Tag Archives: காவல்துறை

பெற்றோர்களே! குழந்தைகள் பத்திரம்! – 2

முதல் பகுதி 

2007ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பு ஒரு அறிக்கையை அரசாங்க ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி வெளியிட்டது. அதன்படி 13 மாநிலங்களில் 12,500 குழந்தைகளை விசாரித்ததில் சுமார்  57% குழந்தைகள் அதாவது இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு மேல் பாலியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். இதில் 20% குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். வக்கிரமான பாலியல் இச்சைகளுக்காக பெரியவர்களினால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். இதில் சிறார்களுக்கும் சிறுமிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. 57% குழந்தைகளில் பாதிக்கு மேல் சிறார்களே.

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்களில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இது பரவலாக கண்மூடித்தனமாக எல்லா இடங்களிலும் கலாச்சாரம், மதம், வர்க்கம் பாராமல் நடப்பதுதான். நகரங்களிலும், கிராமங்களிலும், தந்தையர்களாலும், சகோதர்களாலும், உறவினர்களாலும், அக்கம்பக்கத்திலுள்ளவர்களாலும், ஆசிரியர்களாலும், முன்பின் தெரியாதவர்களாலும் நடத்தப்படும் கொடுமை.

இன்னொரு விஷயம்: புது தில்லி மருத்துவ உதவியாளராக இருந்த பெண், மற்றும் 5 வயதுச் சிறுமி இவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பார்க்கும்போது இந்தக் கொடுமைகள் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, பெண்களைக் கேவலமாகப் பார்க்கும்  ஆண்களாலேயே நடத்தபடுகின்றன என்று முடிவு கட்ட ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது, இல்லையா?

இந்த வெறுக்கத்தக்க செயல் தங்கள் இழிவான பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலாத குடிகார, மனிதர்களால் செய்யப்படுகின்றன; இவர்களை தூக்கில் தொங்க விடுவது அல்லது ஒரேயடியாக ஒழித்துக் கட்டுவது சரியே என்று நினைப்பது வசதியாக இருக்கலாம். ஆனால் ஒரு வீட்டுக்குள்ளே நடக்கும் நிஜத்தை எதிர் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம்.

காக்கப்படும் மௌனம்:

‘ஹக்’ (உரிமை) என்ற குழந்தைகளுக்கான உரிமை மையத்தின் இணை இயக்குனர் இனாக்ஷி கங்குலி சொல்கிறார்: ‘குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகள் இந்த மாதிரியான வன்முறைகளுக்கு அதிகமாக ஆளாவதற்கு காரணம் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவிடும்போது குழந்தைகள் தனிமையில் விடப்படுகிறார்கள். நடுத்தர, மேல் வர்க்கக் குழந்தைகள் கூட  இந்த வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் மிகவும் நெருக்கமான குடும்ப வலைக்குள் இருப்பதால் அவர்களுக்கு  இதைப்பற்றி பேச யாரும் இருப்பதில்லை;  குடும்பத்தின் ‘மரியாதை’ முக்கியமாகக் கருதப்பட்டு மௌனம் காக்கப் படுகிறது.

பஞ்சாபில் இருக்கும் ஒரு தாயின் மனதில் இருக்கும் ஆறாத வடு, இந்த விஷயத்தில் இந்தியா சாதிக்கும் மௌனத்தின் அடையாளச் சின்னம்.

‘எனது 10 வயதிலிருந்து 19 வயதுவரை என் குடும்ப நபரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் பட்டேன். இத்தனைக்கும் எனக்கு அவர் தந்தையைப் போன்றவர்’

‘இந்த விஷயம் பேசப்படாமலேயே என் மனதில் தங்கி விட்டது. யாரிடமும் பேச வழியில்லை. யாரைப் பற்றி மிக உயர்ந்த எண்ணங்கள் வைத்திருந்தேனோ,  யாரிடம் பாதுகாப்பைத் தேடினேனோ, யார் என்னை மிகவும் நேசிப்பதாகச் சொன்னாரோ, அவராலேயே இழிவாக நடத்தப்பட்ட போது என் மனதிற்குள் ஏதோ நொறுங்கியது. என் மேலேயே எனக்கு வெறுப்பும், குற்ற உணர்ச்சியும் உண்டாயிற்று.’

