர் உள்ளே திரும்பி “ரோஜா…! நேற்று ஒரு புதிய உணவகம் போனோமே, அதன் பெயர் என்ன..?” என்றாராம்!

இன்னொரு கணவர் தன் மனைவியை எப்போதுமே “டார்லிங், டார்லிங்” என்றே கூப்பிட்டுக்கொண்டு இருந்தாராம். நண்பர் மிகவும் வியப்படைந்து “திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை டார்லிங் டார்லிங் என்று கூப்பிடுகிறீர்களே! உங்களுக்கு மனைவியின் பெயரில் அன்பு குறையவே இல்லை என்று தெரிகிறது”.

கணவர் சொன்னாராம்: “வெளியில் சொல்லாதே! அவள் பெயரை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன…..”

உளவியல் நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா? எல்லாவற்றையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் மூளையை கட்டாயப் படுத்தக் கூடாதாம்.

பலமுறை ஒரு கட்டிடத்தைத் தாண்டி சென்றிருப்போம். அதன் பெயர் தெரிந்திருக்காது. பார்த்திருப்போம்; ஆனால் மனதில் பதிந்திருக்காது. இந்த வகை மறதியினால் தவறு இல்லை. மறந்துவிட்டதை சமாளிக்க வேண்டும் இரண்டாவது கணவரைப் போலே!

உங்கள் அலுவலகத்தில் தீயணைக்கும் கருவி எங்குள்ளது என்று நினைவு இல்லையா? பரவாயில்லை. ஆனால் ஆபத்துக் காலத்தில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. இது ரொம்ப முக்கியம்.

சரி தோழமைகளே! உலகத்தின் கடைசி நாளில் ஒரு பதிவு எழுத நினைத்து, எழுதியும் விட்டேன் வெற்றிகரமாக!

படித்துவிட்டு மறந்தும் போகலாம். மறந்து போகாமல் கருத்துரை போட்டால் மகிழ்வேன்….நாளை இருந்தால்……!

 

freshly-pressed-rectangle

 

இதையும் படிக்கலாமே! :முப்பதும் தப்பாமே….!

அந்தநாள் முதல் இந்த நாள் வரை…..

ஜெயந்தியை நான் எப்போது சந்தித்தேன்?

நினைவில்லை.

‘உனக்கும் நினைவில்லையா?’ இருவரும் ஆச்சரியப் பட்டோம்.

ஒரே பள்ளியா? இல்லை.

ஒரே அலுவலகத்தில் வேலை செய்தோமா? இல்லை.

ஒரே வீதியில் வீடா? அதுவும் இல்லை.

பின் எப்படி தோழிகளானோம்?

பலத்த யோசனைக்குப் பின் நினைவுக்கு வந்தது. ஒரே பேருந்தில் அலுவலகத்திற்குப் பயணம் செய்திருக்கிறோம். பேருந்து தோழிகள்! அதுவும் சில மாதங்களுக்குத் தான். ஜெயந்தி பிறகு வேறு வேலைக்கு மாறிவிட்டாள்.

ஆனால் எனக்கு திருமணம் ஆகும் வரை நானும் அவளும் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாலை வேளைகளில் சந்தித்திருக்கிறோம். புரசைவாக்கம் டேங்க், எதிரில் இருக்கும் (இப்போது இருக்கிறதா?) அனுமார் சந்நிதி, கங்காதரேஸ்வரர் கோவில் என்று சுற்றிக் கொண்டே இருப்போம்.

எங்களுக்குள் பேச எத்தனையோ. ‘அதென்ன மணிக்கணக்கா பேச்சு?’ என்று இருவர் வீட்டிலும் கோபித்துக் கொள்ளுவதால் இருவரும் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றி சுற்றி வருவோம் – கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு!

பிறகு எனக்குத் திருமணம் ஆகி அசோக் நகர் வந்து விட்டேன். ஜெயந்தியின் தொடர்பும் விட்டுப் போயிற்று. ’79 இல் ஜெயந்தியின் குடும்பம் அசோக் நகரில் இருந்த போஸ்டல் குவார்ட்டர்ஸ் –இல் இருந்தபோது ஒரு முறை சந்தித்தோம். என் பெண்ணுக்கு அப்போது மூன்று வயது.

