All posts by ranjani135

About ranjani135

என்னைப் பற்றி....... சாதாரண இல்லத்தரசி..........2000 மாவது ஆண்டு வரை! 1997 ல் மகளுக்கு திருமணம். மாப்பிள்ளை கன்னடக்காரர். பெண்ணைக் கொடுக்கிறோம் என்று அவர்களது சம்பிரதாயம் ஒரு கூட விடாமல் ஒரு கன்னடத் தோழியைக் கேட்டுக் கேட்டு எல்லாம் செய்தேன். வாழைக் காய் கூடாது என்றார்கள்; உளுந்து வடைக்கும் ஒரு பெரிய NO! (நம்ம வீட்டில் நீதான் வாழைக்காய் கறியமுது இல்லாமல், வடை இல்லாமல் இப்படி ஓரு கல்யாணம் செய்திருக்கிறாய் என்று சென்னையில் இருக்கும் என் உறவினர்கள் இன்றும் சொல்லிக் காட்டுகிறார்கள்!) பெண்ணுக்கு இரண்டு தாலிகள் – ஒன்று அம்மாவே கட்ட வேண்டும் என்றார்கள்! இப்படியாக பல பல சம்பிரதாய வித்தியாசங்களை சமாளித்து திருமணத்தை நடத்தி முடித்தோம். இதை கருவாக வைத்து ஒரு கதை எழுதினேன். “அத்தையும் ராகி முத்தையும்” என்ற பெயரில். என் முதல் கதை – மங்கையர் மலரில் 2000 மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. என் எழுதும் திறமையில் அப்போதுதான் எனக்கே நம்பிக்கை வந்தது. ‘அவள் விகட’னிலும் ‘மங்கையர் மலரிலும் நிறைய எழுதினேன். என் படைப்புக்கள் அத்தனையும் ஒரு தொகுப்பாக இருக்கட்டும் என்று wordpress இல் எல்லாவற்றையும் பதிப்பித்துக் கொண்டிருக்கிறேன். படிக்கும் அனைவருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

செல்வ களஞ்சியமே 12

செல்வ களஞ்சியமே – பகுதி 12

இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம்.
புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight!
எழுதியவர் : ருஜுதா திவாகர்

கரீனா கபூரின் zero size க்கு இவரே காரணம் என்று பாலிவுட் முழுக்க சொல்லுகிறது. ஆனால் இவர் சொல்லுவது: ‘ஜீரோ சைஸ் என்பதெல்லாம் சும்மா; இரண்டே வகையான உடம்புதான் -ஆரோக்கியமான உடல்; ஆரோக்கியமில்லாத உடல்’.
புத்தகத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? நம்மில் எத்தனை பேர் எப்படி நம் எடையை குறைப்பது என்று, சொல்லுவார் பேச்சையெல்லாம் கேட்டு, ஏதேதோ செய்து, மன நிம்மதியை இழக்கிறோம்; ஆனால் எடையை இழக்க முடிவதில்லை. எப்படி மன நிம்மதியை இழக்காமல் உடல் எடையை மட்டும் குறைக்கலாம் என்கிறார் ருஜுதா.

பல புத்தகங்களைப் படித்து குழம்பிபோயிருந்த எனக்கு இவரது புத்தகம் நாம் உட்கொள்ளும் ஆகாரத்தைப் பற்றிய ஒரு வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ‘‘எந்த உணவும் எடையைக் கூட்டாது; நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். முழு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து மாம்பழம் சாப்பிட்டால் எடை ஏறும். அதனால் மாம்பழம் எடையை அதிகரிக்கும் என்பது சரியல்ல; சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மாம்பழத்தை தனியான ஒரு உணவாக சாப்பிடுங்கள் எடை ஏறாது’’ என்கிறார் இவர்.

இவரது இரண்டாவது புத்தகம் : Women and the Weightloss Tamasha
நாம் ஏன் இளைக்க வேண்டும்?
திருமணத்திற்கு ‘பார்த்து’க் கொண்டிருக்கிறார்கள்; அடுத்த மாதம் முதல் திருமண நாள் -அதற்குள் இளைக்க வேண்டும்;
இன்னும் இரண்டு மாதத்தில் தங்கை/தம்பி க்குக் கல்யாணம் அதற்குள் கொஞ்சம் இளைத்தால் நன்றாக இருக்கும்;
இதையெல்லாம் தான் ருஜுதா தமாஷ் என்கிறார்.
நான் ஆரோக்கியமாக இருக்க நான் இளைக்க வேண்டும் என்பது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். மற்ற காரணங்கள் நிலையானவை அல்ல; மேற்சொன்ன காரணங்கள் நிறைவேறியவுடன் மறுபடி எடை கூடலாமா? என்று கேட்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.
இவர் தனது இரண்டாவது புத்தகத்தில் பெண்களின் வளர்ச்சியை -பதின்வயது, திருமணத்திற்கு தயாராகுதல், திருமணம், திருமணத்திற்குப் பின், பிரசவத்திற்கு தயாராவது, பிரசவம், பிரசவத்திற்குப் பின், மெனோபாஸ் என்று ஒவ்வொரு நிலையாக சொல்லிக் கொண்டு போகிறார். ஒவ்வொரு நிலையிலும் ஆகார நியமங்கள், உடற்பயிற்சி (Use it or Lose it!) – எந்த உடல் உறுப்பை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அதை நீங்கள் இழக்கிறீர்கள் – என்று மிக விளக்கமாக சொல்லியிருக்கிறார்.

இவைதவிர, நாம் அதிகம் தெரிந்து கொள்ளாத PCOD, PCOS, HYPOTHYROID, DIABETES இவை பற்றியும் பேசுகிறார்.
கருத்தரிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே உடலளவிலும், மனதளவிலும் தயாராக வேண்டும் என்கிறார் இவர். இதைப் படித்தவுடன் எனக்கு யூதர்களைப் பற்றி நான் எழுதிய ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை நினைவுக்கு வந்தது.
யூதர்கள் எப்படி இத்தனை சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்று இஸ்ரேல் நாட்டில் டாக்டராக இருந்த திரு ஸ்டீபன் கர் லியான் என்பவர் தனது 8 வருட ஆய்வுக்குப் பின் எழுதிய கட்டுரை இது.
அதில் அவர், கருவுற்றிருக்கும் யூதப் பெண் தன் குழந்தை சிறந்து விளங்க – உணவு, இசை, கடினமான கணக்குப் புதிர்களை விடுவிப்பது என்று- எப்படியெல்லாம் தன்னை தயார் செய்து கொள்கிறாள் என்று வியந்து எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

ஏன் யூதர்கள் அதி சாமார்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்?
சரி, இப்போது நம் விஷயத்திற்கு வருவோம்.
பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு நல்ல போஷாக்கான உணவுகள் கொடுக்கப்பட வேண்டும். முதலிலிருந்தே தன் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துவரும் பெண்களுக்கு பால் சுரப்பதற்கு தடை ஏதும் இருக்காது. இருந்தாலும் நம் நாட்டில் சில உணவுகளை சிறப்பு உணவுகளாக தாய்பால் ஊட்டும் பெண்களுக்கு சிபாரிசு செய்கிறோம்.
சில வீடுகளில் பூண்டு நிறைய சேர்த்து சமையல் செய்து கொடுப்பார்கள். பூண்டை பாலில் நன்கு வேகவைத்துக் கொடுக்கலாம். உங்களுக்கு எப்படி சாப்பிட்டால் பிடிக்குமோ அப்படி சாப்பிடுங்கள். சில வீடுகளில் அதிக நீர் கொடுக்க மாட்டார்கள் பால் நீர் ஆகிவிடும் என்று! இதுவும் தமாஷ்தான்!

நான் முன் பகுதி ஒன்றில் சொன்னதுபோல இப்போது பத்திய உணவு வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் செரிமானத்திற்குக் கடினமான உணவுகளை – முக்கியமாக கிழங்கு வகைகளை சிறிது காலத்திற்கு உட்கொள்ள வேண்டாம். எண்ணையில் பொறித்த உணவுகள், நிறைய காரம், மசாலா சேர்த்த பொருட்களும் ஒதுக்கப் படவேண்டியவை.

இரவில் அதிக நேரம் கழித்து சாப்பிட வேண்டாம். அதிக வேலை இல்லாததால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். அதிக சூடு, அதிக குளிர்ச்சியான உணவுகள் வேண்டாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்கள் வேண்டாம். தாய்க்கு செரிமானக் கோளாறு அல்லது ஜலதோஷம் பிடித்தால் குழந்தைக்குப் பால் கொடுப்பது தடைப்படும்.
சிலர் வெந்தயக் கஞ்சி செய்து கொடுப்பார்கள். இதுவும் உடல் சூட்டை தணித்து பால் சுரக்கவும் உதவும் உணவு.

வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி?
(ஒருவேளைக்கு)
தேவையான சாமான்கள்:
புழுங்கல் அரிசி / புழுங்கலரிசி ரவை  – ½  கப்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
வேக வைக்க நீர் – 2 கப்
மிளகுத்தூள் – ½  டீஸ்பூன்
உப்பு – ருசிகேற்ப
புளிக்காத மோர் – 1 கப்

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்துக் கொண்டு அதில் அரிசி/ரவையைப் போட்டு கூடவே வெந்தயத்தையும் போட்டு குழைய வேக வைக்கவும். ஆறியவுடன் உப்பு போட்டு, மோர் விட்டு சாப்பிடலாம். முற்பகல் போதில் இந்தக் கஞ்சியை மதிய உணவுக்கு முன் – கொடுக்கலாம். நன்கு பசி தாங்கும்.
வேண்டுமானால் புழுங்கலரிசியை வெந்தயத்துடன் சேர்த்து ரவை போல உடைத்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் சிறிது சீரகமும் போடலாம்.
ஜலதோஷம் பிடித்திருக்கிறது, மோர் சேர்க்க முடியவில்லை என்றால் இந்தக் கஞ்சியில் சிறிது நெய் விட்டு தெளிவான ரசம் சேர்த்து சுடச்சுட சாப்பிடலாம். மிளகு சீரகம் ஜலதோஷத்துக்கும் நல்லது.
ஏற்கனவே ரவைக் கஞ்சி சொல்லியிருந்தேன். இன்னொரு கஞ்சி பயத்தங்கஞ்சி.

இதை பயத்தம்பருப்பிலோ அல்லது முழு பயறிலோ செய்யலாம். முழு பயறு அல்லது பயத்தம் பருப்பை குழைய வேக வைத்துக் கொள்ளவும். சிலர் இந்தப் பருப்பு வாயு என்பார்கள். அதற்காக சிறிது சுக்கு தட்டிப் போடலாம். இதனுடன் வெல்லம், பால் சேர்த்து சாப்பிடலாம். சூடாகவும் நன்றாக இருக்கும். ஆறினாலும் இந்தக் கஞ்சியுடன் பாலை மட்டும் காய்ச்சி சேர்த்து சாப்பிட  ருசியாக இருக்கும்.
இந்தக் கஞ்சிகளை வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள்  மாற்றி மாற்றி கொடுக்கலாம்.

எங்கள் ஊரில்- (கர்நாடகா) சப்சிகே சொப்பு (கீரை) என்று கிடைக்கும். அதை பிள்ளை பெற்றவளின் உணவில் தினமும் சேர்த்தால் பால் நன்கு சுரக்கும் என்பார்கள். இது மிகவும் உண்மை. என் பெண்ணிற்கு கொடுத்திருக்கிறேன். நம் உடம்பின் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தும். பற்களுக்கும் நல்லது.
இதை வேக வைத்தோ பச்சையாகவோ பயன்படுத்தலாம்.
எங்கள் ஊரில் செய்யும் அரிசி ரொட்டி (அக்கி ரொட்டி), ராகி ரொட்டியில் இதனை கட்டாயம் சேர்ப்பார்கள்.