‘அன்றிலிருந்து யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. எனக்கே நான் அன்னியமானேன். என்னால் யாரையும் நம்ப முடியவில்லை; என் உடலையே நான் வெறுக்கிறேன். ஆடைகள் அணிவதை அசிங்கமாக உணருகிறேன். 31 வருடங்களுக்குப் பின்னும் இந்த நிலை. இன்றும் கூட ஒரு ஆண் ஒரு குழந்தையுடன் நிற்பதைப் பார்த்தால் எனக்குக் குமட்டுகிறது.’

வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால் இந்திய குழந்தை வன்புணர்வு பிரச்னை என்பது நம் சமூகத்தில் ஆழப் புதைந்து இருக்கும் ஒரு இரக்கமற்ற பிரச்னை என்று சொல்லலாம்.

காணாமல் போகும் குழந்தைகள்:

5 வயதுச் சிறுமி காணாமல் போனபோது காவல்துறையினரால் முதல் அறிக்கை பதிவு செய்ய மறுக்கப்பட்டனர் அவளது பெற்றோர்கள். மேலோட்டமாக அவளைத் தேடும் முயற்சி கூட எடுக்கப்படவில்லை. கடைசியில், அதே கட்டிடத்தில் ஒரு அறையில் அடைக்கப் பட்டிருந்த அந்தச் சிறுமியின் அலறல் தான் அவளை கண்டுபிடிக்க உதவியது.

பதிவு செய்யப்பட்ட குற்றங்களை மட்டும் பார்த்தாலே தெரியும் எத்தனை குழந்தைகள் தாங்கள் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள் என்று.

வன்புணர்வுக்கு ஆளான குழந்தைகளின் கதைதான் காணாமல் போன குழந்தைகளின் கதையும். தேசிய குற்றப் பதிவு மையத்தின் அறிக்கைப்படி இந்தியாவில் 8 நிமிடத்திற்கொரு ஒரு குழந்தை காணாமல் போகிறது.

நிதாரி கொலைகள் நினைவுக்கு வருகின்றனவா? கிழக்கு தில்லியில் இருக்கும் பெற்றோர் காணாமல் போன தங்கள் குழந்தைகளைப் பற்றி ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று மறுபடி மறுபடி புகார் கொடுத்ததன்  பேரில் குழந்தைகளின் உடல்கள் கற்பழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப் பட்டன.

எங்கே போகிறார்கள் இந்தக் குழந்தைகள்? ஆயுதம், போதைமருந்துக் கடத்தலுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருக்கும் சட்ட விரோதமான தொழில் குழந்தை கடத்தல்.

மும்பையில் இயங்கி வரும் ஆஸ்தா பரிவார் என்ற தொண்டு நிறுவனம் சிவப்புவிளக்குப் பகுதியில் இளம் பெண்களை கண்டுபிடிப்பது வழக்கம். இவர்கள் தங்களை 18  வயது நிரம்பியவர்களாகச் சொல்லிக் கொள்ளுவார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் 14 அல்லது 15 வயதிற்குட்பட்டவர்களே.

ஒரு முறை இந்தப் பெண்கள் கடத்தப்பட்டவுடன், இவர்களை வைத்து வியாபாரம் செய்யும் காமத் தரகர்கள் இவர்களைப் பற்றிய பொய் தகவல்கள் அடங்கிய ஆவணங்களைத்  தயாரிக்கின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் வெளிநாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடிகிறது.  இதற்காக ஒரு பெரிய கூட்டமே கைகோர்த்து  செயல்படுகிறது.

இந்தக் குழந்தைகள் பெரியவர்களைப் போல யோசிக்கவும், பணமா, ஒழுக்கமா என்ற கேள்வி வரும்போது பணத்தை தேர்ந்தெடுக்கவும் கற்றுக் கொள்ளுகிறார்கள். 6 வயதில் கடத்தப்பட்டு இப்போது 18 வயதாகும் ரேஷ்மா கேட்கிறாள்: ‘ஏன் அப்பாக்களையும் சகோதரர்களையும் வேறு மாதிரி பார்க்கிறீர்கள்? அவர்களும் சராசரி  ஆண்கள்தானே? நாங்கள் படும் துன்பத்தை  எந்த ஒரு மனைவியோ, மகளோ தாங்கிக் கொள்ள முடியாது!’