பிறகு நாங்கள் அண்ணாநகர் வந்து, அங்கிருந்து பெங்களூரு வந்து….ஜெயந்தி நினைவிலிருந்து மறைந்தே போனாள்.

இப்போது எங்கிருந்து வந்தாள் என்று கேட்கிறீர்களா?

என் ப்ளாகின் மூலம்தான்! ஆச்சரியம் இல்லையா?

எனது ப்ளாகில் ஒரு முறை திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களின் மறைவின் பின்னணியில், அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ‘கடுகு’ என்கிற திரு ரங்கநாதன் அவர்களும் அவரது கடுகு தாளிப்பு என்ற வலைப்பூவில் திரு ராகிரா பற்றி எழுதி இருந்தார். அதை அவரது தளத்தில் படித்த நான் ‘நானும் திரு ராகிரா பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்’ என்று என் வலைதளத்தின் இணைப்பையும் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன்.

ஜெயந்தி திரு ‘கடுகு’ அவர்களின் எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிப்பாள். அவள் எனது பின்னூட்டத்தைப்  படித்து விட்டு என் பதிவைப் படித்திருக்கிறாள். எனது அழகான(!!!)  புகைப் படத்தையும் பார்த்துவிட்டு நீ புரசைவாக்கத்தில் இருந்த ரஞ்சனி தானே என்று கேட்டு எங்கள் ஊர் சுற்றலையும் குறிப்பிட்டிருந்தாள்.

பல வருடங்களுக்குப் பிறகு தோழிகள் ஒருவரையொருவர் மறுபடி கண்டுகொண்டோம் கண்டு கொண்டோம்…..!!!

போன மாதம் சென்னை சென்ற போது ஒரே ஒரு நிகழ்வு:  ஜெயந்தியை சந்திப்பது மட்டும்தான்!

காலை சதாப்தி வண்டியில் கிளம்பினோம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே வருவதாக ஜெயந்தி சொல்லியிருந்தாள். நான் தான் வழக்கம்போல CCC2 கோச் என்பதற்கு பதிலாக CC1 என்று சொதப்பி இருந்தேன். பாவம் ஜெயந்தி, C1 கோச் முழுவதும் தேடி என்னைக் காணாமல் என்னவோ ஏதோ, நான் ஏன் வரவில்லை என்று பதறி எனக்கு போன் மேல் போன் செய்து….தவித்துக் கொண்டிருக்க,

நான் நிதானமாக அடுத்த பெட்டியிலிருந்து இறங்கி, யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார்கள் என்று தொலைபேசியில் கண்ணையும் கருத்தையும் வைத்துக் கொண்டு நடக்க….

‘ரஞ்சனி……’ என்று ஓடி வந்தவள் என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

‘உங்களைக் காணோமென்று ஆடிப் போய்விட்டாள்’ என்றார் ஜெயந்தியின் துணைவர் திரு ஸ்ரீதரன்.

‘ஸாரி, ஸாரி’ என்று அசடு வழிந்தேன். ஜெயந்தி என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

‘நீங்கள் வரப்போவது அமெரிக்கா முதல் ஆஸ்திரியா வரை தெரியும்…’

ஜெயந்தியின் பிள்ளைகள் இருவரும் இந்த இரண்டு ஊர்களில் இருந்தனர்.

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ?’ என்பார்கள். ஆனால் நாங்கள் இருவரும் விடாமல் – மூச்சு விடாமல் பேசினோம். வீடு போய் சேரும்வரை, சேர்ந்த பின், சாப்பிடும்போது, பேசிக் கொண்டே, பேசிக் கொண்டே……!

ஜெயந்தியின் அம்மா பக்கத்திலேயே இருந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘என்ன ரஞ்சனி, எத்தனை குழந்தைகள், எல்லோருக்கும், கல்யாணம் ஆயிற்றா, பேரன், பேத்திகள் இருக்கிறார்களா…..?’ என்றார்.

‘ஐயோ! மாமி அதையெல்லாம் கேட்காதீங்கோ! நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்றேன்.

எவ்வளவுதான் இந்த நாளின் நிஜம் இருவருக்கும் தெரிந்தபோதும், மறுபடி மறுபடி பழைய நினைவுகளிலேயே இருவரும் மூழ்க ஆசைப்பட்டோம்.

‘குட்டி குட்டியா நகம் வளர்த்துப்பியே என்ன ஆச்சு?’ என்றாள் ஜெயந்தி.

‘பேருந்தில் நம்முடன் கூட ‘குட்டி ப்ளஷ்டோர்’ அலுவலகத்தில் வேலை செய்யும் சௌபாக்யவதி என்ற ஒரு பெண் வருவாள் நினைவிருக்கிறதா?’- நான்.

‘ஓ!…’

‘நான் அவளிடம் உனக்கு சௌபாக்யவதி என்று பெயர் வைத்திருக்கிறார்களே…கல்யாணப் பத்திரிகையில் சௌபாக்யவதி சௌபாக்யவதிக்கு என்று போடுவார்களா என்று ஒரு நாள் கேட்டேன்….!’

இருவரும் பெரிதாகச் சிரித்தோம்….எங்கள் துணைவர்கள் இருவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு!

அந்தநாள் நடந்த சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் நினைவலைகளில் மோதி மோதி வந்தன.

அரவிந்த அன்னையின் பக்தையாகி விட்டாள் ஜெயந்தி. ‘பிரார்த்தனை நேரத்தில் ஒருமுறை கூட உன் நினைவு வந்ததில்லை ரஞ்சனி. ஆனாலும் நீயும் நானும் மறுபடி சந்திக்க வேண்டும் என்று அன்னை நினைத்திருந்தாள் போலிருக்கிறது. அதனால் தான் என் உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் படி ‘கடுகு தாளிப்பு’ படிக்க ஆரம்பித்தவள் அதன் மூலமே உன்னையும் மறுபடியும் சந்தித்தேன். இல்லையானால் நான் எங்கே நீ எங்கே?’

அன்னை சேர்த்து வைத்தாளோ? இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ? எப்படியானால் என்ன? அந்தநாள் முதல் இந்த நாள் வரை எங்கள் நட்பு மாறவில்லை என்பதை ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்திருந்த விதம் சொல்லியது.

குழந்தைகளுக்கு ஒரு கிடைத்தற்கரிய பரிசு!

கருவிலிருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஒரு இணைப்பை கொடுப்பது தொப்புள் கொடி(UmbilicalCard). இதைத் தான் தொப்புள்கொடி உறவு என்கிறோம்.

தாயின் கருவில் குழந்தை வளரும் காலங்களில் குழந்தையை போஷித்துப் பாதுகாப்பது இந்த தொப்புள் கொடி. குழந்தை பிறந்தவுடன் தாயிடமிருந்து குழந்தையை பிரிக்க இதனை வெட்டி விடுகிறார்கள்.

சமீபகாலம் வரை இந்த தொப்புள் கொடியின் பயன்பாடு அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது. ஆனால் அண்மைகால ஆய்வுகள் மூலம் இதன் எண்ணிலடங்கா பயன்கள் வெளிவந்துள்ளது.

சுமார் 75 நோய்களிலிருந்து குழந்தையை இந்த தொப்புள் கொடி காக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.

தங்கள் குழந்தைக்கு தங்களைவிட நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப் படுவார்கள். படிப்பைக் கொடுக்கலாம்; பணத்தை சேர்த்து வைக்கலாம்; பட்டம், பதவி எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் ஆரோக்கியம்?

இதுவரை நம்மால் நம் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு, நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள மருந்துகள் இவற்றைத் தான் கொடுக்க முடிந்தது, இல்லையா? அவர்களுக்கு நோய் நொடியற்ற எதிர்காலத்தை  நம்மால் அமைத்துக் கொடுக்க முடியுமானால் எத்தனை நன்றாக இருக்கும்?

குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும்  சேமித்து வைப்பதன் மூலம் இதை செய்யலாம். இவற்றை சேமிப்பது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன் இவை என்ன என்று பார்க்கலாம்.

