Daily Archives: திசெம்பர் 1, 2012

கம்பளின்னு ஒண்ணு இருக்கா?

ஒவ்வொரு முறை சென்னை போய் விட்டு திரும்பும் போதும்  உடல் நலம் சரியில்லாமல் போய் விடுகிறது.

நிஜக் காரணம் அலைச்சல் தான். முதல் நாள் போய் விட்டு அடுத்த நாளே திரும்புதல்; அதற்குள் எத்தனை பேரை பார்க்க முடியுமோ பார்த்து விடுதல் என்று ஓய்வு இல்லாமல் போய்விடுகிறது.

சென்னை எல்லா பக்கங்களிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. நம் உறவினர்களும் அங்கங்கே பரந்து விரிந்து இருக்கிறார்கள். அக்கா சோளிங்க நல்லூர்; அண்ணா மேடவாக்கம். துணைவரின் ஒரு தம்பி வளசரவாக்கம்; இன்னொருவர் மடிப்பாக்கம் – எங்கு போவது? யாரைப் பார்ப்பது? யாரை விடுவது?

‘எப்போதோ வருகிறாய், காபியாவது குடி’ என்ற அன்புத் தொல்லைகளும் இன்னொரு காரணம்! வேண்டுமோ வேண்டாமோ காபி குடிக்க வேண்டிய கட்டாயம். எங்களூரில் பை-டூ லோட்டாவில் ஒரு வாய், அரை வாய் காபி சாப்பிட்டு விட்டு சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் ‘அண்டா’ நிறைய காபியை குடிக்க நாங்கள் படும் பாடு…! படைத்தவனுக்கே வெளிச்சம்!

சென்னை வெய்யிலில், வேளை இல்லா வேளையில் சுடசுட காப்பி! போதுமடா சாமி சென்னை விஜயம் என்று நொந்து போய் திரும்பி வருவோம். அடுத்தநாளே வேறு ஒரு விசேஷம் என்று சென்னையிலிருந்து அழைப்பு வரும்!

எங்கள் பெங்களூரு நண்பர்கள் சொல்லுவார்கள்: ‘நீங்கள் சென்னையில் இருந்து கொண்டு அவ்வப்போது பெங்களூரு வந்து போகலாமே!’ என்று.

இத்தனை சொன்னாலும் சென்னை என்றால் மனம் பரபரப்பது நிஜமோ நிஜம். நமக்கும் சென்னைக்கும் இருக்கும் பந்தம் அந்த மாதிரி! IPL–இல் பிடித்த டீம் சென்னை சூப்பர் கிங் தான்!

சென்ற ஞாயிறு சென்னை போய்விட்டு திங்கட்கிழமை இரவே திரும்பி ஆயிற்று. அடுத்தநாள் எழுந்திருக்கும்போதே உடம்பு கூடவே வந்தது. தலை நான் இருக்கிறேன் என்றது. பச்சை மிளகாய் இல்லாமலேயே கண்கள் எரிந்தன. பால் – இல்லையில்லை – காப்பி கசந்தது; படுக்கை நொந்த உடலுக்கு இதமாக இருந்தது.

நேற்று ஷதாப்தியில் ஐஸ்க்ரீம் என்ற பெயரில் சாப்பிட்ட  ஐஸ்கட்டி தொண்டை கட்டிய வில்லன் போல தொண்டைக்குள் ‘கீச் கீச்’ என்றது.  மூக்கிலிருந்து, தமிழ் நாட்டுக்குக் கொடுக்க மறுத்த காவேரி – சொட்டுச் சொட்டாக ஊஹும் குடம் குடமாக கொட்டியது. இருமல், தும்மல் என்று விடாமல் எதோ சத்தம் போட்டுக் கொண்டே இருந்தேன். பேச வாயைத் திறந்தால் குரல் உடைந்த பதின் வயது சிறுவன் போல இரண்டு மூன்று குரலில்     பேசினேன்.

அவசரமாக வெந்நீர் வைத்து, அதில் மிளகு போட்டு குடிக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்கள் 100 கிராம் மிளகு தான் தீர்ந்தது.

‘டாக்டர் மதுகர் ஷெட்டிக்கு  நீ கொடுக்க வேண்டிய பணம் பாக்கி இருக்கிறது. இரண்டு பேருமாகப் போய் கொடுத்து விட்டு வரலாம் வா’ என்றார் என்னில் பாதியான என் பர்த்தா.

‘காந்தி பஜார் போய் ஷால் வாங்கி வர வேண்டும்’ சொன்ன என்னை அதிசயமாகப் பார்த்தார்.

‘என்ன இப்படி ஒரு ஊதக் காற்று. ச்சே! என்ன ஊர் இது? கொஞ்சம் வெய்யிலில் நிற்கலாமா?’

மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சொன்னார் மகனிடம்: ‘இன்னிக்கு அம்மா என்னவோ புதுசு புதுசா பேசறா. 27 வருடங்களா ஷால், ஸ்வெட்டர் இல்லாமல் பெங்களூரு குளிரை சமாளிச்சவளாக்கும் அப்படின்னு பெருமை பேசுவாளே, இன்னிக்கு சொல்றா, ஷால் வேணுமாம்; ஊதக் காற்றாம்; வெயில்ல நிக்கலாமான்னு வேற கேக்கறா! அம்மாவுக்கு ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணனும் போல இருக்கு…!’

பழிக்குப் பழி வாங்கறார் என்று தெரிந்தும் ஒண்ணும் சொல்லாமல் ‘கொஞ்சம் வெந்நீர் குடுக்கறேளா, மருந்து சாப்பிடணும்’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டு விட்டு கம்பளியை (அப்படின்னு ஒண்ணு இருக்கா?) இழுத்து மூடிக் கொண்டு படுத்துக் கொண்டேன்!