Monthly Archives: நவம்பர் 2012

நலம் நலம் தானே நீயிருந்தால்

சென்ற வாரம் வாழ்க்கை துணைக்கு உடல் நலம் சரியில்லை. தலை சுற்றல்.

மருத்துவர் மருந்து கொடுத்துவிட்டு, ‘அடுத்த வாரம் வாருங்கள், தேவைப் பட்டால் ப்ரைன் ஸ்கேன் செய்யலாம்,’ என்றார்.

‘ஏதாவது நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் சொல்லுங்கள். மறதி அதிகம் இருக்கிறதா?’

எப்போதுமே யாருடைய பெயரும் நினைவிருக்காது வா.து. வுக்கு. ஒரு முறை வழக்கமான தொலைக்காட்சி தொடரை ஒரு நாள் பார்க்க முடியாமல் போயிற்று. வா.து. விடம் ‘என்ன ஆச்சு?’ என்றேன்.

‘ஒண்ணும் ஆகலை. அவ இருக்கால்ல… இவளோட வீட்டுக்கு அவ வரா. இவளோட அம்மா அவளைப் பத்தி எதோ சொல்ல…இவளுக்கு கோவம் வந்து…இவளோட ஆம்படையான் அவளை திட்ட….’

அடுத்த வாரம் நானே பார்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டேன்!

மருத்துவரும் எங்களுடன் கூட சிரித்து விட்டு ‘உட்கார்ந்த இடத்திலேயே தூங்குகிறாரா?’ என்று அடுத்த கேள்வி கேட்டார்.

‘பின்ன? உட்கார்ந்த இடத்தில் தான் தூங்குவார்.  தொலைக்காட்சி சத்தம் தான் தாலாட்டு. தொலைக்காட்சியை நிறுத்தினால் அடுத்த நொடி எழுந்து விடுவார். அத்தனை மின் விளக்குகளும் எரிய…தூங்கினால் தான் உண்டு. படுத்தால் தூக்கம் போய் விடுமே…!’

மருத்துவர் வாய் விட்டு சிரித்தார். ‘நீங்கள் இப்படி பேசினால்…..’

‘உங்களுக்கு நோயாளிகள் குறைந்து விடுவார்கள்….’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

அடுத்த வாரம். மருத்துவ மனை செல்ல லிப்ட் அருகே போனோம். வா.து. மூக்கை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘ஏதோ பர்னிங் ஸ்மெல்….!’ என்றார்.

‘ப்ரைன் ஸ்கேன் தேவை இல்லை….யு ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்’ என்றேன் நான்.

மருத்துவர் நான் சொன்னதை ரசித்துவிட்டு ‘எதற்கும் ஈ.என்.டி – யை பாருங்கள்’ என்றார்.

ஈ.என்.டி நிபுணர் பல்வேறு நிலைகளில் வா.து. வை படுக்க வைத்து, எழ வைத்து…..  ‘ஒன்றுமில்லை…. காதுக்குள் இருக்கும் திரவத்தில் ஏதேனும் குறை இருக்கலாம். காதுக்குள் சிறிது மெழுகு சேர்ந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு இந்த மருந்தைப் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் காதுகளை சுத்தம் செய்யலாம்’ என்று கூறி அனுப்பினார்.

வீட்டிற்கு வந்தோம். வா.து. சொன்னார்.

‘கண்ணிற்கு மருந்து காலை 8 மணிக்கு. கொஞ்ச நேரம் கழித்து காதிற்கு மருந்து போடு’ என்றார்.

நான் சிரித்தேன். ‘பழைய வண்டிகளுக்கு எண்ணெய் போட்டு ஓவர்ஹால் செய்வது போல  ஒரொரு உறுப்புக்கும் மருந்து போட்டு சரி செய்து கொள்ள வேண்டும் – வயதானால்….’ என்றேன்.

வாழ்க்கை துணையும் கூடவே சிரித்தார்

வயதுடன் கூட நகைச்சுவையும் கூடினால் நல்லதுதானே?

நலம் (நான்), நலம்(ஆகத்) தானே நீயிருந்தால்!

 

‘அத்தே! நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்…!’

‘எனக்கு தொலைக்காட்சியில் விளம்பர இடைவெளிதான் பிடிக்கும்….’