தொப்புள் கொடி இரத்தம் என்பது குழந்தையின் தொப்புள் கொடியிலிருப்பது. கொடியை வெட்டியபின் வேண்டாம் என்று நாம் தூர எறியும் கொடியின் கெட்டியான பகுதிதான் திசுக்கள். இவற்றிலிருந்து கிடைக்கும்  ஸ்டெம் செல் எனப்படும் உயிரணுக்கள் பலவிதமான தீவிர நோய்களை குணப் படுத்தும் ஆற்றல் உடையவை.

ஸ்டெம் செல்கள் என்பவை நமது உடம்பின் அடிப்படை ஆதார நிலைகள். பலவிதமான திசுக்களாக உருவாகக் கூடிய தன்மை கொண்டவை இவை.  நமது உடம்பில் நோய் காரணமாக நாம் இழக்கும் செல்களை மறுபடி எண்ணிலடங்கா எண்ணிக்கையில் உருவாக்குகின்றன இந்த ஸ்டெம் செல்கள்.

இந்த தொப்புள் கொடி இரத்தத்தையும், திசுக்களையும் பாதுகாப்பதன் மூலம்  இரத்தப் புற்று நோய், தலசீமியா என்ற ஹீமோகுளோபின் குறைபாடு, இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப் படுத்தலாம்.

Umbilical Cord Stem Cell Banking என்ற ஒரு  அமைப்பின் மூலம் இந்த தொப்புள் கொடி இரத்தமும், கொடியின் திசுக்களும் பாதுகாக்கப்படும்.

குழந்தை பிறப்பதற்கு சில வாரங்கள் முன்பாகவே இதனை திட்டமிட வேண்டும். பிரசவத்தின் போது குழந்தையின் கொடி இரத்தம் குழந்தை பிறந்த 10 நிமிடத்திற்குள் சேகரிக்கப் படுகிறது. இது முடிந்தவுடன் தொப்புள் கொடியிலிருந்து 25 செ.மீ. அளவிற்கு கத்தரிக்கப்பட்டு ஸ்டெம் செல்களை பிரித்தெடுப்பதற்காக பத்திரப் படுத்தப்படுகிறது.

பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கடுங்குளிர் முறையில் பாதுகாக்கப் படும். தேவைப் படும்போது இவற்றை நோய் தடுக்கப் பயன்படுத்தலாம்.

இப்படி செய்வதால் குழந்தைக்கு எந்த வித தொந்திரவும் ஏற்படாது.

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் குழந்தைக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்கும் பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதைவிட சிறந்த பரிசு உண்டா?

சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு கிடைத்த ஒரு புக்லெட் –டிலிருந்து தெரிந்த கொண்ட தகவல்கள் இவை. உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பாத கமலங்கள் காணீரே!

வருத்தமே வாழ்க்கையா?

feeling sad

 

இன்னிக்கு வருத்தப் பட விஷயமே இல்லை என்று வருந்துபவரா நீங்கள்? வருத்தம் வடிவேலுவின் அக்கா? தங்கை? அண்ணா? தம்பி? அப்போ இந்த செய்தி உங்களுக்கு வருத்தத்தை- இல்லையில்லை- சந்தோஷத்தைத் தரும்.

வருத்தப்படுபவர்களைப் பற்றிய ஆய்வு ஒன்று சமீபத்தில் நடந்தது. நாம் எல்லோருமே நம் வாழ்வில் நடந்த 6 விஷயங்களை பற்றி-இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று வருத்தப் படுகிறோம் என்கிறது இந்த ஆய்வு. 6 வித்தியாசங்கள் போல 6 வருத்தங்கள்!

இதில் முதல் இடம் பெறும் வருத்தம்: நாம் ஆசைபடும் அளவிற்கு பயணம் செய்ய இயலவில்லை என்பதுதான்.

இந்த ஆய்வில் பங்கு கொண்ட எல்லோருமே ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வேறு விதமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

வேறு வேலை, வேறு துணைவர் இப்படி.