நாம் பருப்புபொடி, தேங்காய்ப்பொடி செய்வதுபோல இந்தக் கீரையைப் போட்டு சட்னி பொடி செய்வார்கள்.
தேவையான பொருட்கள்
சப்சிகே கீரை – 2  கட்டு
கடலைப்பருப்பு – ½  கப்
உளுத்தம்பருப்பு ¼   கப்
காய்ந்த மிளகாய் – 6 – 7
புளி –  கோலிகுண்டு அளவில்
துருவிய கொப்பரை  – ½  கப்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼  டீஸ்பூன்
உப்பு ருசிகேற்ப
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ½  டீஸ்பூன்
பெருங்காயம் ¼   டீஸ்பூன்
செய்முறை:
கீரையை வேர்கள், முற்றிய தண்டுகளை நீக்கி நன்கு அலம்பி வடிய வைக்கவும். பொடிப்பொடியாக நறுக்கி ஒரு உலர்ந்த வெள்ளைத் துணியின் மேல் ஈரம் போக நிழலில் உலர்த்தவும்.
பெருங்காயம், உ.பருப்பு, க. பருப்பு, மிளகாய் இவற்றை சிறிது எண்ணெய் விட்டு பருப்புகள் சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளியைச் சேர்த்து சற்று வறுக்கவும். கொப்பரையை வறுக்க வேண்டாம்.

வறுத்தபொருட்களை (கொப்பரையைத் தவிர) உப்பு, உலர்ந்த கீரை சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். நைசாகவும் அரைக்கலாம். அரைத்த பொருட்களுடன் கொப்பரையை சேர்த்து நன்றாக ஆற விடவும். இவற்றுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே சுற்று சுற்றுங்கள். அதிகம் அரைக்க வேண்டாம்.
ஒரு வாணலியில் எண்ணையை விட்டு கடுகு, மஞ்சள் பொடி போட்டு, கடுகு வெடித்தவுடன் பொடித்து வைத்திருக்கும் கலவையின் மேல் போட்டு நன்றாக கலக்கவும். பத்திரமாக ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும். சுடச்சுட சாதத்தில் கொஞ்சம் நெய் விட்டு இந்தப் பொடியைப் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

அடுத்த வாரம் பார்க்கலாம்!

செல்வ களஞ்சியமே 11

எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது?

செல்வ களஞ்சியமே – 11

‘நாம் கருவிலிருக்கும் போதே நமக்கான உணவை இறைவன் நம் தாயின் முலையில் வைக்கிறான் என்றால் அவன் கருணைக்கு எல்லை எது’ என்று சொல்வதுண்டு.

இன்றைக்கு நாம் மார்பகங்களை எப்படி பாதுகாப்பது, எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது என்பது பற்றிப் பேசப் போகிறோம். இதையெல்லாம் பற்றி இங்கு பேச வேண்டுமா என்று உங்களுக்குத் தோன்றலாம். இதைப்பற்றி இங்குதான் பேசவேண்டும்.

என் உறவினர் ஒருவர் துணைவியுடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம், ‘பாத்ரூம் போகணுமானால் போய்விட்டு வா’ என்று எல்லோர் எதிரிலும் கூற, எங்களுக்கு ஒரு மாதிரி ஆனது. பிறகு அந்த மாமி கூறினார்: ‘வெளியில் வந்து எப்படி இதைக் கூறுவது (சிறுநீர் கழிக்க வேண்டுமென்று) என்று எத்தனை நேரமானாலும் அடக்கி வைத்துக் கொள்வேன். போனவாரம் ஒரே வலி ‘அந்த’ இடத்தில். மருத்துவரிடம் போன போது ‘நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்ளுவீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.

என்ன ஆகும் இப்படிச் செய்வதால்?

சிறுநீர் என்பது நம் உடலில் உள்ள வேண்டாத கழிவுப் பொருள். வீட்டில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது போல இதையும் வெளியேற்ற வேண்டும். நமது சிறுநீரகங்களில் இருக்கும் சிறுநீர்ப்பையால் அதன் கொள்ளளவுக்கு  மேல் சிறுநீரை நீண்ட நேரம் தேக்கி வைத்துக் கொள்ள முடியாது. அடிக்கடி இப்படிச் செய்வதால் நாளடைவில் அவை பலவீனமடையும்.

பலவீனமான சிறுநீர்ப்பை அதிக நேரம் சிறுநீரை தாங்கிக் கொள்ள முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரை வெளியேற்ற ஆரம்பிக்கும். நாளடைவில் இது சிறுநீர் கசிவு (Female Incontinence) நோயாக மாறும் அபாயம் உள்ளது. இந்த நோய் பெண்களிடையே அதிகம் காணப்படுவதன் காரணங்களில் இப்படி சிறுநீரை வெளியேற்றாமல் அடக்க முற்படுவதும் ஒன்று. இது தேவையா?

சிறுநீர் போகாமல் கழிவுப் பொருட்கள் உடலில் உள்ளேயே தங்குவதால் UTI’ எனப்படும் நோய்த்தொற்று உண்டாகும். இந்த நோய் தொற்று வந்தால் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் கடுமையான வலி, எரிச்சல், சில சமயம் இரத்தம் கலந்த சிறுநீர் வெளிவருவது என்று பலவிதமான பிரச்சனைகள் உண்டாகும். இது தேவையா?

சிறுநீரைக் கழிக்காமல் இருப்பதால் நீங்கள் திரவப் பொருள் உட்கொள்ளுவதை நீண்ட நேரம் ஒத்திப் போடுகிறீர்கள். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துப் பொருள் கிடைக்காமல் போகிறது.

இவ்வளவு பின்விளைவுகள் இருப்பதாலேயே என் உறவினர் தன் மனைவியை அவ்வாறு வெளிப்படையாக கேட்டார் என்று தெரிந்தது.

பெண்களின் உடம்பைப் பற்றி பேசுவது தவறல்ல; ஒவ்வொரு பெண்ணும் தன் உடம்பைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளுவது மிகவும் அவசியம்.

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான விஷயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது. அதற்கு உதவும் மார்பகங்களைப் பற்றி எப்படிப் பேசாமல் இருப்பது?

மார்பகங்கள் வெறும் ‘கிளுகிளுப்பு’ மட்டுமல்ல; அதையும் விட மிகவும் முக்கியமான உறுப்பு.  தாய்ப் பாலுடன் குழந்தைக்கு ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கொடுக்கிறீர்கள் என்பதை பெண்கள் மறக்கக் கூடாது. ஆரோக்கியமான உடலும்  கூடவே நம் உடலைப்  பற்றி சரியான முறையில்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆரோக்கியமான மனமும்  பெண்களுக்கு அவசியம் தேவை.

கருவுற்ற  முதல் மூன்று மாதங்களில் மார்பகங்கள் மிருதுவாக ஆகும். சிலருக்கு ப்ரா அணியும்போது சற்று வலி ஏற்படலாம். இரண்டு அறிகுறிகளுமே வழக்கமாகத் தோன்றுபவைதான்.

இரண்டாவது மூன்று மாதங்களில் முலைக் காம்புகள் கருத்து மார்பகங்கள் பெரிதாகும். இதனால் கருவுற்றிருக்கும் பெண்கள் சற்றுப் பெரிய அளவில் ப்ரா அணியவேண்டும். மிகவும் இறுக்கமான செயற்கை இழைகளால் ஆன ப்ரா அணியக்கூடாது. அணிந்தால் என்ன ஆகும்? பால் வரும் துவாரங்கள் அடைபட்டு தாய்ப்பால் சுரப்பது தடைப்படும். பருத்தியால் ஆன ப்ரா உத்தமம். தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதற்கென்றே வசதியாக ப்ராக்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்தலாம். எதை பயன்படுத்தினாலும் சுகாதாரம் முக்கியம்.

குழந்தை பிறந்து பாலூட்ட ஆரம்பித்தவுடன், தினமும் குளிக்கும்போது வெறும் நீரால் மார்பகங்களை அலம்பவும். சோப் வேண்டாம். சோப் பயன்படுத்துவதால் மார்பகங்களைச் சுற்றியுள்ள தோல் வறண்டு போகும். இதனால் முலைக் காம்புகளில் சின்னச்சின்ன வெடிப்புகள்  ஏற்படலாம். வெடிப்புகளின் மேல் பேபி லோஷன் தடவலாம். குழந்தைக்குப் பால் புகட்டுவதற்கு முன் நன்றாக அலம்பிவிட வேண்டும். உங்கள் கையையும் நன்றாக அலம்பிக் கொள்வதால் நோய்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை குழந்தை பால் அருந்திய பின்னும்  ஒரு சுத்தமான துணியினால் மார்பகங்களை நன்றாகத் துடைத்துவிட்டு பிறகு ப்ரா ஊக்குகளை போடுங்கள். ஈரத்தில் நோய்தொற்றுகள் வளருகின்றன.

குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்க ஆரம்பித்தாலும், இரண்டு மூன்று நாட்களில், அதாவது குழந்தை பால் குடிக்க ஆரம்பித்து சில நாட்களுக்குப் பிறகுதான் நல்ல சுரப்பு இருக்கும்..

குழந்தை பிறந்த முதல் ஓரிரு நாட்கள் தாய்ப்பால் லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கும். இதற்கு கொலஸ்ட்ரம் என்று பெயர். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணவும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கவும் இது கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும்.

முதல் இரண்டு மூன்று நாட்கள் குழந்தையும் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும்; அதிகப் பசியும் ஏற்படாது. இந்த இரண்டு மூன்று நாட்கள் நீங்களும், குழந்தையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளவே. முதல் சில நாட்கள் குழந்தைக்கு மார்பகத்தைப் பிடித்துக் கொள்ளத் தெரியாது. உங்களுக்கும் எப்படி பாலூட்டுவது என்று தெரியாது. குழந்தையின் தலை உங்கள் இடது கை / வலதுகை முழங்கையில் பதிய இருக்காட்டும். இன்னொரு கையால் அதன் இரண்டு கன்னங்களையும் சேர்த்து பிடியுங்கள். குழந்தையின் வாய் திறக்கும். உங்கள் மார்பகத்தின் அருகில் அதன் திறந்த வாயைக் கொண்டு செல்லுங்கள்.  குழந்தைக்கு தன் உள்ளுணர்வினால்  ‘ஓ! சரவண பவன் இங்கிருக்கிறது’ என்று தெரிந்துவிடும். பொறுமைதான் ரொம்பவும் தேவை.

பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும் உட்கார்ந்த நிலையிலேயே ‘எடுத்து’ விடவேண்டும். நீங்கள் உட்காரும் நிலை சரியாக இருக்க வேண்டும். நன்றாக சாய்ந்து கொண்டு முதுகிற்கு கெட்டியான தலையணை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை சரியான நிலையில் கையில் ஏந்திக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் மிகவும் முக்கியம். மூன்றாவது முக்கிய விஷயம் மன அமைதி.

இது உங்களுக்கும் குழந்தைக்குமான பிரத்யேகமான நேரம். அப்போது புத்தகம் படிப்பது, தொலைக்காட்சியில் அழுகைத் தொடர்கள் பார்ப்பது வேண்டாம். ஆற அமர, அமைதியாக உளமார, மனமார குழந்தையுடன் பேசிக் கொண்டே பாலூட்டுங்கள். பாலுடன் கூட பாசிடிவ் எண்ணங்களையும் ஊட்டுங்கள். பாடத் தெரியுமா, குழந்தைக்கும் உங்களுக்குமாகப் பாடுங்கள்.

இதனால் உங்களுக்கும் பால் நன்றாக சுரக்கும். குழந்தையும் நன்றாகப் பால் குடிக்கும். ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை குழந்தைக்கு உருவாக்கலாம்.

சில குழந்தைகள் சிறிது குடித்துவிட்டு அப்படியே தூங்கிவிடும். குழந்தையின் காதுகளை தடவினால் விழித்துக் கொள்ளும். இல்லையானால் பிஞ்சுக் கால்களில் ‘குறுகுறு’ பண்ணலாம்.

பிறந்த குழந்தையின் வயிறு முதல் நாள் கோலிக்குண்டு அளவிலும், இரண்டாம் நாள் பிங்க்பாங் பந்து அளவிலும், மூன்றாம் நாள் ஒரு பெரிய வளர்ந்த முட்டை அளவிலுமாக சிறிது சிறிதாக வளர தொடங்கும்.

குழந்தை தனக்கு வேண்டிய பாலை முதல் 5  நிமிடங்களில் குடித்துவிடும். நாள் ஆக ஆக குழந்தைக்கு வயிறு வளர்ந்து அதன் பசியும் கணிசமான அளவு அதிகரித்தவுடன் பாலூட்டும் நேரமும் அதிகமாகும்.

இரண்டு பக்கமும் பால் கொடுத்து பழக்குங்கள். குழந்தை நன்றாகப் பால் குடித்தவுடன் மார்பகங்கள் லேசாக ஆகும். குழந்தை குடிக்கக் குடிக்க பால் நன்றாக ஊற ஆரம்பிக்கும்.

பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் வேதனை கொடுப்பது ‘பால் கட்டிக்’ கொள்வது தான். குழந்தைக்கு சரியாக குடிக்கத் தெரியாததாலும், நீண்ட நேரம் எடுத்து விடாமல் போனாலும் இதைப்போல பால் கட்டிக் கொண்டுவிடும்.

கையாலேயே பாலை பிய்ச்சி வெளியேற்றிவிடுங்கள். இல்லையென்றால் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது சுடுநீரால் மார்பகத்தை கழுவலாம். இதனாலும் பால் வெளியேறும்.

இன்னொரு முறை: தோசைக் கல்லை அடுப்பின் மேல் இடுங்கள். சூடானவுடன், ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை அதன்மேல் வைத்து, பொறுக்கும் சூட்டில் மார்பகத்தின் மேல் வைக்கலாம். தானாகவே பால் வெளியேறும். இல்லையானால் நிதானமாக ஆனால் உறுதியாக மார்பகத்தை முலைக்காம்புப் பக்கம் அழுத்தித் தடவுங்கள். பால் வெளியேறும்.

பொதுவாக இந்த மாதிரி ‘கட்டி’ விட்ட பாலை குழந்தைக்குக் கொடுப்பது நல்லதல்ல. அதனால் ஒரு சுத்தமான துணியை வைத்துக் கொண்டு வெளியேறும் பாலை துடைத்து விடுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் எல்லாப் பெண்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

பாலூட்டும் நேரத்தை  குழந்தையுடன் ரசித்து அனுபவித்துக் கொண்டிருங்கள். அடுத்தவாரம் பார்க்கலாம்!

செல்வ களஞ்சியமே 10

பிரசவித்த பெண்ணின் சுகாதாரம்

சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்) ஏன் என்று கேட்பவர்களுக்கு:

ஒரு மிகப் பெரிய வேலையை உங்கள் உடம்பு செய்திருக்கிறது. பிள்ளைப்பேறு என்றால் சும்மாவா? எத்தனை உறுப்புகள் எத்தனை வேலை செய்திருக்கின்றன! எல்லாவற்றிற்கும் ஓய்வு தேவை. அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். ஓய்வு, நல்ல சாப்பாடு, தூக்கம் இவை மூன்றினால் மட்டுமே உங்கள் உடல் பழைய நிலைக்குத் திரும்பும்.

பொதுவாக உடல் அசதியாக இருக்கும்; நோய் எதிர்ப்பு திறனும் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இதனாலேயே சுகாதாரம் மிக மிக அவசியம்.

பிரசவித்த பெண்ணின் சுகாதாரக் குறைவினால் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். உங்கள் ஆரோக்கியக் குறைவினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது முடியாது போகும். அதனால் கவனம் அதிகம் தேவை.

இயற்கை முறையில் பிரசவம் ஆகியிருந்தால் இரண்டாம் நாளிலிருந்து குளிக்கலாம். மிதமான வெந்நீரில் குளிப்பது உடல்வலியையும் ஆயாசத்தையும் போக்கும். தலைக்கு குளிக்க வேண்டாம். ஜலதோஷம், ஜுரம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குளித்து முடித்து நன்றாக ஈரம் போகத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

தலையை நன்கு வாரிப் பின்னலிட்டுக் கொள்ள வேண்டும். கை கால்களில் நகங்களை வெட்டி விடவும். உங்கள் நகங்களை மட்டுமல்ல; குழந்தையின் கை, கால்களில் இருக்கும் நகங்களையும் வெட்டி விட வேண்டும். அதற்கென்றே நகம் வெட்டிகள் சின்னதாகக் கிடைக்கின்றன. குழந்தையை நீராட்டியவுடன் நகங்கள் மிருதுவாக இருக்கும். அப்போது சுலபமாக வெட்ட வரும். சிலர் கையாலேயே குழந்தையின் நகத்தை பிய்த்துவிடுவோம் என்பார்கள். இது ரொம்பவும் ஆபத்தானது. குழந்தையின் நகத்துடன் சதையும் பிய்ந்துவரும் ஆபத்து இருக்கிறது. குழந்தையினிடத்தில் நம் வீரதீரத்தையெல்லாம் காண்பிக்க வேண்டாம்.

ஒரு சின்ன பிளாஷ்பேக்: திருமணத்திற்கு முன் நான் ரொம்பவும் அக்கறை எடுத்துக் கொண்டு நகம் வளர்ப்பேன். அப்போதெல்லாம் நெயில் பாலிஷ்  வாங்கித் தரமாட்டார்கள். அதனால் எங்கிருந்தாவது மருதாணி கொண்டு வந்து நானே அரைத்து இட்டுக் கொள்ளுவேன். எனது விரல் நகங்கள் எப்போதுமே சிவப்பாக இருக்கும்! இடது கைக்கு நானே வைத்துக் கொள்ளுவேன். வலது கைக்கு வைக்கச் சொல்லி அம்மாவை ரொம்பவும் படுத்துவேன். ஒரு முறை அம்மா மிகவும் கோபித்துக் கொண்டு முடியாது என்று சொல்லிவிட்டாள். என்ன செய்வது? ஒரு பேப்பரில் முதலில் குப்பி குப்பியாகப் பண்ணி வைத்துக் கொண்டு அதை விரல்களில் மாட்டிக்கொண்டு இந்தக் கையாலும் அந்தக் கையாலும் சரி செய்து சரி செய்து…எப்படியோ இரண்டு கைகளுக்கும் நானே இட்டுக் கொண்டு விட்டேன். இன்றைக்கும் என் அம்மா இதைச் சொல்லி சொல்லி ஆச்சரியப் படுவாள்.

அப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து வளர்த்த நகங்களை குழந்தைக்காக வெட்டு என்று எங்கள் மருத்துவர் சொன்ன போது யோசிக்கவே இல்லை; வெட்டிவிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை மறுபடி நான் நகம் வளர்க்க ஆசைப்பட்டதே இல்லை. ஆனால் மருதாணி ஆசை….தொடருகிறது!

 

சரி, நம் விஷயத்திற்கு வருவோம்.

லூசான உள்ளாடைகள்/வெளியாடைகள்  அணியவும். வெயில் காலங்களில் நல்ல பருத்தி ஆடைகள் அவசியம் தேவை. குளிர் காலங்களில் இரண்டு மூன்று ஸ்வெட்டர்கள் வைத்துக் கொண்டு துவைத்துப் பயன்படுத்தவும். ஒரே ஸ்வெட்டர் தினமும் அணியவேண்டாம்.

பிரசவித்த சில நாட்களுக்கு அதிகப்படி சிறுநீர் வெளியேறுவது போல இருக்கும். கருவுற்றிருக்கும் போது உடலில் சேர்ந்திருந்த அதிகப்படியான நீரும் உப்பும் வெளியேறுவதுதான் இதற்குக் காரணம்.

சிலருக்கு பிரசவத்தின் போது தையல் போட்டிருந்தால் பிரசவம் ஆன சில நாட்களுக்கு சிறுநீர் மலம் கழிப்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். சுத்தமான நீர் நிறைய குடிப்பது சுலபமாக உடலிலிருந்து நீர் வெளியேற மிகவும் உதவியாக இருக்கும்.

 

பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று நோய் ஏற்படுவது அதிகம். காரணம் ஆசனவாயும், சிறுநீர் வெளிவரும் துவாரமும் அருகருகே அமைந்திருப்பது தான். சிறுநீர் பாதை தொற்று வராமலிருக்க நிறைய நீர் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்கள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை வந்தாலும் சுகாதாரம் கெடும். நோய்த்தொற்று உண்டாகும்.

பிரசவித்த பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று நோய், மற்றும் வஜைனா (vagina) என்று சொல்லப்படும் கருப்பையிலிருந்து பிறப்புறுப்புக்குச் செல்லும் பாதையிலும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சிலசமயங்களில்  குழந்தை பிறக்கும்போது பிறப்புறுப்பின் வாயை அகலமாக்க சற்று கத்தரிப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் அந்த இடத்தை தையல் போட்டு மூடிவிடுவார்கள். இந்த மாதிரி தையல் போட்டிருந்தால் குளிக்கும்போது அந்த இடத்தை நன்றாக நீர் ஊற்றி கழுவி சுத்தமான துணியால் / பேப்பர் நாப்கின்னால் நன்றாகத் துடைக்கவும். மேல்பூச்சாக ஏதாவது ஆயின்மென்ட் கொடுத்திருந்தால் தவறாமல் தடவவும். இது ரணம் சீக்கிரம் ஆற உதவும். தையல்கள் தானாகவே கரைந்து விடும்.

உள்ளுறுப்புகள் எப்போதும் உலர்ந்த நிலையில் இருப்பது மிகவும் அவசியம். உள்ளாடைகள் இறுக்கமில்லாமல் காற்றாட இருக்க வேண்டும். பருத்தியாலான ஆடைகள் அணிவது உத்தமம்.

பிரசவம் ஆன பிறகு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை உதிரப் போக்கு இருக்கும். முதலில் சிவப்புக் நிறத்தில் இருக்கும் இந்த திரவம் போகப்போக பழுப்பு நிறமாகி, பின் வெளிர் மஞ்சள் நிறமாகி பின் வெள்ளை நிறமாகி தானாகவே  நின்றுவிடும். அப்படியில்லாமல் வலியுடன், கட்டி கட்டியான  உதிரப்போக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

இதற்காக பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கேற்பவோ அடிக்கடி மாற்றவும். ஒவ்வொருமுறை சிறுநீர் கழித்தவுடனும் உள்ளுறுப்புகளை நீரினால் நன்கு கழுவி மெல்ல ஒத்தி ஒத்தித் துடைக்கவும். டாம்பூன்ஸ் பயன்படுத்த வேண்டாம். உள்ளுறுப்புகளிலிருந்து துர்வாசனை வந்தால் மருத்துவரை அணுகவும்.

உள்ளுறுப்புகளை கழுவும்போது முன்னாலிருந்து நீர் விட்டுக் கழுவ வேண்டும். அதனால் மலத்துவாரத்திலிருந்து வரும் தொற்றுகள் சிறுநீர் பாதையை சென்று சேராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்தபின் அடிவயிற்றில் பிசைவதுபோல் ஒரு வலி இருக்கும். இதைப் பற்றி கவலை வேண்டாம். கர்ப்பபை சுருங்குவதால் உண்டாகும் வலி இது. முதல் குழந்தைக்கு அவ்வளவாக இந்த வலி தெரியாது. இரண்டாவது பிரசவம் ஆன பின்பு இது அதிகம் தெரியும். இதனை ‘மண்குத்து வலி’ என்பார்கள்.

உங்கள் உடைகளைப் போலவே குழந்தையின் உடைகளும் தினமும் துவைத்து உலர்த்தி பயன்படுத்தப்பட வேண்டும். அதேபோலத்தான் நீங்கள் படுக்கும் கட்டில், படுக்கை, தலையணை எல்லாமே சுகாதாரத்தின் இருப்பிடமாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை,  உறைகள், போர்வைகள் அடிக்கடி மாற்றப் படவேண்டும்.

குழந்தையை தொட்டிலில் விடுவதாயிருந்தால் அதில் போடும் துணிகள் மீது கவனம் தேவை. குழந்தையின் வாசனைக்கே எறும்புகள் வரும். குழந்தை பிறப்பதற்கு முன்பே வீட்டை துப்புரவு செய்வது அவசியம்.

குழந்தையின் சுகாதாரத்திற்கு என்றே ஒரு அத்தியாயம் எழுதவேண்டும். அடுத்த வாரம்……

செல்வ களஞ்சியமே 9

எனது உறவினரின் பெண்ணிற்கு குழந்தை பிறந்திருந்தது. உடனடியாக என்னால் போய் பார்க்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்துப் பார்க்கப் போன எனக்கு அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சி!

சரியாக வாராத தலை. அழுக்கான ஒரு நைட்டியுடன் அந்தப் பெண் காட்சி அளித்தாள். எங்களைப் பார்த்தவுடன் அவசரமாக ஓடிப் போய் அந்த அ. நைட்டியின் மேல் ஒரு துப்பட்டா(!?)வைப் போட்டுக் கொண்டு வந்தாள். (எதற்கு?)

‘குழந்தையுடனேயே நேரம் சரியாகி விடுகிறது.  எதற்குமே நேரமில்லை…!’

‘அப்படியா?’ என்றேன்.

‘குழந்தை பிறந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது மாமி. குழந்தை பிறப்பதற்கு முன் நான் எப்படி இருந்தேன் என்பதே மறந்துவிட்டது…. குழந்தை இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை……!’

‘ஒரு டிரெஸ் கூட சரியான அளவில் இல்லை. குழந்தை பிறப்பதற்கு முன் போட்டுக் கொண்ட டிரெஸ்களையே இன்னும் போட்டுக் கொண்டிருக்கிறேன்…’

ஓ! அதுதான் இந்த நைட்டி இத்தனை அழுக்கா?

‘நான் என் குழந்தைக்கு ஒரு சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும். அவனைத் தவிர எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை இந்த உலகத்தில். அவனும் என்னையே எல்லாத்துக்கும் நம்பி இருக்கிறான்…! எனக்கு என்னைப் பற்றிய நினைப்பே இல்லை…!’

என் மடியில் இருந்த குழந்தை ‘ங்…ங….!’ சிரித்தது.

‘பாருங்கோ மாமி, அவனுக்கு நா பேசறதெல்லாம் புரியறது!’

‘அப்படியா? எனக்கு அவன் வேறெதுக்கோ சிரிக்கறாப்பல இருந்தது…!’

‘………..?!’

‘இப்படி உட்காரும்மா….’ அந்தப் பெண்ணை பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டேன்.

‘சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்றால் தலையை வாரிக் கொள்ளக் கூடாது; நல்ல உடை உடுத்திக் கொள்ளக் கூடாது என்று எங்காவது எழுதி வைத்திருக்கிறதா?’

‘…………………………ஆனா மாமி…!’ ஆரம்பித்தவளை நான் தடுத்தேன்.

‘தன்னை சரியாகப் பரமாரித்துக் கொள்ளும் ஒரு பெண்ணால் தான் தன் குழந்தையையும் சரியான முறையில் வளர்க்க முடியும். நீ இப்படி இருப்பது உன்னால் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு இரண்டையும் சரியாகச் செய்ய முடியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நீ இப்படி இருந்தால்தான் குழந்தை சந்தோஷப்படும் என்று யார் சொன்னார்கள்? நீ இப்படி இருப்பது நிச்சயம் உன் குழந்தைக்கும், கணவனுக்கும் எந்த விதத்திலும் நிறைவைக் கொடுக்காது.’

‘குழந்தையை கவனிக்காமல் நீ உன் அலங்காரத்தில் கவனம் செலுத்த வேண்டும்ன்னு நான் சொல்லலை. ஆனாலும் உன் அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக் கொண்டுதான் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நீயே உனக்கு போட்டுக் கொள்ளும் முள் வேலி. இது  தேவையில்லாதது.’

நான் சிறந்த மகளாக இருக்க வேண்டும், சிறந்த மனைவியாக இருக்க வேண்டும், சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் – தேவையில்லாத சங்கிலிகள். இவற்றால் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே.

ஒரு ஆணிடம் போய் ‘நீ அப்பாவாகிவிட்டாய். இனி உன் சந்தோஷத்தை யெல்லாம் குறைத்துக் கொள். சினிமா பார்ப்பதை விட்டுவிடவேண்டும்; நல்ல உடை அணியக்கூடாது; யாருடனும் சிரித்துப் பேசக்கூடாது,’ என்று சொல்லிப் பாருங்கள். ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது?’ என்பான்.

அதேபோலத்தான் பெண்களும் குழந்தை பிறந்தவுடன் தன் சுகத்தை எல்லாம் தியாகம் செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை.

இதைபோல நிறைய பெண்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். தியாகம் செய்கிறோம் என்ற பெயரில் தங்களுக்குத் தாங்களாகவே பல சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

எந்தப் பெண் எப்போதும் தன்னை நன்கு உணர்ந்து தன் உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, நேர்மறையான எண்ணங்களுடன், தைரியமாக, தான் செய்யும் வேலைகளைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல், சந்தோஷமாக, நிறைவாக இருக்கிறாளோ அப்போது தான் அவள் சிறந்த மகளாக, மனைவியாக, அம்மாவாக விளங்க முடியும்.

செல்வ களஞ்சியமே படிக்கும் அனைத்து பெண்மணிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

பி.கு. இன்றைக்கு மகளிர் தினம் என்பதால் மனதில் இருப்பதை எழுதிவிட்டேன். அடுத்த வாரம் வழக்கம்போல தொடருகிறேன்.

செல்வ களஞ்சியமே 8

இளம் தாய் கவனிக்க வேண்டியவை:

‘அன்புடையீர்,

இப்பவும் என் மகள் சௌபாக்கியவதி…………………க்கு பெண்/ஆண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலம்……’

நம் வீடுகளில் குழந்தை பிறந்தவுடன் நம் உறவினர்களுக்குத் தெரிவிக்க எழுதும் கடிதத்தின் ஒரு பகுதி இது.

இந்தக் கடிதத்தில் சொல்லப்படும் தாய்-சேய் நலத்தைப்  பேணுதலை ஆங்கிலத்தில் post-natal care என்கிறார்கள். இந்த வாரம் நாமும் இதைப் பற்றித்தான் பேசப் போகிறோம்.

.பிரசவம் ஆன பின் எல்லோருடைய கவனமும் குழந்தை மீது திரும்பிவிடும். பார்க்க வருகிறவர்களும், வரமுடியாதவர்களுக்கு கை பேசியில் செய்தி சொல்லுவதுமாக அந்த இடமே ‘கலகல’ வென்றிருக்கும்.

பிரசவித்த பெண் பாவம் களைப்பில் அசந்து போய், வருகிறவர்களிடம் பேசவும் முடியாமல் மெலிதான புன்னகையுடன் படுத்திருப்பாள்.

பிரசவம் என்பதை மறுபிறவி என்பார்கள். முற்றிலும் உண்மை. ஒவ்வொரு பெண்ணும் பிரசவ காலத்தில் அனுபவிக்கும் வலிதான் மனித இனம் அனுபவிக்கும் பல்வேறு வகையான வலிகளில் மிகக் கடுமையான வலி என்று விஞ்ஞான பூர்வமாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கர்ப்பம் தரிக்கும்போதும், பிரசவத்திற்குப் பின்னாலும் பெண்ணின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.

பிரசவம் ஆன பெண் மீண்டும் பழைய நிலையை – அதாவது கருத்தரிப்பதற்கு முன் இருந்த நிலையை அடைவதற்கு அவளுக்குக்  போஷாக்கான உணவு, தூக்கம், ஓய்வு  மிகவும் இன்றியமையாதவை. இவற்றுடன் கூடவே தனிப்பட்ட சுகாதாரமும் வெகு முக்கியம். அதாவது Personal hygiene

குழந்தைக்குத் பாலூட்டுவது, அது தூங்கும் சமயத்தில்  தூங்குவது என்று பிரசவித்த பெண் பலவகைகளில் தன்னை தயார் செய்து கொள்ளவேண்டும். பெற்றோர்களும், கணவனும், புக்ககத்தவர்களும் இந்தச் சமயத்தில் கட்டாயம் பிரசவித்த பெண்ணுக்கு உதவ வேண்டும். நல்ல ஆகாரம், தூக்கம் முதலியவற்றினால் சீக்கிரமே அவள் தன் வேலையை தானே பார்த்துக் கொள்ள முடியும்.

நம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக வளர குடும்பத்தவர்களின் முழு மனதான உதவி நிச்சயம் தேவை.

உணவு:

செல்வ களஞ்சியமே பகுதி 3 (ஆயிரம் நாட்கள்)  (http://wp.me/p2IA60-8d) இல் கூறியது போல போஷாக்கான உணவுகளைத் தொடர்ந்து  கொடுக்க வேண்டும்.

சாதாரணப் பிரசவம் அதாவது இயற்கை முறையில் குழந்தை பிறந்திருந்தால் பிரசவ அறையை விட்டு வெளியே வந்தவுடன் சூடாக காபி, டீ, பால் குடிக்கக் கொடுக்கலாம்.

நான் என் பெண்ணுக்கு ரவை கஞ்சி போட்டுக் கொடுப்பேன். அவள் மிகவும் இஷ்டப்பட்டுக் குடிப்பாள். தயாரிக்கும் விதம் கடைசியில் சொல்லுகிறேன்.

வட இந்தியாவில் பிரசவம் ஆன பெண்ணிற்கு முதல் சில மாதங்களுக்கு ரவை கேசரி செய்து கொடுப்பார்களாம். இடுப்பிற்கு பலம் சேர்க்கும் உணவு இது என்பது காரணம்.

இப்போதெல்லாம் பத்தியம் ஏதும் வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள். எப்போதும் போல எல்லாம் சாப்பிடலாம் என்கிறார்கள். அதற்காக பீட்ஸா, பர்கர் சாப்பிடலாமா என்று கேட்கக் கூடாது!

அதிகக் காரம், எண்ணெய்  இல்லாமல் வயிற்றுக்கு இதமானதாக உணவு இருக்க வேண்டும். பிரசவத்திற்கு முன் எப்படி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டாளோ அதே போல இப்போதும் உண்ணும் உணவில் அதிகக் கவனம் வேண்டும்.

போஷாக்கு சத்துக் குறைவினால் குழந்தைக்கு பலவித நோய் தொற்றுகள் ஏற்படும். வளர்ந்த பின்னும், கவனமின்மை, சோம்பல், மறதி முதலியவற்றால் குழந்தையின் தினசரி வாழ்க்கை பாதிக்கக் கூடும். அதனால் இளம் தாய் தன் உணவுப் பழக்கத்தை சரியானபடி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு வேண்டிய சத்துப் பொருட்கள் தாய் பாலிலிருந்து தான் கிடைகிறது. இதனாலும்  தாய் தன் உணவில் அக்கறை செலுத்துவது அதி முக்கியம்.

புதிதாக சமைத்த உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்

காலை வேளையில் காபி, டீ, அல்லது பாலுடன் ஹார்லிக்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம். காலை சிற்றுண்டி கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவிற்கும் இடையில் ஏதாவது சத்து மாவு அல்லது ஓட்ஸ், ராகி கஞ்சி கொடுக்கலாம். பழங்கள், நிறைய பச்சைக் காய்கறிகள் நிறைந்த சாலட், கீரை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நடுநடுவில் சுத்தமான நீர் குடிக்க வேண்டும்.

எதற்கு இத்தனை முன் ஜாக்கிரதை? இளம் தாய்க்கு நோய் தொற்று ஏற்பட்டால் அது குழந்தையை பாதிக்கும். சில சமயங்களில் அதற்கு தாய் பால் கொடுக்கவும் முடியாமல் போகும்.

பிரசவித்த பெண் எந்தவித கஷ்டமும் இல்லாமல் சிறுநீர், மலம் ஆகியவற்றைக் கழிக்க பழங்கள், காய்கறிகள் உதவும். சாப்பிடும்போது எந்தவித அவசரமும் இல்லாமல் நிதானமாக சாப்பிட வேண்டும்.

ஓய்வு:

நிறைய ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வினால் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெறும். ஓய்வு என்பதை நம்மில் பலர் தூங்குவது என்று தவறாக புரிந்து கொள்ளுகிறார்கள். இல்லை. ஓய்வு என்பது வழக்கமாகச் செய்யும் வேலையிலிருந்து மாறுபட்டு, மனதுக்குப் பிடித்ததை செய்வது.

குழந்தை தூங்கும் போதெல்லாம் தாயும் தூங்குவது என்பது சற்று சிரமம். புத்தகம் படிக்கலாம். இனிய இசையைக் கேட்கலாம். தொலைகாட்சி கூட பார்க்கலாம். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும் போது பார்க்க வேண்டாம். குழந்தையுடன் நீங்கள் இருக்கும் நேரம் என்பது உங்களுக்கும், குழந்தைக்கும் மட்டுமேயான நேரம். அதை எந்தக் காரணம் கொண்டும் தவற விடக் கூடாது.

இரவில் குழந்தைக்காக எழுந்திருக்க வேண்டி இருந்தால் பகலில் கொஞ்சம் தூங்கலாம். தப்பில்லை.

இந்த ஓய்வைக் கொடுக்கவே அந்தக் காலத்தில் 30, 40 நாட்களுக்கு பிரசவித்த பெண்ணை சமையலறைக்குள்  விட மாட்டார்கள். ஆண் குழந்தையானால் 31 நாட்களும், பெண் குழந்தையானால் 41 நாட்களும் தீட்டு காத்தார்கள்.

ரவை கஞ்சி செய்யும் முறை:

மெல்லிசு ரவை : ¼ கப்

தண்ணீர் – 2 கப்

நெய் 2 தேக்கரண்டி (இன்னும் கொஞ்சம் தாராளமாக விடலாம்)

பால் 1 கப்

சர்க்கரை –  ருசிக்கேற்ப / தேவைக்கேற்ப

ஏலக்காய் பொடி துளி –  ஒரு வாசனைக்கு

 

முதலில் வாணலியில் நெய்யை விட்டு சற்று சூடானவுடன் ரவையைப் போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

பக்கத்து அடுப்பில் நீரை கொதிக்க விடவும். நன்றாக சலசலவென்று கொதிக்கும் போது ரவையைப் போட்டு கைவிடாமல் , கட்டி தட்டாமல் கிளறவும்.

ரவை நன்றாக வெந்தபின் இறக்கி விடவும். இந்தக் கஞ்சி கொஞ்சம் நீர்க்கவே இருக்கும். எப்போது கொடுக்கிறீர்களோ அப்போது பால், சர்க்கரை  சேர்த்துக் கொடுக்கலாம். அவ்வப்போது புதிதாகப் போட்டுக் கொடுத்தால் சுடச்சுட மிக நன்றாக இருக்கும். ரவையை மொத்தமாக வறுத்து வைத்துக் கொண்டால் சட்டென்று செய்து விடலாம்.

அடுத்த பகுதியில் இளம் தாய் தன் சுகாதாரத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.

 

என்னுடைய இந்தத் தொடர் அமேசான் தளத்தில் (இரண்டு பாகங்களும்) புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வேண்டுபவர்கள் இங்கு வாங்கிக் கொள்ளலாம்.

செல்வ களஞ்சியமே -2

செல்வ களஞ்சியமே 7

தாலாட்டு பாட வேண்டுமா?

குழந்தையை எடுத்து வைத்துக் கொள்ளுவது, நீராட்டுவது, பாலூட்டுவது, தாலாட்டுப் பாடி தூங்கப் பண்ணுவது எல்லாமே குழந்தைக்கும் நமக்கு இருக்கும் பந்தத்தை வலுவாக்கத்தான். குழந்தையுடன் நாம் நிறைய நேரத்தை செலவிடத்தான்; குழந்தைக்கும் நமக்கும் இடையே உள்ள நெருக்கத்தை  அதிகப்படுத்திக் கொள்ளத்தான்

குழந்தை பிறந்தவுடனே நமக்கு அதன் மேல் பாசம் பெருகிவிடாது. குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு ஆயாசமே அதிகமாக இருக்கும். குழந்தைக்கு பாலூட்டுவது, இரவில் கண் விழிப்பது, வேறு உலகத்திற்கு வந்துவிட்டது போல இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நமது வழக்கமான வாழ்க்கையை விட்டு விட்டு குழந்தையுடனான வாழ்க்கைக்கு – நிறைய மாற்றங்களுடன்  தயாராக வேண்டும்.

உங்களைப் போலத்தான் குழந்தையும். இத்தனை நாள் அம்மாவின் வயிற்றில் சாப்பிட்டு, தூங்கி, கழிவுப் பொருட்களை வெளியேற்றி, இருட்டில் கதகதப்பான இடத்தில் தண்ணீரில் நீந்திக்கொண்டு இருந்து விட்டு, இப்போது திடீரென்று வெளி உலகத்தை, நிறைய சந்தடிகள் நிறைந்த உலகத்தை பார்த்து மிரண்டு தான் போயிருக்கும். தானே சாப்பிட வேண்டும்; வெளியேற்றமும் அதன் முயற்சியே! சின்ன சப்தம் கூட அதற்கு இடி முழக்கம் போலக் கேட்கும். சமையலறையில் டம்ளர் கீழே விழுந்தால் கை கால் எல்லாம் பறக்க தூக்கிப் போடும்.

குழந்தை மிகவும் ‘மிஸ்’ பண்ணுவது அம்மாவின் வயிற்றில் இருந்தபோது உணர்ந்த கதகதப்பையும், பாதுகாப்பு உணர்வைத்தான்.

குழந்தையை கையில் எடுத்துக் கொள்ளுவது, மடியில் போட்டுக் கொண்டு தூங்க பண்ணுவது, காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது என்று அம்மாவின் அண்மை அதற்கு ஓரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும்  கொடுக்கும்.

அதேபோல குழந்தையைக் கையில் எடுக்கும்போதே உங்களுக்கும் அதன்மேல் ஒரு சின்ன பிரியம் உண்டாகும். உங்களுக்கும் குழந்தைக்கும் இடையில் இருந்த இடைவெளி மெதுவாக விலகும்.

குழந்தையுடன் நிறைய பேச வேண்டும் என்று சொன்னேன் இல்லையா? வெறுமனே பேசாமல் பாடலாம்.

இந்தக் கால இளம் பெண்களுக்கு தாலாட்டுப் பாடத் தெரிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. பல துறைகளில் வித்தகர்களாக இருக்கிறார்கள் இந்தக் கால இளம் பெண்கள். அதனால் அவர்களுக்குப் பாடத் தெரியாவிட்டால் என்ன? பாட்டிகள் பாடலாமே! அல்லது தாத்தாக்கள், ஏன், இளம் தந்தைமார்கள் கூடப் பாடலாம்; தவறில்லை!

நிறைய பெண்கள் எங்களுக்குப் பாடத் தெரியாதே என்கிறார்கள்.

ஒரு விஷயம்: உங்கள் குழந்தைக்கு நீங்கள் தான் எம்.எஸ்! அம்மாவின் அண்மை, அம்மாவின் குரல் இரண்டும் தான் குழந்தைக்கு புரியுமே தவிர, நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்களா, நீங்கள் பாடும் பாட்டில் சந்தம், இலக்கணம் இருக்கிறதா என்றெல்லாம் குழந்தைக்குப் பார்க்கத் தெரியாது.

அதனால் எந்தப் பாடலையுமே தாலாட்டாகப் பாடலாம். ‘காக்கா கண்ணுக்கு மை கொண்டுவா’, ‘கை வீசம்மா கை வீசு’ என்று எதை வேண்டுமானாலும் பாடலாம். உங்கள் வீட்டில் என்னைப் போன்ற பாட்டிகள் இருந்தால் ‘மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி..’ ‘மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே…’ போன்ற பல்வேறு பாடல்களை அவர்களிடமிருந்து கற்கலாம்.

குழந்தையைப் பொறுத்தவரை ‘காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா…’ வும், ‘மாணிக்கம் கட்டி..’ யும் ஒன்று தான்!

இணையத்தில் தேடினால் ஆயிரக் கணக்கான தாலாட்டுப் பாடல்கள் கிடைக்கின்றன. அதையெல்லாம் இங்கு எழுத வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

‘ஜோ ஜோ கண்ணம்மா, ஜோ ஜோ ஜோ,

குட்டிக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,

பட்டுக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,

செல்லக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,

தங்கக் கண்ணம்மா ஜோ ஜோ ஜோ,

குட்டிக் கிளியே ஜோ ஜோ ஜோ,

பட்டுக் கிளியே ஜோ ஜோ ஜோ,

செல்லக் கிளியே ஜோ ஜோ ஜோ

சின்னக் கிளியே ஜோ ஜோ ஜோ

தங்கக் கிளியே ஜோ ஜோ ஜோ

இப்படிப் பாடிக் கொண்டே போகலாம். உங்கள் கற்பனை உங்கள் வசம்!

என் அக்கா, தன் பேத்திகளுக்கு தாலாட்டாக ‘சின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?’ என்ற பாடலை மிக இனிமையாகப் பாடுவாள். பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் இந்தப் பாடல் இழைந்து இழைந்து இனிமையில் தோய்ந்து ஒலிக்கும்.

‘பால் மணக்கும் பருவத்திலே உன்னைப்போல் நானிருந்தேன்

பட்டாடை தொட்டிலிலே சிட்டுப் போல் படுத்திருந்தேன்

அந்நாளை நினைக்கையிலே என் மனது மாறுதடா

உன்னுடனே ஆடி வர உள்ளமே ஏங்குதடா’

 

‘கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா –

சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?’

 

எத்தனை அழகான கவிதை பாருங்கள். அடுத்த பாரா பாடாதீர்கள்!

 

‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி’

 

‘அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண் வளராய் என் ராஜா!’

 

இந்தப் பாடல்களையும் தாலாட்டாகப் பாடலாம்.

 

‘அத்தை மடி மெத்தையடி…’ பாடல் தெரியாதவர் யார்?

கே.ஆர். விஜயாவுடன் சேர்ந்து இந்தப் பாடலும் பெருமையும், புகழும் பெற்றதை யார் மறக்கவோ மறுக்கவோ முடியும்? இந்தப் பாட்டையும் பாடலாம்.

 

உங்களுக்கு எந்தப் பாடல் வருமோ அதைத் தாலாட்டாகப் பாடிவிடுங்கள்.

சோகப் பாடல், இரைச்சலான பாடல் வேண்டாம்.

 

ஒரே பாட்டை திரும்பத்திரும்ப பாடுங்கள். அப்போதுதான் குழந்தை தூங்கும். நீங்கள் உங்கள் சங்கீதத் திறமையைக் காட்ட வேறு வேறு பாடல்கள் பாடிக் கொண்டே இருந்தால், குழந்தையும் கேட்டுக் கொண்டு தூங்காமல், ‘அட! அம்மாவுக்கு இத்தனை பாட்டு தெரியுமா?’ என்று உங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் கண் கொட்டாமல்!

 

பெரியவர்களுக்குத் தூக்கம் வரவில்லை என்றால் ஒரு தந்திரம் பண்ணச் சொல்வார்கள்: ஒரு ஆடு இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் குதிக்கிறது என்று மனதில் உருவகம் செய்து கொள்ள வேண்டும். மறுபடி அதே ஆடு இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம்; மறுபடி அ. ஆ. இ. ப. அ. ப. ஒரே ஒரு ஆடுதான். இதைப் போல ‘மொனாடனஸ்’ ஆக நினைத்துக் கொண்டிருந்தால் தூக்கம் வந்துவிடும்.

 

அதே தான் குழந்தைக்கும். ஒரே பாட்டை எத்தனை முறை கேட்பது என்று அலுத்துக் கொண்டு தூங்கி விடும். இல்லை பாடிப் பாடி அசந்து போய் நீங்கள் தூங்கி விடுவீர்கள்! பிறகு பாவம், அம்மா என்று குழந்தையும் தூங்கிவிடும்; அல்லது அப்பாடி அம்மா ஒரு வழியாகப் பாட்டை நிறுத்தினாள், இனி நாம் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தூங்க ஆரம்பிக்கலாம்.

 

இரண்டும் ஓகே தானே!

 

அடுத்த பதிவில் : பிரசவம் ஆன பெண்ணிற்கு குறிப்புகள்

செல்வ களஞ்சியமே 6

குழந்தையுடன் பேசுங்கள்!

பிள்ளைத் தமிழ் என்பது இலக்கிய வகையில் ஒன்று. பாட்டுடை தலைவன்/தலைவியின் குழந்தைப் பருவத்தை பாடுவதுதான் இந்தப் பிள்ளைத்தமிழ்

நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவத்தை மிகவும் அனுபவித்து யசோதையின் நிலையில் தன்னை வைத்துப் பாடுகிறார். அதில் யசோதை கண்ணனை நீராட்டத்திற்கு அழைக்கும் பாடல்கள் 10. அதில் ஒரு பாடலின் கடைசி வரிதான் ‘அழகனே நீராட வாராய்’.