‘என்னங்க! இப்படி சொல்லுறீங்க?’

‘அப்பத்தானே என் பெண்டாட்டி எனக்கு சாப்பாட்டு போடுறா….’

பலமுறை கேட்ட ஜோக்.

பண்டிகை சமயங்களில் முழு சமையலையே முடித்து விடலாம் – விளம்பர இடைவெளிகளில்!

அலுப்புத் தட்டும் விளம்பரங்கள்!

இன்னொரு விஷயத்திற்காகவும் நான் விளம்பரத்திற்கு விரோதி. இந்த சானலில் விளம்பரம் என்று அடுத்த அடுத்த சானல்களுக்குப் போய், முதலில் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி எதுவென்று மறந்துவிடும் அல்லது முடிந்து விடும்!

இப்போதெல்லாம் ரிமோட் என் கையில் இருந்தால்தான் தொலைக்காட்சி பார்ப்பது என்று தீர்மானம் செய்து விட்டேன்.

காலை 6.30 (ஸ்ரீ ராமபிரான் கதையமுதம்)  மாலை 6.30 (ஸ்ரீ கண்ணபிரான் கதையமுதம்)  இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் போது மட்டும் தான் எனக்கு ரிமோட் வைத்துக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். அதாவது ரிமோட்டினால் எனக்கு பயன் ஏதும் இல்லாத போது!

ஓர் விஷயத்திற்கு பொதிகை தொலைக்காட்சியைப் பாராட்ட வேண்டும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் இடையில் விளம்பரங்கள் கிடையாது. மிகப் பெரிய ஆசுவாசம்!

இந்த நிகழ்ச்சிகள்  ஆரம்பிப்பதற்கு முன் வரும்  விளம்பரத்தின் வார்த்தைகள்தான் இந்தப் பதிவின் தலைப்பு.

இதோ முழு விளம்பரம்:

ஒரு பெண் வேகவேகமாக பாத்திரம் துலக்குகிறாள்; துணி துவைத்து காயப் போடுகிறாள்; வீட்டைக் கூட்டுகிறாள்; ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் மாமியாரின் கடுகடு பார்வை அவளின் ஒவ்வொரு அசைவையும் தொடர்கிறது.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு ‘அத்தே! நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்…!’ என்கிறாள்.

‘ஸ்கூலுக்கா? கல்யாணம் கட்டிக்கிட்டு வரச்சே என்னமோ சொன்ன, படிச்சிருக்கேன்னுட்டு….?’

தலையை ஒரு நொடிப்பு நொடித்து அத்தை கேட்கிறாள்.

மருமகள் ஒரு சிறிய புன்சிரிப்புடன் பதிலளிக்கிறாள்: ‘அட அத்தே! நா பார்ம் ஸ்கூலுக்குப் போறேன்….விவசாயத்துல புதுசு புதுசா கத்துக்க……’

உடனே விவசாயிகளுக்காக பார்ம் ஸ்கூலில் என்னென்ன சொல்லித் தருகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். முடிந்தவுடன்….

‘நீங்களும் வாங்க அத்தே! குறைந்த செலவில்……’ மருமகள் ஆரம்பிக்க ‘நிறைந்த லாபம்…’ என்று ஒரு புன்னகையுடன் அத்தை முடிக்கிறார்.

இன்னொரு விளம்பரம்:

ஒரு விவசாயி. கைபேசியில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டே வருவார். அவரது மனைவி பார்த்துக் கொண்டே இருப்பார்.

ஒரு வழியாக பேசி முடித்து விட்டு மனைவி பக்கத்தில் வந்து அமருவார்.

‘இவ்வளவு நேரம் சிரிச்சு சிரிச்சு யார் கிட்ட பேசிகிட்டு இருந்தீங்க?’

‘விவசாயிகள் கால் சென்டர்ல பயிர் பாதுகாப்பு பத்தி பேசிட்டு இருந்தேன்…’

‘காலேல சரி, மதியம் கூடவா…..?

‘ஆமா….விவசாயிகள் கால் சென்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்……’

‘ஞாயிற்றுக் கிழமை கூடவா?’

‘ஆமா, வருஷம் 365 நாளும் உண்டு….’

‘அப்படியா…? இத்தனை செலவு யார் கொடுப்பாங்க?’