ஐந்தில் ஒரு பெண் தான் தப்பான ஒரு துணைவருடன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாகவும் ஆண்களில் வெறும் 10% பேர் மட்டுமே இப்படி நினைப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் சுமார் 2000 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 25% பேர் நம் வாழ்வில் வருத்தம் என்பது இல்லாமல் இருக்க முடியாது, வருத்தமும் சேர்ந்ததே வாழ்க்கை என்றும் கருத்து தெரிவித்தனர்.

அதனால் தான் ஒரு நாளைக்கு 19 நிமிடங்களும் ஒரு வாரத்திற்கு 2 மணி நேரங்களும் ‘இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்யாமல் போனோமே’ என்றும் நாம் வருத்தப் பட்டு மாய்கிறோம் என்றும் இந்த ஆய்விலிருந்து தெரிய வந்திருக்கிறது.

ஏன் நீங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ முடியவில்லை? காரணங்கள் என்ன என்று கேட்டபோது கிடைத்த பதில்கள்:

மூன்றில் ஒரு பங்கு பேர்கள் தங்களிடம் போதுமான பணம் இல்லாததால், தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழமுடியாமல் போயிற்று என்றனர். 25% பேர்கள் தங்கள் விருப்பத்திற்குரியவரின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் தாங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ் முடிய வில்லை என்றனர்.

ஆனால் 32% தங்களுடைய பலவீனமான மனமும் – வலிமையான செயல்பாட்டுத் திறன் இன்மையுமே  – வேறு ஒரு நல்ல வாழ்க்கையை – அதாவது தங்கள் விருப்பப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு காரணம் என்று ஒப்புக் கொண்டனர்.

நமது கனவு வாழ்க்கையை வாழ முடியாமல் தடை செய்யப் பல விதக் காரணங்கள் இருப்பதாக நம்மில் பலரும் நினப்பதே இந்த வருத்தங்களுக்குக் காரணம் என்று இந்த ஆய்வின் டாக்டர் கெயில் ப்ரூவர் கூறுகிறார். இந்த மன நிலையில் ஆசைப் பட்டாலும் அதை நிறைவேற்றக் கூடிய மன உறுதி இல்லாமல் போகிறது என்கிறார் இவர்.

நமது 10 உச்சகட்ட வருத்தங்கள்:

  1. போதுமான அளவு பிரயாணம் செய்ய முடியாமை
  2. நண்பர்களுடன் தொடர்பு விட்டுப் போவது
  3. போதுமான உடற்பயிற்சி செய்யாமை
  4. அதிகப் பணம் சேர்த்து வைக்க முடியாமை
  5. புகை பிடிப்பது
  6. பள்ளிப் பருவத்தில் சோம்பித் திரிந்தது
  7. வேலை தேர்வு
  8. சரியான துணை அமையாமை
  9. ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கம்
  10. நமது தாத்தா, பாட்டிகளின் வாழ்க்கை பற்றி அவர்கள் இருக்கும்போது கேட்டு அறியாமை.

என்ன தோழர்களே உங்கள் வருத்தங்களையும் பட்டியலிடுங்களேன்!

http://tk.makkalsanthai.com/2012/12/blog-post_8027.html

கம்பளின்னு ஒண்ணு இருக்கா?

ஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பும் போதும்  உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.

நிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புதல்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது.

சென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது? யாரைப் பார்ப்பது? யாரை விடுவது?

‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி’ என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம்! வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு…! படைத்தவனுக்கே வெளிச்சம்!

சென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி! போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்!

எங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே!’ என்று.

இத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி! IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்!

சென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை – காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது.

நேற்று ஷதாப்தியில் ஐஸ்க்ரீம் என்ற பெயரில் சாப்பிட்ட  ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச்’ என்றது.  மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – சொட்டுச் சொட்டாக ஊஹும் குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த பதின் வயது சிறுவன் போல இரண்டு மூன்று குரலில்     பேசினேன்.

அவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது.

‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு  நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.

‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும்’ சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார்.

‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே! என்ன ஊர் இது? கொஞ்சம் வெய்யிலில் நிற்கலாமா?’

மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா! அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு…!’

பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா?) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்!