குளிப்பதற்கு அடம் பிடிக்கும் குழந்தையை யசோதை எவ்வாறு தாஜா பண்ணி நீராட அழைக்கிறாள் பாருங்கள்:

‘நீ பிறந்த திருவோணம் இன்று,

நீ நீராட வேண்டும்…’

‘இன்னைக்கு உன் பிறந்த நாள், குளிக்கணும் இல்லையா?’

‘நப்பின்னைக் காணிற் சிரிக்கும்…’

‘உன் தோழி நப்பின்னை நீ குளிக்காமல் இருந்தால் சிரிப்பாளே… அவள் பார்ப்பதற்கு முன் குளித்துவிடு’

இதையெல்லாம் எதற்கு இங்கே சொல்லுகிறேன் என்றால் குழந்தையுடன் நிறைய பேச வேண்டும்.

ஒரு சின்ன பிளாஷ்பேக்:

என் முதல் குழந்தை சித்திரை மாதத்தில் (வருடப்பிறப்பு அன்று) பிறந்தாள். நல்ல வெய்யில். இரவு கூட சூடு தான். குழந்தையை கட்டிலில் சுவற்றின் பக்கம் விட்டுவிட்டு கட்டிலின் ஓரத்தில் நான் படுத்துக் கொள்வேன். மெத்தை மேல் ரப்பர் ஷீட். அதன் மேல் ஒரு துணியை போட்டு குழந்தையை விட்டிருந்தேன்.

ஒரு நாள் இரவு. பக்கத்தில் படுத்திருந்த குழந்தை நெளிந்து கொண்டே இருந்தது. குழந்தைக்கு இரண்டு  பக்கத்திலும்  புடவைகளை சின்ன சின்ன தலையணை போல சுற்றி அணைத்தபடி வைத்திருந்தேன். ஏன் இப்படி நெளிகிறது என்று ரொம்பவும் யோசனை ஆயிற்று. கையில் எடுத்தேன். குழந்தையின் முதுகு சூடாக இருந்தது. ரப்பர் ஷீட் சூடு!

எனக்கு மனசெல்லாம் நெகிழ்ந்து விட்டது. பாவம், வாயில்லா ஜீவன்! எப்படி தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயலுகிறது பாருங்கள்.  அன்றிலிருந்து குழந்தைக்கும் எனக்கும் இருந்த இடைவெளி சட்டென்று குறைந்தது. அதன் உடல் பாஷை புரிய ஆரம்பித்தது. அன்றுதான் அது என் குழந்தை என்ற ஒரு பாச உணர்வு தோன்ற ஆரம்பித்தது.

முதன்முதலாக அதனிடம் பேச ஆரம்பித்தேன்: ‘அச்சச்சோ! கோந்தைக்கு ரொம்ப ச்சூடா? அதா(ன்) இப்படி நெளிஞ்சியா? அம்மாக்குத் தெரியவே இல்லை. ச்சாரிடா கண்ணா…!’

அன்றிலிருந்து  ரப்பர் ஷீட் மேல் முழு புடவையை போட்டு குழந்தையை விட ஆரம்பித்தேன். குழந்தையும் நிம்மதியாகத் தூங்கிற்று.

இனி…

சென்ற பகுதியில் குழந்தையை எப்படிக் காலில் போட்டுக் கொண்டு நீராட்டுவது என்று என் அம்மா எனக்கு சொன்னதை கேட்டீர்கள் இல்லையா?

நானும் அப்போது கேட்டுக் கொண்டேன். சொல்வது சுலபம் செய்வது கடினம் என்பார்கள் இல்லையா?

முதல் நாள் ரொம்பவும் பயந்தேன். அம்மாவை நினைத்துக் கொண்டே ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டேன். குழந்தையை காலில் போட்டுக் கொண்டு குழந்தை உடம்பில் எண்ணெய் தடவினேன். இதுவரை எல்லாம் சரி. குழந்தையை திருப்பி விட வேண்டுமே…. என் கைகளிலும் குழந்தையின் உடலிலும் எண்ணெய். வழுக்குகிறது. என் மனதிற்கு நெருங்கிய தெய்வமான ஸ்ரீரங்கம் பெருமாளை ‘ரங்கா ரங்கா’ என்று கூப்பிட்டுக் கொண்டே நிதானமாக குழந்தை தூக்கித் திருப்பிப் போட்டுக் கொண்டேன்.

என் அம்மா எனக்கு சொல்லியதை நினைவு படுத்திக் கொண்டேன்: ‘கொஞ்சம் தலையை சரியாகத் துடைக்க வில்லை என்றால் பரவாயில்லை. குழந்தை உடம்பில் துளி எண்ணெய் தங்கி விட்டாலும் பரவாயில்லை. கோழி மிதித்து குஞ்சு ஒன்றும் ஆகாது. நீ குழந்தையின் அம்மா. தைரியமாக குழந்தையை குளித்துவிடு. ஒன்றிரண்டு நாட்கள் சற்று முன்னேபின்னே இருக்கும். அதனால் மனசு வருத்தப் படாதே!’

குழந்தையை நீராட்ட எடுத்துகொண்டு போவதற்கு முன்னால் அதனிடம் சொன்னேன்: ‘அம்மா இன்னிக்கு உன்னை மொதமொதலா குளிச்சு விடப் போறேன். நீ சமத்தா இருக்கணும். கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும். நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சரியா? நா கோழி; நீ குஞ்சு, ஓகே?’

குழந்தையை காலில் போட்டுக் கொண்டு எண்ணெய் தடவி பிறகு அதனை திருப்பி விட்டுக் கொள்ளும் போதும் அதனிடம் சொன்னேன்: ‘கொஞ்சம் வழுக்காத இரு. அம்மாவும் புதுசு நீயும் புதுசு. நாம இரண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிண்டா உனக்கும் நல்லது; எனக்கும் நல்லது. சரியா?’ என் மனதில் இருந்த பயம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

இப்படி குழந்தையையும் நான் செய்யும் செயல்களில் ஈடுபடுத்தி அதனுடன் பேசிப்பேசி செய்ததால் சீக்கிரமே நானும் குழந்தையும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம் என்று சொல்ல வேண்டும்.

இப்போதெல்லாம் யாரும் குழந்தையை காலில் போட்டுக் குளிப்பாட்டுவது இல்லை. நிறையப் பாட்டிமார்களுக்கு முட்டிவலி; கீழே உட்கார முடிவதில்லை. அதனால் தொட்டிக் குளியல் தான். தவறு ஏதும் இல்லை. காலத்திற்குத் தகுந்தாற்போல!

நான் மிகவும் ரசித்த ஒரு தொட்டிக் குளியல் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

எனது முதல் பேரன் பிறந்தவுடன், மருத்துவ மனையில் இருக்கும் நர்ஸ் தினமும் காலையில் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் கண்ணிமைக்கும் நேரத்தில் குளிப்பாட்டிக் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். ஒரு நாள் நானும் அவருடன் போனேன். ‘காலில் போட்டுக் கொண்டு குளிப்பாட்டுவீர்களா?’ என்ற என்னைப் பார்த்து சிரித்து விட்டு ‘வாங்க நாங்க குளிப்பாட்டுறத பாருங்க’ என்றார்.

நம் சமையலறையில் இருக்கும் தொட்டியை விட சற்றே பெரிய தொட்டி.

நர்ஸ் குழந்தையின் தலை கழுத்து சேருமிடத்தை தனது இடது கை கட்டை விரல், ஆட்காட்டி விரல் இரண்டாலும் ‘கிளிப்’ செய்து கொண்டார். மற்ற விரல்கள் குழந்தையின் முதுகை தாங்கிக் கொண்டிருந்தன. குழந்தையை அப்படி இப்படித் திருப்பித் திருப்பி தொட்டியில் இருந்த நீரை வாரி வாரி இறைத்து, வலது கையால் சோப் தேய்த்து… நான் அசந்து போய் நின்றேன். குழந்தையின் பின்பக்கத்தை குளிப்பாட்ட வெகு லாவகமாக குழந்தையை திருப்பி, இப்போது குழந்தையின் கழுத்து, மார்புப் பகுதி  அவரது இடது கை விரல்களுக்குள்! குழந்தைக்குத் துளிக்கூட அசௌகரியமே ஏற்படாது அவர் அந்த இளம் குழந்தையை கையாண்ட விதம்! கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

குழந்தையை அவர் தொட்டிக்குள் விடவே இல்லை. இதையெல்லாம் நான் எழுதி, நீங்கள் படிக்கும் நேரம் கூட ஆகவில்லை அந்த நர்ஸ் குழந்தையை குளிப்பாட்ட!

இது கூட ஒரு திறமை தான், இல்லையா?

அடுத்த பகுதியில் தாலாட்டுடன் சந்திப்போம், சரியா?

செல்வ களஞ்சியமே 5

சில விளக்கங்கள்

குழந்தை வளர்ப்பில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர் டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் தான். உங்கள் குடும்ப மருத்துவரா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இல்லையில்லை. அவரது புத்தகம்  தான் எனக்குக் குழந்தை வளர்ப்பில் கீதை!

என் முதல் குழந்தை பிறப்பதற்கு முன் என் பெரிய ஓர்ப்படி எனக்கு இவர் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தாள். என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு! மிகவும் சுவாரஸ்யமாக எழுதி இருப்பார். பலமுறை படித்து ரசித்திருக்கிறேன் – குழந்தை பிறப்பதற்கு முன்பே!

குழந்தைக்கு எந்த பிரச்னை வந்தாலும் டாக்டர் ஸ்பாக் – ஐத் தான் கேட்பேன் – படிப்பேன்!

புத்தகம் படித்து குழந்தையை வளர்க்க முடியுமா என்கிறீர்களா? இவரது புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். நம் வீட்டுக் கூடத்தில் வந்து நின்று பார்த்துவிட்டு எழுதுகிறாரோ என்று தோன்றும். 1946 ஆம் ஆண்டு வெளியான இவர் எழுதிய Baby and child care இன்றுவரை பல்லாயிரக்கணக்கான அம்மாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

அந்தப் புத்தகத்தில் அவர் சொன்ன இரண்டு கருத்துக்கள் என்னை ரொம்பவும் கவர்ந்தன.

அம்மாக்களுக்கு: ‘You know more than you think you do’.

குழந்தைகளைப் பற்றி: ”Don’t take your child for granted. He has likes and dislikes!’  என்பார். ஒவ்வொரு அம்மாவும் இந்த வரிகளை பலசமயங்களில் ‘எத்தனை உண்மை’ என்று வியந்திருப்பாள்.

 

என் பெண்ணிற்கு நான் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தேன். என் புத்தகம் என்னிடமே பத்திரமாக!

டாக்டர் ஸ்பாக் 1994 ஆம் வருடம் தனது 94 வது வயதில் இறைவனடி சேர்ந்த போது எனக்கு என் குடும்பத்தில் ஒருவரை இழந்த துக்கம்.

இனி  சென்ற வாரம் வந்த கருத்துரைகளைப் பற்றிப் பார்ப்போம்.

முதலில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் சொல்லியிருந்ததைப் பார்ப்போம்:

“குழந்தையை குளிக்கவைத்து துடைத்து பாலூட்டி ஒரு டவலில் பொதித்து சுற்றி முகம் மட்டும் வெளியில் தெரியுமாறு தொட்டிலில் படுக்கவைப்பார்கள்
நன்கு அசந்து தூங்கும்

இந்த மாதிரி குழந்தையை ஒரு டவலில் சுற்றுவதை ஆங்கிலத்தில் ‘Swaddle’ என்பார்கள். இந்த மாதிரி குழந்தைகளை ‘ஸ்வாடில்’ செய்வதால் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஏற்படும். இந்தக் காணொளி யைப் பாருங்கள். எப்படி குழந்தையை ஒரு பொட்டலம் மாதிரி சுற்றி உட்கார வைத்து விட்டார்!

இந்த மாதிரி செய்யும்போது கவனம் அதிகம் தேவை. ரொம்பவும் இறுக்கமாகச் சுற்றக் கூடாது. அதேசமயம் ரொம்பவும் லூசாகச் சுற்றினால் குழந்தை கையை காலை உதைத்துக் கொண்டு வெளியே வந்துவிடும். ஒரு சில மருத்துவர்கள் இதனை கூடாது என்கிறார்கள்.