‘அரசாங்கம் தான்………..ஆமா…நீ என்ன நெனச்சே…..?

‘நான் என்னமோன்னு நெனேச்சேன்……’ மனைவியில் குரலில் ஒரு நிம்மதி.

கணவன் மனைவி இருவரும் வாய் விட்டு சிரிப்பார்கள்.

விவசாயிகள் கால் சென்டரில் இருப்பவர்களுடன் சிரித்து சிரித்து (!!) பேச முடியுமா என்று தோன்றினாலும் பெரிய பெரிய பிராண்ட் பொருள்களுக்கு காட்டப்படும் விளம்பரங்களின் அசட்டுத் தனங்கள் (நீ பஜ்ஜி சாப்பிடும்மா… ) இதில் மைனஸ்.

மூன்றாவதாக ஒரு சாமியார்: விவசாயிகளுக்கு  பயிர் விளைச்சல் பற்றியும், பாதுகாப்பு பற்றியும் சாமியார் சொல்வதெல்லாம் பலிக்கிறதாம். ஒரு நாள் சாமியாரின் குட்டு வெளிப்பட்டது! (இந்த சமயத்தில் சாமியார் தொலைபேசியில் – விவசாயிகள் கால் சென்டரில் விவரங்கள் கேட்டுக் கொண்டே தன் சாமியார் ‘விக்’ கை எடுப்பார். வாசலில் இரண்டு போலீஸார்கள்!) நல்ல காமெடி!

போலித்தனங்கள் இல்லாமல் வெகு இயற்கையாக அமைந்திருக்கும் இந்த விளம்பரங்கள்.

இதில் நடித்திருப்பவர்கள் வழக்கமான நடிகர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.

ஆண்கள் ஷேவ் செய்வது பெண்களுக்காகவே என்பது போலவும், பெண்களின் சிகப்பழகு கிரீமை எடுத்துக் கொண்டு ஆண் ஓடுவது போலவும், இளம் பெண்களை கைகளைத் தூக்குங்கள் என்று சொல்லுவதும் லெட்ரீன் கம்மோடை வலது கையால் தடவிப் பார்த்து ஆனந்திக்கும் (!?) இல்லத்தரசியும் – விளம்பரம் உருவாக்குபவர்களுக்கு கிரியேட்டிவிட்டி என்பதே இருக்காதோ என்று நினைக்க வைக்கும்.

மருத்துவ மனையில் உடல் முழுக்க கட்டுகளுடன் படுத்திருக்கும் ஒருவரை தூக்கி நாற்காலியில் உட்கார வைத்து விட்டு தொலைக்காட்சி பார்க்கும் இளைஞன், ‘உங்கள் சந்தோஷத்தை திறவுங்கள்’ என்கிறான் கோகோகோலா பாட்டிலைத் திறந்தபடி!

கற்பனையை மூட்டை கட்டிப் போட்டு விட்டு அல்லது கற்பனைக் குதிரையை கன்னாபின்னாவென்று தாறுமாறாக ஓடவிட்டு இந்த விளம்பரங்களை எடுத்து இருப்பார்களோ என்று தோன்றும். (சந்தோஷத்தைத் திறக்க கற்பனையை மூடி விடு!)

இன்னொரு விளம்பரம் வொண்டர் கேக்-கிற்கு வருவது. அதில் வரும் சின்னப்பையன் இப்போது வளர்ந்து திருமணம் ஆகி அப்பா ஆகி இருப்பான். வருடக்கணக்காக அதே சின்னப் பையனையும், அதே ‘அ..ஹ்..ஹஹா…….வொண்டர் கேக் …’ பாடலையும் மாற்றாமல் பயன்படுத்தி வருகிறார்கள். கடைகளில் போய் வொண்டர் கேக் இருக்கிறதா என்று கேட்க பயம்.  எப்போதோ தயார் செய்த விளம்பரம் போல எப்போதோ தயார் செய்த அதே கேக்கைக் கொடுத்தால் என்ன செய்வது என்று!

நான் ரசிக்கும் விளம்பரங்கள் பொதிகை தொலைக்காட்சியில் மட்டுமே வரும்; அதுவும் நான் சொன்ன நேரங்களில் மட்டுமே!

