செல்வ களஞ்சியமே 9

எனது உறவினரின் பெண்ணிற்கு குழந்தை பிறந்திருந்தது. உடனடியாக என்னால் போய் பார்க்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்துப் பார்க்கப் போன எனக்கு அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சி!

சரியாக வாராத தலை. அழுக்கான ஒரு நைட்டியுடன் அந்தப் பெண் காட்சி அளித்தாள். எங்களைப் பார்த்தவுடன் அவசரமாக ஓடிப் போய் அந்த அ. நைட்டியின் மேல் ஒரு துப்பட்டா(!?)வைப் போட்டுக் கொண்டு வந்தாள். (எதற்கு?)

‘குழந்தையுடனேயே நேரம் சரியாகி விடுகிறது.  எதற்குமே நேரமில்லை…!’

‘அப்படியா?’ என்றேன்.

‘குழந்தை பிறந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது மாமி. குழந்தை பிறப்பதற்கு முன் நான் எப்படி இருந்தேன் என்பதே மறந்துவிட்டது…. குழந்தை இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை……!’

‘ஒரு டிரெஸ் கூட சரியான அளவில் இல்லை. குழந்தை பிறப்பதற்கு முன் போட்டுக் கொண்ட டிரெஸ்களையே இன்னும் போட்டுக் கொண்டிருக்கிறேன்…’

ஓ! அதுதான் இந்த நைட்டி இத்தனை அழுக்கா?

‘நான் என் குழந்தைக்கு ஒரு சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும். அவனைத் தவிர எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை இந்த உலகத்தில். அவனும் என்னையே எல்லாத்துக்கும் நம்பி இருக்கிறான்…! எனக்கு என்னைப் பற்றிய நினைப்பே இல்லை…!’

என் மடியில் இருந்த குழந்தை ‘ங்…ங….!’ சிரித்தது.

‘பாருங்கோ மாமி, அவனுக்கு நா பேசறதெல்லாம் புரியறது!’

‘அப்படியா? எனக்கு அவன் வேறெதுக்கோ சிரிக்கறாப்பல இருந்தது…!’

‘………..?!’

‘இப்படி உட்காரும்மா….’ அந்தப் பெண்ணை பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டேன்.

‘சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்றால் தலையை வாரிக் கொள்ளக் கூடாது; நல்ல உடை உடுத்திக் கொள்ளக் கூடாது என்று எங்காவது எழுதி வைத்திருக்கிறதா?’

‘…………………………ஆனா மாமி…!’ ஆரம்பித்தவளை நான் தடுத்தேன்.

‘தன்னை சரியாகப் பரமாரித்துக் கொள்ளும் ஒரு பெண்ணால் தான் தன் குழந்தையையும் சரியான முறையில் வளர்க்க முடியும். நீ இப்படி இருப்பது உன்னால் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு இரண்டையும் சரியாகச் செய்ய முடியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நீ இப்படி இருந்தால்தான் குழந்தை சந்தோஷப்படும் என்று யார் சொன்னார்கள்? நீ இப்படி இருப்பது நிச்சயம் உன் குழந்தைக்கும், கணவனுக்கும் எந்த விதத்திலும் நிறைவைக் கொடுக்காது.’

‘குழந்தையை கவனிக்காமல் நீ உன் அலங்காரத்தில் கவனம் செலுத்த வேண்டும்ன்னு நான் சொல்லலை. ஆனாலும் உன் அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக் கொண்டுதான் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நீயே உனக்கு போட்டுக் கொள்ளும் முள் வேலி. இது  தேவையில்லாதது.’

நான் சிறந்த மகளாக இருக்க வேண்டும், சிறந்த மனைவியாக இருக்க வேண்டும், சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் – தேவையில்லாத சங்கிலிகள். இவற்றால் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே.

ஒரு ஆணிடம் போய் ‘நீ அப்பாவாகிவிட்டாய். இனி உன் சந்தோஷத்தை யெல்லாம் குறைத்துக் கொள். சினிமா பார்ப்பதை விட்டுவிடவேண்டும்; நல்ல உடை அணியக்கூடாது; யாருடனும் சிரித்துப் பேசக்கூடாது,’ என்று சொல்லிப் பாருங்கள். ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது?’ என்பான்.

அதேபோலத்தான் பெண்களும் குழந்தை பிறந்தவுடன் தன் சுகத்தை எல்லாம் தியாகம் செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை.

இதைபோல நிறைய பெண்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். தியாகம் செய்கிறோம் என்ற பெயரில் தங்களுக்குத் தாங்களாகவே பல சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

எந்தப் பெண் எப்போதும் தன்னை நன்கு உணர்ந்து தன் உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, நேர்மறையான எண்ணங்களுடன், தைரியமாக, தான் செய்யும் வேலைகளைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல், சந்தோஷமாக, நிறைவாக இருக்கிறாளோ அப்போது தான் அவள் சிறந்த மகளாக, மனைவியாக, அம்மாவாக விளங்க முடியும்.

செல்வ களஞ்சியமே படிக்கும் அனைத்து பெண்மணிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

பி.கு. இன்றைக்கு மகளிர் தினம் என்பதால் மனதில் இருப்பதை எழுதிவிட்டேன். அடுத்த வாரம் வழக்கம்போல தொடருகிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக