சத்தமில்லாமல் ஒரு தீபாவளி!

இந்த ஊருக்கு வந்த வருடம். சென்னையில் தீபாவளி கொண்டாட வா என்று அழைத்தும் போகாமல் இங்கேயே கொண்டாட முடிவு செய்தோம்.

புது ஊர்ல கொண்டாடலாம் என்று துணிமணிகள் எல்லாம் வாங்கியாகி விட்டது.

தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு பட்டாசு வாங்கலாம் என்று கிளம்பினோம். கடைகடையாக ஏறி இறங்கியது தான் மிச்சம். பட்டாக்கி வரவே இல்லை என்றார்கள்.

‘ச்சே! ஒழுங்கா சென்னையிலேயே இருந்திருக்கலாம்…..’ குழந்தைகள் இருவரும் வெறுத்துப் போயினர்.

நம்மூரில் பொட்டிக் கடையில் கூட பட்டாசு கிடைக்கும். இங்கு என்ன இப்படி? யோசனையுடன் தோழியைக் கேட்டேன்.

பல வருடங்களுக்கு முன் மிகப் பெரிய தீ விபத்து பட்டாசுக் கடையில் ஏற்பட்டதினால் தீபாவளிக்கு ஒரு வாரம் முன் வரை எங்கேயும் பட்டாசு விற்பனை கிடையாது. விற்பனை காலி திடல்களில் தான் நடக்கும்; கடைகளில் பட்டாசு கிடைக்காது என்ற விவரம் தெரிந்தது.

என்ன செய்வது? காத்திருக்க வேண்டியதுதான்.

ஒரு வழியாக ஊருக்கு வெகு தொலைவில் கடைகள் போடப்பட்டு பட்டாசுகள் வாங்கியும் ஆச்சு.

நம்மூர் வழக்கப்படி நான்கு மணிக்கே குழந்தைகளை எழுப்பி நலங்கு இட்டு, தலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் ஆயிற்று. எல்லோரும் புதுசு உடுத்திக் கொண்டு தீபாவளி மருந்து சாப்பிட்டு, பட்டாசு பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினால்……………..

ஊரே தூங்கிக் கொண்டிருக்கிறது. வீதியில் ஈ காக்கா இல்லை. அவையெல்லாம் விடிந்துதானே வரும்! பெயருக்குக் கூட ஒருவரும் இல்லை. நிசப்தம்!

‘நாம வெடி வெச்சு எல்லாரையும் எழுப்பலாம்மா!’

மகன் சொன்னான்.

‘அதெல்லாம் தப்பு!’ என் கணவர் சொல்லிவிட்டு திரும்ப மாடிக்குப் போய் விட்டார்.

‘இதுக்குதான் சென்னையிலேயே இருந்திருக்கலாம்….. இங்க வந்ததுதானால கன்னட வேற படிக்கணும்…!’ குழந்தை முணுமுணுத்துத்தான்.

அவரவர்கள் வருத்தம் அவரவர்களுக்கு!

எல்லோரும் வீட்டுக்குள் போய் உட்கார்ந்தோம். சரி விடிந்தவுடன் பட்டாசு வெடிக்கலாம் என்று குழந்தைகளை சமாதானப்படுத்தினேன்.

விடிந்தும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை. அன்று முழுதும் பட்டாசு சத்தம் மட்டுமல்ல; பண்டிகைக்கு உண்டான அறிகுறியே இல்லை.

பெங்களூர் காரர்கள் கொஞ்சம் நிதானம் தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஊரே ‘வயசாளிகளின் சுவர்க்கம்’ என்றுதானே அழைக்கப்படுகிறது! ஆனாலும் இப்படியா?

மறுபடி தோழியை கேட்டேன்.

‘அதுவா? இன்னிக்கு அமாவாசை. அமாவாசையன்று ஒன்றுமே பண்ணமாட்டோம்! நாளைக்கு பலி பாட்யா (பிரதமை) தான் கொண்டாடுவோம். நேற்று சதுர்த்தசி – நீர் நிறைக்கும் பண்டிகை. நீர் பிடித்து வைக்கும் பாத்திரங்களை நன்றாக கழுவி நீர் நிறைத்து வைப்போம்….’

‘பட்டாசு எப்போ வெடிப்பீங்க?’

‘நாளைக்குத் தான் பட்டாக்கி வெடிப்போம்!’

சரி நாமும் நாளைக்கு வெடிக்கலாம் என்று குழந்தைகளை சமாதானப்படுத்தி விட்டு அன்றைய பொழுதைக் கழித்தோம்.

அடுத்த நாளும் சத்தமே இல்லை.

‘இந்த ஊருல சத்தமில்லாத பட்டாக்கி இருக்குமோ?’

பகல் பொழுது போயிற்று. என் பிள்ளைக்கு 6 வயது. பட்டாசை எடுப்பதும் என் கணவரின் முகத்தை பார்ப்பதுமாக……

சாயங்காலம் சிறிது சத்தம் கேட்டது தூரத்தில். குழந்தைகள் இருவரும் துள்ளிக்குதித்து கொண்டு கீழே இறங்கினர். கூடவே நாங்களும் போய் பட்டாசு வெடித்தோம்.

தீபாவளிக்கு அடுத்த நாள் பட்டாசு வெடித்தவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.

இப்போது இதெல்லாம் பழகி விட்டது. தீபாவளியன்று நாங்களும் மெதுவாக எழுந்து…..நிதானமாக குளித்து…….அதைவிட நிதானமாக பட்டாசு வெடித்து………!

பெங்களூர் வாசிகளாகி விட்டோம்!

இந்த ஊரின் தலைமை செயலகத்துக்கு என்ன பெயர் தெரியுமோ?

விதான சௌதா என்றால் உங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண். ஆனால் அதன் செல்லப் பெயர் : நிதான சௌதா!

எல்லாமே நிதானம் தான்! கோன் எப்படியோ அப்படித்தானே குடிகளும்?

 

 

சத்தமில்லாமல் ஒரு தீபாவளி!” இல் 32 கருத்துகள் உள்ளன

  1. நிதான சௌதா super ! பெங்களூரில் தீபாவளிக்கு அடுத்த நாள் தான் பட்டாசு என்ற விவரம் இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரியும்… ஒரே பண்டிகைக்கு நம் நாடு முழுதும் எத்தனை விதமான interesting customs…

    1. வாருங்கள் தனபாலன்! இப்போதுதான் இதைப்பற்றி ஒரு வலைப்பதிவு போட்டேன். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்.

      சத்தமில்லாமல் ஒரு வலைத்தளம் ஆரம்பித்து, ‘சத்தமில்லாமல் தீபாவளி’ என்று பதிவும் போட்டாச்சு!

      உங்கள் பின்னூட்டம் வந்தபின் வேறு வாழ்த்துக்களே வேண்டாம், இல்லையா?
      நன்றி!

  2. நன்றி! frshly pressed -இல் இந்த தளம் இடம் பெற்றிருக்கிறது பார்த்தீர்களா?

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  3. இரண்டாம் எண்ணம் அபாரமாக இருக்கிறது.சத்தமே இல்லாமல் திடீரென்று பட்டாசுகள் ஒன்று சேர வெடித்தாற்போல இருக்கிறது. தீப ஒளியுடன் ப்ரகாசமாகத்
    தொடக்கம். ரொம்்்்்்்்்்்்ப ஸந்தோஷமாகப் படித்தேன். frshly pressed-இல்லும் பார்த்தேன். வாழ்த்துகள்.
    அடுத்து முன்னணி இடுகைகளில் வரத்துவங்கும் இரண்டாம்
    எண்ணங்கள். ரொம்ப இன்டரஸ்டிங்காக இருக்கும் உன் இடுகை பெங்களூரின் மலரும் நினைவுகளை உண்டாக்குகிறது. அடுத்து என்ன என்று எல்லாரும் எதிர்பார்க்கும் ஆவலுடன் சொல்லுகிறேன்.

    1. இரண்டாம் தளம் ஆரம்பித்து இருக்கிறீர்களே ஏன் என்று சிலர் கேட்டிருக்கின்றனர்.

      ஏதோ ஆரம்பித்தேன். உங்களது இந்த பின்னூட்டம்
      பெங்களூரின் மலரும் நினைவுகளை இதில் எழுதலாம் என்ற ஐடியாவைக் கொடுத்திருக்கிறது.

      நன்றி காமாட்சி அம்மா!

    1. நாங்களும் அப்படித்தான். ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன பட்டாசுகள் வாங்கி. குழந்தையில் இருந்த ஆர்வம் இப்போது குறைந்து விட்டது வளர்ந்து விட்ட என் குழந்தைகளுக்கு!

      வருகைக்கு நன்றி!

  4. சத்தமில்லா தீபாவளி வித்தியாசமா தான் இருக்கு. தில்லியில் மாலை தான் வெடி வெடிபார்கள். இரவு பனிரெண்டு வரை கூட தொடரும்.

    1. சத்தமில்லாமல் தீபாவளியை இத்தனை வருடங்கள் கொண்டாடிவிட்டு, போன வருடம் பிள்ளையின் தலை தீபாவளிக்கு சென்னை போயிருந்தபோது வெடிச்சத்தம் தலைவலியாக இருந்தது!

      நன்றி ஆதி!

  5. புதிய வலைப்பதிவிற்கு வாழ்த்துகள்.

    தில்லியில் மாலை வெடிக்க ஆரம்பித்தால் விடிய விடிய வெடிச் சத்தம் கேட்டபடியே இருக்கும்…. காலையில் கும்பகர்ண தூக்கம் தான். அன்று விடுமுறை என்பதால் எட்டு மணி போல தான் நித்ரா தேவியிடமிருந்து விடுபடுவார்கள்… 🙂

    சுவையான பகிர்வும்மா.

  6. .வணக்கம்
    அம்மா,

    சத்தமில்லாமல் தீபாவளி என்ற படைப்பின் மூலம் ஒரு சமுதாய வழிப்புணர்வை ஏற்படுத்தியுளிர்கள்
    அதாவது பட்டாசு சனக்கூட்டம் உள்ளஇடங்களில் விற்பனை செய்ய தடை என்ற தகவலையும் சனகூட்டம் அற்ற இடங்களில்தான் பட்டசு விற்பனை செய்ய வேண்டும் என்ற தகவலையும் கொடுத்துள்ளிர்கள்
    சத்தமில்லாமல் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து சத்தமில்லாமல் தீபாவளி என்ற தலைப்பில் தொடங்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் அம்மா
    அழகான மொழிநடையும் ஆங்காங்கே விழிப்பு குறி அடையாளங்களும் முற்றுப்புள்ளிகளும் உங்கள் படைப்புக்கு ஒரு மகுடம் சேர்க்குது,
    “இனிய தீபாவளி வாழ்த்துக்கள்அம்மா”

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  7. ஹாஹா! நல்லா இருக்கு. நானும் பெங்களூர்ல ஒரு வருஷம் இருந்தேன்.. ஆனா தீவாளி அங்க கொண்டாடுனதில்லை. இருந்தாலும் கொண்டாடிருக்க முடியாது போல. அந்த நிதான சௌதா மேட்டர் சூப்பர்! 🙂

பின்னூட்டமொன்றை இடுக