 

 

லீப் வருடம் – சுவையான தகவல்கள்!

நீங்கள் உங்கள் ‘பொன்னான பிறந்த’ (Golden Birthday) நாளைக் கொண்டாடி இருக்கிறீர்களா?

‘பொன்னான பிறந்த நாளா?’ என்று வியப்பவர்களுக்கு: உங்கள் பிறந்த தேதியும், உங்கள் வயதும் ஒன்றாக இருந்தால்   (அதாவது 27 ஆம் தேதி உங்கள் 27 வது பிறந்தநாள் வந்தால் அதுதான் உங்களது ‘பொன்னான பிறந்த நாள்’. 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்களது 53 வது பிறந்த நாளை ‘பொன்னான பிறந்த நாளா’ கக் கொண்டாடலாம்.

சரி லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் எப்போது தங்களது ‘பொன்னான பிறந்த நாளை’ கொண்டாடுவார்கள்? யோசியுங்கள்….. விடை கடைசியில்…….

ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும்.தெரியாத விஷயம்: நூற்றாண்டுகள் வரும்போது அவை 400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது!

லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்:

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள்  அதாவது 365 1/4 நாட்கள். எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர்.

 • முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும்.
 • நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.
 • ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753 க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொதுமக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களைஇழந்து  விட்டதாக நினைத்தனர்!
 • 1930 களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக ஞாயிறு விடுமுறை) இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில்வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால்,இந்த முறை, அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.

பழங்காலத்தில் லீப் வருடம்: 

 • முற்காலத்தில் ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்க லீப் வருடமே சிறந்தது என்று கருதப் பட்டது. லீப் வருடத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்லலாம் என்று 5 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டில் ஒரு வழக்கம் இருந்ததாம். 13 ஆம் நூற்றாண்டில் இதை அரசு பூர்வ சட்டமாக மாற்றியவர் ஸ்காட்லாந்து ராணி மார்கரெட்.
 • ஒரு பெண் லீப் வருடத்தில் தன் காதலை சொல்லி அதை ஏற்க மறுக்கும் ஆண் மகன் அவளுக்கு புதிதாக பட்டு உடையும் ஒரு ஜோடி கையுறையும் கொடுக்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்ததாம்.
 • சில நாடுகளில் லீப் வருடம் அமங்கலமான வருடமாக கருதப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் லீப் வருடத்தில் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாத குழந்தையாகக் கருதப் பட்டது. கிரேக்க நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் லீப் வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளுவதையே தவிர்த்தனர்.

லீப் வருடமும் சினிமாவும்:

 • அயர்லாந்து நாட்டில் பழைய காலத்தில் இருந்த வழக்கத்தை அடிப்படையாக வைத்து 2010 ஆம் ஆண்டு ‘லீப் இயர்’ (Leap Year) என்ற நகைச்சுவைப் படம் வெளியானது. தன் மனதுக்குப் பிடித்தவனை ‘ப்ரொபோஸ் ‘ செய்ய அயர்லாந்துக்கு பிரயாணம் செய்யும் ஒரு பெண்ணின் கதையை நகைச்சுவையுடன் விவரிக்கிறது இப்படம்.
 • 19 ஆம் நூற்றாண்டு வெளி வந்த ‘The Pirates of Pinzance” என்கிற நகைச் சுவை இசை நாடகம், கப்பற் கொள்ளைக்காரனான ஒரு இளைஞன் பற்றியது. வேலைக்குச் சேர்ந்தவுடன் அவனது பயிற்சி பருவம் (apprenticeship) அவனது 21 வயது வரை என்று நிர்ணயிக்கப் படுகிறது. முதலில் மகிழ்ச்சி அடையும் அவன் தன் பிறந்த நாள் பிப்ரவரி 29 என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான்! 84 வயதில் தான் அவனது 21 வது பிறந்த நாள் வரும்!

சராசரியாக 1461 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே இந்த லீப் வருடம் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறக்கும் பாக்கியத்தைப் பெறுகிறது.

