செல்வ களஞ்சியமே 8

இளம் தாய் கவனிக்க வேண்டியவை:

‘அன்புடையீர்,

இப்பவும் என் மகள் சௌபாக்கியவதி…………………க்கு பெண்/ஆண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலம்……’

நம் வீடுகளில் குழந்தை பிறந்தவுடன் நம் உறவினர்களுக்குத் தெரிவிக்க எழுதும் கடிதத்தின் ஒரு பகுதி இது.

இந்தக் கடிதத்தில் சொல்லப்படும் தாய்-சேய் நலத்தைப்  பேணுதலை ஆங்கிலத்தில் post-natal care என்கிறார்கள். இந்த வாரம் நாமும் இதைப் பற்றித்தான் பேசப் போகிறோம்.

.பிரசவம் ஆன பின் எல்லோருடைய கவனமும் குழந்தை மீது திரும்பிவிடும். பார்க்க வருகிறவர்களும், வரமுடியாதவர்களுக்கு கை பேசியில் செய்தி சொல்லுவதுமாக அந்த இடமே ‘கலகல’ வென்றிருக்கும்.

பிரசவித்த பெண் பாவம் களைப்பில் அசந்து போய், வருகிறவர்களிடம் பேசவும் முடியாமல் மெலிதான புன்னகையுடன் படுத்திருப்பாள்.

பிரசவம் என்பதை மறுபிறவி என்பார்கள். முற்றிலும் உண்மை. ஒவ்வொரு பெண்ணும் பிரசவ காலத்தில் அனுபவிக்கும் வலிதான் மனித இனம் அனுபவிக்கும் பல்வேறு வகையான வலிகளில் மிகக் கடுமையான வலி என்று விஞ்ஞான பூர்வமாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கர்ப்பம் தரிக்கும்போதும், பிரசவத்திற்குப் பின்னாலும் பெண்ணின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.

பிரசவம் ஆன பெண் மீண்டும் பழைய நிலையை – அதாவது கருத்தரிப்பதற்கு முன் இருந்த நிலையை அடைவதற்கு அவளுக்குக்  போஷாக்கான உணவு, தூக்கம், ஓய்வு  மிகவும் இன்றியமையாதவை. இவற்றுடன் கூடவே தனிப்பட்ட சுகாதாரமும் வெகு முக்கியம். அதாவது Personal hygiene

குழந்தைக்குத் பாலூட்டுவது, அது தூங்கும் சமயத்தில்  தூங்குவது என்று பிரசவித்த பெண் பலவகைகளில் தன்னை தயார் செய்து கொள்ளவேண்டும். பெற்றோர்களும், கணவனும், புக்ககத்தவர்களும் இந்தச் சமயத்தில் கட்டாயம் பிரசவித்த பெண்ணுக்கு உதவ வேண்டும். நல்ல ஆகாரம், தூக்கம் முதலியவற்றினால் சீக்கிரமே அவள் தன் வேலையை தானே பார்த்துக் கொள்ள முடியும்.

நம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக வளர குடும்பத்தவர்களின் முழு மனதான உதவி நிச்சயம் தேவை.

உணவு:

செல்வ களஞ்சியமே பகுதி 3 (ஆயிரம் நாட்கள்)  (http://wp.me/p2IA60-8d) இல் கூறியது போல போஷாக்கான உணவுகளைத் தொடர்ந்து  கொடுக்க வேண்டும்.

சாதாரணப் பிரசவம் அதாவது இயற்கை முறையில் குழந்தை பிறந்திருந்தால் பிரசவ அறையை விட்டு வெளியே வந்தவுடன் சூடாக காபி, டீ, பால் குடிக்கக் கொடுக்கலாம்.

நான் என் பெண்ணுக்கு ரவை கஞ்சி போட்டுக் கொடுப்பேன். அவள் மிகவும் இஷ்டப்பட்டுக் குடிப்பாள். தயாரிக்கும் விதம் கடைசியில் சொல்லுகிறேன்.

வட இந்தியாவில் பிரசவம் ஆன பெண்ணிற்கு முதல் சில மாதங்களுக்கு ரவை கேசரி செய்து கொடுப்பார்களாம். இடுப்பிற்கு பலம் சேர்க்கும் உணவு இது என்பது காரணம்.

இப்போதெல்லாம் பத்தியம் ஏதும் வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள். எப்போதும் போல எல்லாம் சாப்பிடலாம் என்கிறார்கள். அதற்காக பீட்ஸா, பர்கர் சாப்பிடலாமா என்று கேட்கக் கூடாது!

அதிகக் காரம், எண்ணெய்  இல்லாமல் வயிற்றுக்கு இதமானதாக உணவு இருக்க வேண்டும். பிரசவத்திற்கு முன் எப்படி ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டாளோ அதே போல இப்போதும் உண்ணும் உணவில் அதிகக் கவனம் வேண்டும்.