குழந்தையை அந்த நாட்களில் தூளியில் விடுவது கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு அணைப்பைக் குழந்தைக்குக் கொடுக்கத்தான். சிலர் தூளியில் குழந்தையை விடுவதனால் அதன் வளர்ச்சி பாதிக்கும் என்கிறார்கள். இது தவறான கருத்து.

என் முதல் பேரன் நான் அவனை ‘ஸ்வாடில்’ செய்வதை மிகவும் விரும்புவான். சில நிமிடங்களில் தூங்கியும் விடுவான். இரண்டாவது பேரன் இதற்கெல்லாம் மசியவே இல்லை. அம்மா மடி; அல்லது பாட்டி மடி! எனக்கு டாக்டர் ஸ்பாக் நினைவுக்கு வந்தார். He has his likes and dislikes!

‘ஸ்வாடில்’ செய்யாமல் பக்கத்தில் விட்டுக் கொண்டால் இரண்டு பக்கமும் சின்னச்சின்ன தலையணைகளையோ அல்லது புடவைகளை சுற்றி தலையணை போலச் செய்து அண்டக் கொடுங்கள். குழந்தையின் மேல் ஒரு துணியைப் போர்த்தி விடுங்கள்.

திருமதி காமாட்சி: உரை மருந்து உண்டா? கிரைப் வாட்டராவது உண்டா?

இந்தக் காலத்து மருத்துவர்கள் இதையெல்லாம் கண்டிப்பாகக் கூடாது என்கிறார்கள். பிரசவ லேகியமே வேண்டாம் என்கிறார்களே!

குழந்தைக்கு பால் கொடுத்தவுடன் தோளில் போட்டு தட்டி ஏப்பம் விடப் பண்ண வேண்டும். அதுதான் குழந்தையின் வயிற்றில் இருக்கும் காற்றை வெளியேற்ற ஒரே வழி. கிரைப் வாட்டர் கூடவே கூடாது என்கிறார்கள்.

என் முதல் பேரன் பிறந்து சில நாட்கள் ஆகியிருக்கும். திடீரென குழந்தை அழ ஆரம்பித்துவிட்டான். நிற்காத அழுகை. எதற்கு என்றே புரியவில்லை. பசியும் இல்லை. டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போனோம். டாக்டர் முதலில் கேட்டது என் பெண்ணிற்கு என்னென்ன உணவுகள் கொடுக்கிறேன் என்று. காலையில் ‘லேகியம்’ கொடுக்கிறேன் என்றதும் ஒரு சத்தம் போட்டார் பாருங்கள்! அதிர்ந்து போய்விட்டேன்.

‘அந்தக் காலத்தில் உங்கள் அம்மா, பாட்டி சாப்பிட்டார்கள் என்றால் கடுமையான உழைப்பு இருந்தது. இந்த மருந்து ஜீரணம் ஆயிற்று. இப்போது உங்கள் பெண் குனிந்து நிமிர்ந்து ஏதாவது செய்கிறாளா? இந்த மருந்து காரசாரமாக இருக்கும். அதற்காக வண்டி நெய்யைப் போட்டுக் கொடுப்பீர்கள். அத்தனை நெய்யும் உங்கள் பெண்ணின் உடம்பில் கொழுப்பாகச் சேரும். அவளுக்கு இந்த மருந்தால் பயன் ஏதும் இல்லை அனாவசியமாக எடை கூடும். குழந்தைக்கு இதெல்லாம் ஒத்துக் கொள்ளாது. முதலில் நிறுத்துங்கள்.’

உடனடியாக நிறுத்தி விட்டேன்.

பத்திய சாப்பாடே வேண்டாம் என்கிறார்கள் இப்போது. இத்தனை நாட்கள் என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தாளோ அதையே கொடுங்கள் என்கிறார்கள் இந்தக் கால மருத்துவர்கள். அமெரிக்காவில் ஐஸ்க்ரீம் கொடுப்பார்களாமே, பிரசவம் ஆனவுடன்!

திருமதி கோமதி அரசு:

 இக்கால தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தினம் குளிப்பாட்டுவது இல்லை.

இப்போது டாக்டர் பவுடர், பொட்டு, சாம்பிராணி, எண்ணெய் குளியல் எல்லாம் தடை போடுகிறார்கள்..

குழந்தைகளை தினமும் குளிப்பாட்டுவது மிகவும் அவசியம். பிறந்த குழந்தை அடிக்கடி ‘ஸுஸ்ஸு’ போகும். கொஞ்சம் கொஞ்சமாக மலம் கழித்துக் கொண்டே இருக்கும். இளம் குழந்தைக்கு அலம்பி விட முடியாது. எத்தனைதான் ஈரத் துணியில் வெந்நீரால் துடைத்து விட்டாலும் சுத்தமாக ஆகாது.

சில குழந்தைகள் கழுத்துப் பகுதிகளிலும் தொடைப் பகுதிகளிலும் சதைபற்றுடன் இருக்கும். இங்கெல்லாம் தண்ணீர் கொட்டி அலம்பினால் தான் நல்லது. சென்னை போன்ற வியர்வை அதிகம் இருக்கும் இடங்களில் குழந்தையை நன்கு குளிப்பாட்டியபின் பவுடர் போடாமலிருப்பதே நல்லது. வியர்வையில் பவுடர் ஒட்டிக் கொண்டு வரிவரியாக பவுடர் தங்கி விடும்.

சாம்பிராணி புகையும் வேண்டாம் தான். கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புகை குழந்தையின் நுரையீரலில் படிந்து, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

எண்ணெய்க் குளியல் கட்டாயம் வேண்டும்.

செல்வ களஞ்சியமே 4

அழகனே, நீராட வாராய்!

எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்துவிட, என் அம்மா அக்காவின் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அவளுடன் இருந்தாள். எனது தலைப் பிரசவத்திற்கு அக்கா வீட்டிற்குத்தான் போனேன்.

குழந்தை பிறந்த 3 மாதங்களில் குழந்தையுடன் புக்ககம் வந்துவிட்டேன். மாமியாரிடம் ’குழந்தையை குளித்து விடுகிறீர்களா?’ என்றதற்கு  அவர் தன் இயலாமையை தெரிவிக்க திகைத்துப் போனேன். என்ன செய்வது?

அம்மாவிடம் சரணடைந்தேன். அம்மா நிதானமாகச் சொன்னாள். ‘குழந்தையை குளிப்பாட்டுவது ஒன்றும் பிரமாதமே இல்லை. முதலில் என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் எடுத்து வைத்துக் கொள். குழந்தைக்கு தேய்க்க வேண்டிய எண்ணெய், சோப்பு, அல்லது சிகைக்காய் பொடி, குழந்தையை துடைக்க டவல். நீ உட்கார மணை.

இரண்டு பக்கெட்டுகளில் நீர் பிடித்து வைத்துக் கொள். ஒன்று நல்ல சூடாக இருக்கட்டும். இன்னொன்று உன் கை பொறுக்கும் சூட்டில் இருக்கட்டும். எல்லா சாமான்களையும் உன் கை எட்டும் தூரத்தில் வைத்துக்கொள். வேண்டும்போது சூடு தண்ணீர்விட்டு விளாவிக் கொள்ளலாம்.

முதலில் குழந்தையை நிமிர்த்தி கால்களின் மேல் விட்டுக் கொள். மேல் கால்களில் சிறிது இடைவெளி விட்டு குழந்தையின் தலையை ‘கிளிப்’ மாதிரி பிடித்துக் கொள். இதனால் உன் கைகள் இரண்டையும் பயன்படுத்தலாம். எண்ணையை சூடுபடுத்திக் கொண்டு ஆறியவுடன் (இதை முதலிலேயே செய்து கொள்ள வேண்டும்) குழந்தையின் முகம், மார்பு, வயிறு, கால்கள் என்று ஒவ்வொரு பாகமாகத் தடவு.

மெதுவாக குழந்தையின் தலையை நிமிர்த்தி  கழுத்தில் எண்ணெய் தடவு. மெதுவாக குழந்தையை எடுத்து கால்களின் மேல் கவிழ்த்து விட்டுக் கொள். முன்பு போலவே கால்களால் குழந்தையின் தலையை அசையாமல் பிடித்துக் கொள். குழந்தையின் பின்னந்தலை, கழுத்தின் பின்புறம், முதுகு, பிருஷ்ட பாகம், பிருஷ்ட பாகத்தை கொஞ்சம் அகலப் படுத்தி வெளிக்குப் போகுமிடம், பின்னங்கால்கள் என்று நிதானமாக எண்ணையை தடவு. தடவும்போதே மஸாஜ்செய்வதுபோல மெல்ல கைகளால் அழுத்தி தடவு. குழந்தை கவிழ்ந்தே படுத்திருக்கட்டும்.

அடுத்தாற்போல ‘மக்’கில் நீர் எடுத்து முதலில் குழந்தையின் தலை மேல் ஊற்ற வேண்டும். குழந்தை கவிழ்ந்து படுத்திருப்பதால் முகத்தில் நீர் விழாது. ஆனாலும் ஜாக்கிரதைக்காக இடது கையை குழந்தையின் நெற்றிப் பக்கம் வைத்துக் கொண்டு நீரைக் கொட்டி நீரை அப்படியே பின்பக்கமாக வழித்து விட்டுவிட வேண்டும்.

இப்போது குழந்தையின் தலைக்கு மட்டும் சிகைக்காய் பொடி தேய்க்கலாம். இந்தக் காலத்தில் எந்த மருத்துவருமே இதை பரிந்துரைப்பதில்லை. அதனால் உடலுக்கு போடும் சோப் அல்லது பேபி ஷாம்பூ போடலாம். தலைக்கு நீரை விட்டு நன்றாக அலசியபின் தலையை நன்றாகத் துடைத்துவிடு. இப்போது குழந்தையை மறுபடி நிமிர்த்தி விட்டுக் கொண்டு முதலில் முகத்திற்கு சோப்பு போடவேண்டும்.

குழந்தையின் உடம்பில் சோப்பைப் போட்டுத் தேய்க்காமல் கைகளில் சோப்பை எடுத்துக் குழைத்துக் கொண்டு நெற்றி, கன்னங்கள், கழுத்து என்று தடவி, கைகளால் நீரை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கண்களில் நீர் போகாமல் முகத்தை அலம்ப வேண்டும். உடனே முகத்தையும் டவலால் துடைத்து விடவேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைக்கு சளி பிடிக்காது. பிறகு உடம்பிற்கு சோப் தடவி – இப்போது தாரளமாக நீரை விடலாம். கழுத்துப் பகுதி, தொடைகளின் இடுக்குகளிலும் நீர் விட்டு குளித்து விடவேண்டும்.

நன்றாகத் துடைத்து குழந்தையை டவலில் சுற்றி வெளியே கொண்டு வா.  குளியலறை அமர்க்களங்களை குழந்தையை தூங்கப் பண்ணிய பிறகு சரி படுத்தலாம்.

என் அம்மாவின் வார்த்தைகளிலேயே குழந்தையை நீராட்டியாயிற்று. இப்போது சில கேள்வி பதில்கள்:

எந்த நேரத்தில் குழந்தையை நீராட்டலாம்?

சென்னை போன்ற இடங்களில் 9 அல்லது 10 மணிக்கு நீராட்டலாம். பெங்களூர் போன்ற இடங்களில் சற்று வெய்யில் வந்தவுடன் நீராட்டலாம்.

சிலர் மதியம் 12 மணிக்கு நீராட்டுவார்கள். பொதுவாக மாலை வேளைகளில் நீராட்டுவது இல்லை. குழந்தைக்கு காலை 10 மணிக்கு ஒரு முறை பால் கொடுக்கிறீர்கள் என்றால், அடுத்த பசி வேளை வருவதற்குள் நீராட்டி விடுங்கள். நீராட்டத்திற்கு பின்  குழந்தை தூங்கும். அதனால் நீராட்டிவிட்டு, பாலூட்டி தூங்கப் பண்ணினால் இளம் தாய்க்கும் சற்று ஓய்வு கிடைக்கும்.

குழந்தையை தினமும் நீராட்ட வேண்டுமா?