இக்குழந்தைகள் ‘Leaplings’ என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் பிறந்தநாளின் கால் பகுதியைத்தான் கொண்டாடுகிறார்கள். பிறந்த தேதி வராத வருடங்களில் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 ஆம் தேதி தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

 • பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்த நம்மூர் பிரபலங்கள்: மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் நடனக் கலைஞா் ருக்மிணி தேவி.
 • உலகப் புகழ் பெற்ற சூப்பர் மேன் பிறந்தது இதே பிப்ரவரி 29. இவரது 50 வது பிறந்த நாளை ‘டைம்ஸ்’ பத்திரிக்கை 1988 ஆம் ஆண்டு தனது அட்டைப் படத்தில் சூப்பர் மேனைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு கொண்டாடியது.
 • ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மேனியா பிரதமர் சர் ஜேம்ஸ் வில்சன் பிறந்தது, இறந்தது இரண்டுமே பிப்ரவரி 29 ஆம் தேதிதான்!

2012 லீப் வருடம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆண்டின் தெரியாத விசேஷங்கள்:

 • இந்த ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் Rare Disease Day யாக கடை பிடிக்க உள்ளனர். குணப்படுத்த முடியாத, அரிதான, நோய்களை ‘rare disease’ என்கிறார்கள். இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
 • அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட் இந்த வருடத்தில் வரும் ஒரு அதிகப் படியான நாளைக் கொண்டாட 29 ஆம் தேதி 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

சரி, இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு பதில் பார்ப்போமா? பிப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் தங்கள் பொன்னான பிறந்தநாளை தங்களது 116 வது வயதில் கொண்டாடுவார்கள்!!!!

 

 

கங்கா ஸ்நானம் ஆச்சு!

‘ஸ்ரீராமா ஜெயஜெயா…..சீதே மனோஹரா ….

காருண்ய சாகரா கருணாநீ ஜெயஜெயா…’

விடியற்காலை 5 மணிக்கே (!) எழுந்து பிள்ளை மாட்டுப் பெண்ணை மணையில் உட்கார வைத்துப் மேற்சொன்ன பாட்டைப் பாடி நலங்கு இட்டு…..தலைக்கு எண்ணெய் வைத்து…

முதலில் இந்தப் பாட்டை பாடி பிறகு இதன் தமிழ் பதிப்பை பாடுவது என் வழக்கம்.

மேலே சொன்ன பாட்டோட தமிழாக்கம் – சம்ஸ்க்ருத / தமிழறிஞர்கள் கோபிக்க வேண்டாம்.

முழுக்க முழுக்க வேடிக்கை!

சீராமா, மொ(மி)ளகாமா – சேர்த்தரைச்சா விழுதாமா

காய்ச்சினா ரசமாமா – கடுப்பு வலிக்கு இதமாமா!

ஒரிஜினல் பாட்டை பாடும் அதே ராகத்தில் இதைப் பாடலாம்!

கங்கா (காவேரி) ஸ்நானம் செய்து புதுசு கட்டிண்டு பட்டாசு வெடிக்க கீழே போனோம்.

மாடி வீட்டு ஸ்ருதி நான் வருவதைப் பார்த்துவிட்டு, ‘பாட்டி, ஹேப்பி தீபாவளி’ என்றது. 3 வயதுக் குழந்தை. அதை அப்படியே கட்டிண்டு, ‘ஹேப்பி தீபாவளி’ என்றேன்.

ஸ்ருதியின் அண்ணா ராகுல் வாசலில் வெடி வெடிச்சுண்டு இருந்தான். ஸ்ருதி காதைப் பொத்திண்டு, ‘எனக்கு வெடின்னா ரொம்ப பயம்’ ன்னு  எங்கிட்ட வந்து ஒட்டிண்டு நின்னுது.

குழந்தைகளை அணைப்பது என்பது எத்தனை பெரிய இன்பம்! நம் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ‘உன்னைத் தழுவிடிலோ… கண்ணம்மா..உன்மத்தம் ஆகுதடி!’

என் பிள்ளை என்னிடம் ‘நீ ஆட்டம்பாம் வைக்கிறயா?’ என்றான்.

‘சரி’ என்று எழுந்தேன்.

‘பாட்டி…! நீ வெடிப்பியா?’ என்றது ஸ்ருதி.

‘ம்ம்ம்ம்…….’ என்றபடியே வெடி வெடித்து விட்டு வந்தேன்.