போஷாக்கு சத்துக் குறைவினால் குழந்தைக்கு பலவித நோய் தொற்றுகள் ஏற்படும். வளர்ந்த பின்னும், கவனமின்மை, சோம்பல், மறதி முதலியவற்றால் குழந்தையின் தினசரி வாழ்க்கை பாதிக்கக் கூடும். அதனால் இளம் தாய் தன் உணவுப் பழக்கத்தை சரியானபடி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு வேண்டிய சத்துப் பொருட்கள் தாய் பாலிலிருந்து தான் கிடைகிறது. இதனாலும்  தாய் தன் உணவில் அக்கறை செலுத்துவது அதி முக்கியம்.

புதிதாக சமைத்த உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்

காலை வேளையில் காபி, டீ, அல்லது பாலுடன் ஹார்லிக்ஸ் சேர்த்துக் கொடுக்கலாம். காலை சிற்றுண்டி கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவிற்கும் இடையில் ஏதாவது சத்து மாவு அல்லது ஓட்ஸ், ராகி கஞ்சி கொடுக்கலாம். பழங்கள், நிறைய பச்சைக் காய்கறிகள் நிறைந்த சாலட், கீரை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நடுநடுவில் சுத்தமான நீர் குடிக்க வேண்டும்.

எதற்கு இத்தனை முன் ஜாக்கிரதை? இளம் தாய்க்கு நோய் தொற்று ஏற்பட்டால் அது குழந்தையை பாதிக்கும். சில சமயங்களில் அதற்கு தாய் பால் கொடுக்கவும் முடியாமல் போகும்.

பிரசவித்த பெண் எந்தவித கஷ்டமும் இல்லாமல் சிறுநீர், மலம் ஆகியவற்றைக் கழிக்க பழங்கள், காய்கறிகள் உதவும். சாப்பிடும்போது எந்தவித அவசரமும் இல்லாமல் நிதானமாக சாப்பிட வேண்டும்.

ஓய்வு:

நிறைய ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வினால் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெறும். ஓய்வு என்பதை நம்மில் பலர் தூங்குவது என்று தவறாக புரிந்து கொள்ளுகிறார்கள். இல்லை. ஓய்வு என்பது வழக்கமாகச் செய்யும் வேலையிலிருந்து மாறுபட்டு, மனதுக்குப் பிடித்ததை செய்வது.

குழந்தை தூங்கும் போதெல்லாம் தாயும் தூங்குவது என்பது சற்று சிரமம். புத்தகம் படிக்கலாம். இனிய இசையைக் கேட்கலாம். தொலைகாட்சி கூட பார்க்கலாம். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும் போது பார்க்க வேண்டாம். குழந்தையுடன் நீங்கள் இருக்கும் நேரம் என்பது உங்களுக்கும், குழந்தைக்கும் மட்டுமேயான நேரம். அதை எந்தக் காரணம் கொண்டும் தவற விடக் கூடாது.

இரவில் குழந்தைக்காக எழுந்திருக்க வேண்டி இருந்தால் பகலில் கொஞ்சம் தூங்கலாம். தப்பில்லை.

இந்த ஓய்வைக் கொடுக்கவே அந்தக் காலத்தில் 30, 40 நாட்களுக்கு பிரசவித்த பெண்ணை சமையலறைக்குள்  விட மாட்டார்கள். ஆண் குழந்தையானால் 31 நாட்களும், பெண் குழந்தையானால் 41 நாட்களும் தீட்டு காத்தார்கள்.

ரவை கஞ்சி செய்யும் முறை:

மெல்லிசு ரவை : ¼ கப்

தண்ணீர் – 2 கப்

நெய் 2 தேக்கரண்டி (இன்னும் கொஞ்சம் தாராளமாக விடலாம்)

பால் 1 கப்

சர்க்கரை –  ருசிக்கேற்ப / தேவைக்கேற்ப

ஏலக்காய் பொடி துளி –  ஒரு வாசனைக்கு

 

முதலில் வாணலியில் நெய்யை விட்டு சற்று சூடானவுடன் ரவையைப் போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

பக்கத்து அடுப்பில் நீரை கொதிக்க விடவும். நன்றாக சலசலவென்று கொதிக்கும் போது ரவையைப் போட்டு கைவிடாமல் , கட்டி தட்டாமல் கிளறவும்.

ரவை நன்றாக வெந்தபின் இறக்கி விடவும். இந்தக் கஞ்சி கொஞ்சம் நீர்க்கவே இருக்கும். எப்போது கொடுக்கிறீர்களோ அப்போது பால், சர்க்கரை  சேர்த்துக் கொடுக்கலாம். அவ்வப்போது புதிதாகப் போட்டுக் கொடுத்தால் சுடச்சுட மிக நன்றாக இருக்கும். ரவையை மொத்தமாக வறுத்து வைத்துக் கொண்டால் சட்டென்று செய்து விடலாம்.

அடுத்த பகுதியில் இளம் தாய் தன் சுகாதாரத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.

 

என்னுடைய இந்தத் தொடர் அமேசான் தளத்தில் (இரண்டு பாகங்களும்) புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வேண்டுபவர்கள் இங்கு வாங்கிக் கொள்ளலாம்.

செல்வ களஞ்சியமே -2

பின்னூட்டமொன்றை இடுக