நிச்சயமாக. தினமும் நீராட்ட வேண்டும். தாயின் வயிற்றில் இருக்கும் போது நீரில் இருப்பதால் பிறந்தவுடன் சற்று பூசினாற்போல இருக்கும் குழந்தை பிறகு எடை குறையும். இதனை ‘அரை வற்று’ என்பார்கள். எடை குறைவதுடன், மேல் தோல் உரிந்து வறண்டு விடும். கை கால்கள் எல்லாம் குச்சி குச்சியாக ஆகிவிடும். குழந்தையின் சருமம் பழையபடி ஆக இந்த தினக்  குளியல் ரொம்பவும் உதவி செய்யும். எண்ணெய்யும் தண்ணீரும் படப்படத் தான் குழந்தை தேறும்.

ரொம்பவும் குளிர் பிரதேசத்தில் இருப்பவர்கள் ஒரு நாள் விட்டு ஓரு நாள் நீராட்டலாம்.

எந்த எண்ணெய் சிறந்தது?

நான் என் குழந்தைகளுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் வெறும் பேபி சோப், பவுடர்  மட்டும்தான் இருந்தன. இப்போது  குழந்தைக்கென்று சகலமும் கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தலாம். எண்ணெய் சற்று சூடு படுத்தி விட்டு உபயோகித்தால் குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்கும்.

எந்த சூட்டில் நீர் இருக்க வேண்டும்?

அந்தக் காலத்தில் சுடச்சுட நீரை விடுவார்கள். குழந்தை அலறும். குளித்து முடிந்தவுடன் செக்கச்செவேலென்று ஆகிவிடும். அதுமட்டுமல்ல; சுத்தம் செய்கிறேன் என்று வாயில் ஒரு விரலை விட்டு (பாவம் குழந்தையின் வாய் இத்துனூண்டு இருக்கும். கட்டை கட்டையாய் இருக்கும் விரலை அதன் வாயில் விட்டு) நாக்கு வழிப்பார்கள். பால் சாப்பிட்ட தடம் சில குழந்தைகளுக்கு நாக்கில் இருக்கும். அதை அப்புறப்படுத்த இப்படிச் செய்கிறோம் என்பார்கள். இதனால் எல்லாம் அந்தத் தடம் போகாது. தானாகவே போய்விடும்.

காதுகளில் எல்லாம் குடைந்து குடைந்து உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். பல குழந்தைகள் குளியலறை பக்கம் எடுத்துக் கொண்டு போனாலே ஊரைக் கூட்டும்.

தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தையால் ஒன்றும் செய்ய முடியாது என்று அதைக் கொடுமைப் படுத்தக் கூடாது.

கைபொறுக்கும் சூடு போதும்.

குழந்தைக்கு பவுடர் போடுவதைக் கூட நிறைய மருத்துவர்கள் வேண்டாம் என்கிறார்கள். குழந்தைக்கு மூச்சுத் திணறும் அளவிற்கு பவுடர் போடாதீர்கள். முக்கியமாக தலைக்கு பவுடர் போடவே போடாதீர்கள். நன்றாக தலையை துடைத்திருந்தாலும் கொஞ்சநஞ்சம் இருக்கும் ஈரத்தில் இந்தப் பவுடரும் சேர தலையில் சடை போடும்.

கழுத்து, கைக்கு கீழே, தொடை இடுக்குகளில் பவுடர் போடுவதால் இந்த இடங்கள் உலர்ந்து இருக்கும்.

மையிடுவது, பொட்டு வைப்பது எல்லாம் அவரவர் விருப்பம். மருத்துவர்கள் இதெல்லாம் கூட வேண்டாம் என்கிறார்கள். ஏனென்றால் கிடைக்கும் மை, பொட்டு இவையெல்லாம் குழந்தையின் இளம் மேனியில் பாதிப்பை உண்டு பண்ணக் கூடும் என்று.

குழந்தைக்கு மெலிசாக உடை போடுங்கள். செயற்கை இழைகளால் ஆன ஆடைகள், நிறைய ஃப்ரில் வைத்த, லைனிங் கொடுத்த உடைகள் வேண்டாம்.

பாலூட்டித் தூங்கப் பண்ணுங்கள். குழந்தை நிம்மதியாகத் தூங்கட்டும். அதற்குள் நாம் வேறு சில விஷயங்கள் பேசலாம். நீங்களும் கொஞ்சம் ஓய்வு எடுங்கள். இப்படிப் போய்விட்டு அப்படி வந்துவிடுகிறேன், சரியா?

செல்வ களஞ்சியமே 3

அந்த முதல் ஆயிரம் நாட்கள்

குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகத் தொடங்கும் முதல் நாளிலிருந்து அதற்கு  இரண்டு வயதாகும் வரை உள்ள காலத்தைத்தான் ‘முதல் ஆயிரம் நாட்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

 

இந்த ‘முதல் ஆயிரம் நாட்களை’ குழந்தையின் வளர்ச்சியில் பொன்னான நாட்கள் என்று சொல்லலாம். இந்த நாட்களில் குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து  குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சத்து நிறைந்த உணவுகளினால் நீண்ட கால நோய்களிலிருந்தும்  குழந்தையை காக்கலாம். தேவைப்பட்ட ஊட்டச்சத்து கிடைக்காது போனால் குழந்தையின் உடல் மற்றும் புலனுணர்வு (cognitive) சார்ந்த வளர்ச்சிகள் பாதிக்கப்படும்.

 

ஒரு தாய் கருவுற்றிருக்கும் காலத்தில் என்ன உணவு உட்கொள்ளுகிறாளோ, அதுதான் குழந்தையின்  நினைவாற்றல், கவனசெறிவு (Concentration), தீர்மானிக்கும் குணம், அறிவுத் திறன், மனநிலை, மன உணர்வு ஆகியவற்றைத் தீர்மானிக்கும் என்று விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்துள்ளனர்.

 

முதல் ஆயிரம் நாட்களில் குழந்தைக்குக் கிடைக்கும் உணவு, நுண்ணூட்டச் சத்துப் பொருட்கள், குழந்தையின் மூளையில் உள்ள சுமார் ஐம்பது இரசாயனங்கள் / நரம்பியல் பரிமாற்றங்களை பாதிக்கின்றன என்று விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

 

இந்தியாவில் கருவுற்றிருக்கும் பெண்களில் பாதிப் பெண்களுக்கு மேல் இந்த ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மெலிந்தும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும், போதிய அளவு மன, உடல் வளர்ச்சி இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

கர்ப்ப காலத்தை முதல் மூன்று மாதங்கள், இரண்டாவது மூன்று மாதங்கள், மூன்றாவது மூன்று மாதங்கள் என்று பிரிக்கலாம். கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்கள், குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. .

இதனால் கருவுற்றிருக்கும் பெண் தனது உணவுப் பழக்கங்களை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுவது மிகவும் முக்கியம்.

நம்மூரில் கருவுற்றிருக்கும் பெண்ணைப் பார்த்து சிலர், ‘நீ இரண்டு பேருக்கு சாப்பிடவேண்டும்’ என்பார்கள். அதாவது அவளுக்கும், அவளது வயிற்றில் உருவாகி வரும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டுமாம். சூப்பர் காமெடி!

இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? ‘கருவுற்றிருக்கும் போது எப்படியும் எடை கூடும். என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்’ என்ற மிக, மிக, மிக, மிக, மிகத் தவறான எண்ணம்.

இப்படி அளவுக்கதிகமான உணவை உண்டு உடல் கன்னாபின்னாவென்று பெருத்துப்போய் குழந்தை பிறந்த பின்னும் இளைக்க முடியாமல் தவிக்கும் பல இளம் பெண்களைப் பார்க்கிறேன். இந்தத் தவறை செய்யவே செய்யாதீர்கள்.

சாப்பாட்டின் அளவை விட, உணவின் குணநலன்கள் மிகவும் முக்கியம். போலிக் ஆசிட், வைட்டமின் B12, இரும்பு சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிகம் உண்ண வேண்டும்.

கீரை வகைகளில் இந்த போலிக் ஆசிட் நிறைந்திருக்கிறது.

உணவில் முக்கியமாக DHA (Docosahexaenoic acid)) எனப்படும்  கொழுப்பு  சத்து  அவசியம் இருக்க வேண்டும். கருவிலிருக்கும் குழந்தையின்  மூளை மற்றும்  கண்ணின் விழித்திரை நன்கு உருவாவதற்கு இந்த கொழுப்புச் சத்து இன்றியமையாதது.

அதுமட்டுமில்லாமல், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க் கிருமிகளை வெளியேற்றவும் இந்த கொழுப்புச் சத்து தேவை. உணவில் இருக்கும் இந்த சத்து குழந்தையின் கண் பார்வைக்கும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமைக்கும், பொதுவான வளர்ச்சிக்கும் உதவுகிறது. கடல் உணவுகளிலும், கடுகு, கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மெந்தியம், வால் நட்ஸ், ப்ளக்ஸ் சீட்ஸ் (flax seeds) மற்றும் சோயா பீனிலும்இந்த  DHA கிடைக்கிறது. சிறிய அளவில் கீரை வகைகளிலும் காணப் படுகிறது.

நார் சத்து அதிகம் தேவை:

பேறு காலத்தில் நம் இரைப்பை, நாம் உண்ணும் உணவில் இருந்து அதிகமான  சத்துப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டி சிறிது மெதுவாகவே செயல் படுகிறது. மேலும் கர்ப்பப் பை பெரிதாகிக்கொண்டே இருப்பதால் இரைப்பையை அழுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது உண்டு. நிறைய நார் சத்து உள்ள காய்கறிகளை குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக் காய், வாழைத் தண்டு சாப்பிடுவதால் இதனைத் தவிர்க்கலாம்.

பழங்கள், பச்சை காய்கறிகள் இவற்றை நிறைய சாப்பிட வேண்டும். மிகவும் முக்கியம் நிறைய நீர் குடிப்பது. நம் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற நீர் அவசியம் தேவை.

பொதுவாகவே நம் நாட்டில், பெண்கள் தங்களது ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முதல் குழந்தையைக்  கருவுற்றிருக்கும் போது,  அம்மாவின் கவனிப்பு, மற்றும் இளம் வயது இவற்றினால் ஓரளவு நல்ல ஆரோக்கியத்துடனேயே அந்தப் பெண் இருப்பாள்.

இரண்டாவது குழந்தை பிறக்கும்போது பல தடைகள் இருக்கும்.

முதல் குழந்தைக்கும் இரண்டாவதிற்கும் இடையே நீண்ட இடைவெளி ஆகிவிடும். அதற்குள் முதல் குழந்தை பள்ளிக்குப் போகத் தொடங்கி இருக்கும்.

என் கதை அப்படித்தான் ஆயிற்று. கூட்டுக் குடும்பத்திலிருந்து தனியே வந்திருந்தோம். ஸோ, எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். முதல் குழந்தை முதல் வகுப்பில் இருந்தாள். காலையில் அவளை தயார் செய்ய வேண்டும். கணவருக்கு காலை 7.3௦ க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதனால் காலைத் தூக்கம் போயே போச்சு! என் அம்மா அப்போது பெங்களூரில் தம்பியுடன் இருந்தாள். இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு /கூட்டிக் கொண்டு ஊருக்குப் போக முடியவில்லை. அதனால் அம்மா வீட்டுக் கொஞ்சல்களை அனுபவிக்க முடியவில்லை.

என்னை நானே பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. தூக்கம் வரும் சமயத்தில் தூங்க முடியாது. மகளுக்கு வீட்டுப் பாடம் செய்ய உதவ வேண்டும். பாடங்கள் சொல்லித் தர வேண்டும்.

இத்தனையையும் மீறி நான் உற்சாகமாக இருக்க எனக்கு உதவியது இசை தான்.

வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருந்தேன். அந்த இசையில் என் உடல் அசதி, களைப்பு பறந்து போனது!

இந்த வாரம் நாம் கற்றுக் கொண்டது: உங்களுக்குப் பிடித்த ஒன்றை செய்யுங்கள். கருவுற்றிருக்கும் இளம் பெண்களுக்கு மட்டுமல்ல இந்த வார்த்தைகள். எல்லோருக்குமேதான்!

குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோமே, என்ன செய்வது என்கிறீர்களா? ஒரு வாரம் கையிலிருக்கும் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருங்கள். இதோ வந்துவிடுகிறேன்.

செல்வ களஞ்சியமே அறிமுகம்

செல்வ களஞ்சியமே 2