‘நீங்க செம பாட்டி….!’ என்றான் ராகுல்.

கங்கா ஸ்நானம் ஆச்சு!

பதிவுலக வாசகர்களுக்கும், பதிவாளர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

 

 

ரமாவும் ரஞ்சனியும்!

ரஞ்ஜனியை எல்லோருக்கும் தெரியும். அதாங்க, அ. உ. பு. பதிவாளர்!

ரமா யார்? அ. உ. பு. பதிவாளர் ரஞ்ஜனியின் அக்கா. என்னைவிட 3 வயது மூத்தவள்.

என்னைவிட புத்திசாலி. எல்லாவிதத்திலும் என்னைவிட சிறந்தவள். மிக நன்றாகப் பாடுவாள்.

சின்ன வயதில் அவளுடன் நான் எப்பவுமே எல்லாவற்றிற்கும் போட்டி போடுவேன். அவள் திருமணம் ஆகிப் போகும் வரையிலும் இது தொடர்ந்தது.

கோலம் போடுவதில் வல்லவள். புள்ளிக் கோலங்கள் அனாயாசமாகப் போடுவாள். எனக்கு வராத பல கலைகளில் இதுவும் ஒன்று. நான் போடும் கோலங்கள் மாடர்ன் ஆர்ட் வகையை சார்ந்தவை. மிகுந்த பொறுமையுடன் புள்ளிகள் வைத்து அவள் கோலத்தை போடுவதை காணக் கண் கோடி வேண்டும்.

‘நீ புள்ளி வைத்துப் போடும் கோலத்தை நான் புள்ளி இல்லாமலேயே போடுவேன்’ என்று பல தடவை சவால் விட்டு தோற்றவள் நான்.

வெள்ளிக்கிழமைகளில் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து  கூடத்தை அடைத்துக் கோலம் போடுவாள், பாருங்கள்! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்.

கோலத்திற்கு அடுத்தபடியாக இப்போது அவள் விரும்பிச் செய்வது ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பது.

திருமணம் ஆவதற்கு முன் சுருக்கெழுத்து.

வானொலியில் வரும் ஆங்கில செய்திகளை கேட்டு சுருக்கெழுத்தில்  எழுதிக் கொண்டே இருப்பாள். சுருக்கெழுத்தில், சுருக்கெழுத்தாளர் எழுதும் ஸ்ட்ரோக்ஸ் (strokes) ரொம்ப முக்கியம். அதை வைத்துதான் எழுதிய விஷயத்தை ஆங்கிலத்தில் transcribe செய்ய வேண்டும். அக்காவின் ஸ்ட்ரோக்ஸ் perfect ஆக இருக்கும். நான் எப்போதும் போல ‘சமாளி’ தான்!

அவளுக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ஆபீஸிற்கு அப்பா போன் செய்திருந்தார். ‘அக்காவை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறோம். முடிந்தால் லீவு சொல்லி விட்டு வா’ என்று.

எனக்கு ஆபீஸ் போவதை விட லீவு போடுவது பிடித்தமான விஷயம் ஆயிற்றே! உடனே லீவு சொல்லிவிட்டுப் பறந்தேன்.

இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. அம்மா அப்போதுதான் அக்காவிற்கு காபி கலந்து எடுத்துப் போகலாம் என்று வீட்டிற்கு வந்திருந்தாள். ‘கொஞ்சம் போய் அவள் பக்கத்தில் இரு’ என்றாள்.

நான் உள்ளே நுழையவும் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு ஆயா வெளியே வந்து ‘இத பாரு, உங்க அக்கா குழந்தை’ என்று சொல்லிய படியே நல்ல ரோஸ் கலரில் ஒரு பஞ்சு உருண்டையை என் கையில் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டேன்.

‘முதன்முதலில் நான் தான் உன்னைப் பார்த்தேன்; நான்தான் எடுத்துக் கொண்டேன்’ என்று (அதிலும் போட்டி!) இன்றும் என் அக்காவின் பிள்ளை சம்பத்குமாரனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை அவன் தான் என் முதல் பிள்ளை. அந்த வாத்சல்யம் இன்னும் குறைய வில்லை. அவனுக்கு மட்டுமில்லை – அவனுடைய இரு குழந்தைகளுக்கும் – (ஷ்ரேயா, மேக்னா)   நான் சித்தி தான்! இருவரையும் என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்து விட்டார். அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. அடுத்த வருடம் என் அக்காவும் அத்திம்பேரும் எங்களை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விருந்து கொடுத்தனர்.

எனக்கு பூச்சூட்டல் செய்து, சீமந்தத்திற்கு சீர்கள் கொண்டு வந்து வைத்து, தலைப் பிரசவத்திற்கும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனாள் அம்மாவாக இருந்து.

எங்கள் அத்திம்பேர் சின்ன வயதில் பரமபதித்தது எங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

தைரியமாக தனக்கு நேர்ந்ததை எதிர் கொண்டு தனி ஒருவளாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள். அம்மாவும் அவளும் அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்து இருக்கிறார்கள். நாலாயிர திவ்யப்பிரபந்தம் அத்தனையும் அத்துப்படி.

கண்களில் நீர் தளும்பப் பெருமாளை அலுக்காமல் சலிக்காமல் சேவிப்பாள்.

எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.

அவளுடன் கொண்டாடிய தலை தீபாவளி நினைவுகளுடன்………

இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ‘திவ்ய தம்பதியரின் தீபாவளி’ என்ற பதிவின் தொடுப்பை  இணைத்திருக்கிறார். அருமையான புகைப்படங்கள். தீபாவளித் திருநாளுக்கு முன்பாக திவ்ய தம்பதியரை சேவித்து ஆனந்தப் படுவோம்!

 

நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி

சத்தமில்லாமல் ஒரு தீபாவளி!

இந்த ஊருக்கு வந்த வருடம். சென்னையில் தீபாவளி கொண்டாட வா என்று அழைத்தும் போகாமல் இங்கேயே கொண்டாட முடிவு செய்தோம்.

புது ஊர்ல கொண்டாடலாம் என்று துணிமணிகள் எல்லாம் வாங்கியாகி விட்டது.

தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு பட்டாசு வாங்கலாம் என்று கிளம்பினோம். கடைகடையாக ஏறி இறங்கியது தான் மிச்சம். பட்டாக்கி வரவே இல்லை என்றார்கள்.

‘ச்சே! ஒழுங்கா சென்னையிலேயே இருந்திருக்கலாம்…..’ குழந்தைகள் இருவரும் வெறுத்துப் போயினர்.

நம்மூரில் பொட்டிக் கடையில் கூட பட்டாசு கிடைக்கும். இங்கு என்ன இப்படி? யோசனையுடன் தோழியைக் கேட்டேன்.

பல வருடங்களுக்கு முன் மிகப் பெரிய தீ விபத்து பட்டாசுக் கடையில் ஏற்பட்டதினால் தீபாவளிக்கு ஒரு வாரம் முன் வரை எங்கேயும் பட்டாசு விற்பனை கிடையாது. விற்பனை காலி திடல்களில் தான் நடக்கும்; கடைகளில் பட்டாசு கிடைக்காது என்ற விவரம் தெரிந்தது.

என்ன செய்வது? காத்திருக்க வேண்டியதுதான்.

ஒரு வழியாக ஊருக்கு வெகு தொலைவில் கடைகள் போடப்பட்டு பட்டாசுகள் வாங்கியும் ஆச்சு.

நம்மூர் வழக்கப்படி நான்கு மணிக்கே குழந்தைகளை எழுப்பி நலங்கு இட்டு, தலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் ஆயிற்று. எல்லோரும் புதுசு உடுத்திக் கொண்டு தீபாவளி மருந்து சாப்பிட்டு, பட்டாசு பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினால்……………..

ஊரே தூங்கிக் கொண்டிருக்கிறது. வீதியில் ஈ காக்கா இல்லை. அவையெல்லாம் விடிந்துதானே வரும்! பெயருக்குக் கூட ஒருவரும் இல்லை. நிசப்தம்!

‘நாம வெடி வெச்சு எல்லாரையும் எழுப்பலாம்மா!’

மகன் சொன்னான்.

‘அதெல்லாம் தப்பு!’ என் கணவர் சொல்லிவிட்டு திரும்ப மாடிக்குப் போய் விட்டார்.

‘இதுக்குதான் சென்னையிலேயே இருந்திருக்கலாம்….. இங்க வந்ததுதானால கன்னட வேற படிக்கணும்…!’ குழந்தை முணுமுணுத்துத்தான்.

அவரவர்கள் வருத்தம் அவரவர்களுக்கு!

எல்லோரும் வீட்டுக்குள் போய் உட்கார்ந்தோம். சரி விடிந்தவுடன் பட்டாசு வெடிக்கலாம் என்று குழந்தைகளை சமாதானப்படுத்தினேன்.

விடிந்தும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை. அன்று முழுதும் பட்டாசு சத்தம் மட்டுமல்ல; பண்டிகைக்கு உண்டான அறிகுறியே இல்லை.

பெங்களூர் காரர்கள் கொஞ்சம் நிதானம் தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஊரே ‘வயசாளிகளின் சுவர்க்கம்’ என்றுதானே அழைக்கப்படுகிறது! ஆனாலும் இப்படியா?

மறுபடி தோழியை கேட்டேன்.

‘அதுவா? இன்னிக்கு அமாவாசை. அமாவாசையன்று ஒன்றுமே பண்ணமாட்டோம்! நாளைக்கு பலி பாட்யா (பிரதமை) தான் கொண்டாடுவோம். நேற்று சதுர்த்தசி – நீர் நிறைக்கும் பண்டிகை. நீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை நன்றாக கழுவி நீர் நிறைத்து வைப்போம்….’

‘பட்டாசு எப்போ வெடிப்பீங்க?’

‘நாளைக்குத் தான் பட்டாக்கி வெடிப்போம்!’

சரி நாமும் நாளைக்கு வெடிக்கலாம் என்று குழந்தைகளை சமாதானப்படுத்தி விட்டு அன்றைய பொழுதைக் கழித்தோம்.

அடுத்த நாளும் சத்தமே இல்லை.

‘இந்த ஊருல சத்தமில்லாத பட்டாக்கி இருக்குமோ?’

பகல் பொழுது போயிற்று. என் பிள்ளைக்கு 6 வயது. பட்டாசை எடுப்பதும் என் கணவரின் முகத்தை பார்ப்பதுமாக……

சாயங்காலம் சிறிது சத்தம் கேட்டது தூரத்தில். குழந்தைகள் இருவரும் துள்ளிக்குதித்து கொண்டு கீழே இறங்கினர். கூடவே நாங்களும் போய் பட்டாசு வெடித்தோம்.

தீபாவளிக்கு அடுத்த நாள் பட்டாசு வெடித்தவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.

இப்போது இதெல்லாம் பழகி விட்டது. தீபாவளியன்று நாங்களும் மெதுவாக எழுந்து…..நிதானமாக குளித்து…….அதைவிட நிதானமாக பட்டாசு வெடித்து………!

பெங்களூர் வாசிகளாகி விட்டோம்!

இந்த ஊரின் தலைமை செயலகத்துக்கு என்ன பெயர் தெரியுமோ?

விதான சௌதா என்றால் உங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண். ஆனால் அதன் செல்லப் பெயர் : நிதான சௌதா!

எல்லாமே நிதானம் தான்! கோன் எப்படியோ அப்படித்தானே குடிகளும்?

 

 

ஏன் இந்த தலைப்பு?

 

 

வாழ்க்கை என்பதும் ஒரு புள்ளிக் கோலம் தான். கோலத்தின் புள்ளிகள் போல பல நிகழ்வுகள். சில  ஒருவரின் வாழ்வை பலப் படுத்துகின்றன. சில பலவீனப்படுத்தும். எல்லாவற்றையும் எதிர்கொள்ளவதுதான் வாழ்க்கை.

முதல்  புள்ளியில் இருந்து உருவாகும் கோலம், எல்லாப் புள்ளிகளையும் இணைத்துக் கொண்டு திரும்பவும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து சேருவது போல, வாழ்க்கையிலும் எத்தனையோ இணைதல்கள்; அரவணைப்புகள்!

சில அரவணைப்பிலிருந்து வெளியேறும். சில நம் அரவணைப்புக்குள் வந்து சேரும்.

எல்லாவற்றையும் சொல்லத்தான் இந்த தளம்!

புள்ளிக்கோலம்: நன்றி: kaakitham.wordpress.com