காவல்துறையினரின் அலட்சியப் போக்கு:

கற்பழிக்கும் தந்தைகள், முகம் தெரியாதவர்கள், வீட்டிற்குள்ளேயோ அல்லது சிவப்பு விளக்குப் பகுதியிலேயோ நடக்கும் வன்புணர்வுகள், பருவம் நிரம்பாத குழந்தைகள், அல்லது இரண்டும்கெட்டான் பருவத்தில் இருக்கும் பெண்கள் – எப்படியாயினும், முறையான நிவர்த்திக்கு வழி கோல வேண்டும். அதற்கு இவர்கள் முதலில் சந்திப்பது காவல் துறையைத்தான்.

ஆஸ்தா பரிவார் தொண்டு நிறுவனத்தின் ஆர்வலர் ஆஷா, தனது தோழி நீலிமாவை அவளது பக்கத்துவீட்டு வாலிபன் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை காவல்துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த காவலர் ஒரு துண்டு சீட்டில் தனது தொலைபேசி எண்ணை எழுதக் கொடுத்து ‘எப்போது நிஜமாகவே பலாத்காரம் நடக்கிறதோ, அப்போது எங்களைக் கூப்பிடு!’ என்றாராம்!

2012 ஆம் ஆண்டு தெஹெல்காவில் வெளியான ஒரு கட்டுரை  பெண்களையும், வன்புணர்வுகளையும் ஆணாதிக்கத்தன்மையுடனேயே பார்க்கும் காவல்துறை அதிகாரிகள், காவலர்களை வெளிக்காட்டியது.  இந்த மனநிலையிலேயே குழந்தைகளின் மேல் நடக்கும் கொடுமைகளையும் இவர்கள் அணுகுவது அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

‘இப்போது நிலைமை சற்று பரவாயில்லை.’ என்கிறார் சமூக ஆர்வலர் சுதா திவாரி. இருந்தாலும் இன்னும் சில இடங்களில் காவல்துறையின் இரக்கமற்ற தன்மை தொடருகிறது. பெண் காவலர்கள் இருப்பது உதவுமா என்றால் அதுதான் இல்லை. ‘ஹக்’ ஆர்வலர் பாரதி அலி சொல்கிறார்: ‘பெண் காவலர்கள் இந்த மாதிரி வழக்குகளை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இவ்விஷயங்களை மூடி மறைக்கவே விரும்புகிறார்கள். இந்த கொடுமைகளை அவர்களும் அனுபவிக்கிறார்கள் அல்லது அனுபவித்து இருப்பதால் மற்றவர்களிடம் கருணை காட்ட முன் வருவதில்லை. பெண் காவலர்கள் தங்கள் அலுவலக உடையுடன் வீடு செல்ல விரும்புவதில்லை. அங்கு அவர்களின் அதிகாரம் செல்லுபடியாகாது. வீட்டில் அடியும் உதையும் தான் காத்திருக்கும்.’

வெறுப்பு, தவறான எண்ணங்கள், தினமும் சந்திக்கும் சமூக வெறிச்செயல்கள், இவைகள் மட்டும் காவல்துறையின் இந்த போக்கிற்குக் காரணங்களாக இருக்க முடியாது.

தில்லியில் 5 வயதுக் குழந்தைக்கு நடந்த அநியாயத்தை மூடி மறைக்க காவல்துறை பெற்றோர்களுக்கு லஞ்சம் கொடுக்கத் துணிந்ததற்குக் காரணம் தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையா, அல்லது அவர்களை சுரண்டவா அல்லது தங்களது கண்காணிப்பின் கீழ் இது போல ஓர் கொடூரச் செயல் நடந்தது என்பதை சொல்ல  பயமா தெரியவில்லை.

இனாக்ஷி கங்குலி காவல்துறையினருக்குக் கொடுக்கப்படும் ஊக்கத் தொகை பற்றிக் குறிப்பிடுகிறார்: ‘அவர்கள் பகுதியில் குற்றங்கள் நடக்காமல் இருந்தால் காவல்துறையினருக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. இது தவறான செய்தியைப் பரப்புகிறது. ஒரு வழக்கை உரிய நேரத்தில் பதிவு செய்து அதை திறம்பட கையாள்வதற்கு அல்லவா ஊக்கத் தொகை கொடுக்கவேண்டும்? அது இல்லாதபோது தொந்திரவு இல்லாமல் பார்த்துக் கொண்டு வரும் வழக்குகளைக் கை கழுவி விடுவதே சுலபமாக இருக்கிறது. தங்கள் ஏரியாவில் குற்றங்களே நடப்பதில்லை என்று நாடகமாடுகிறார்கள் காவல்துறையினர்.’

‘பல சட்டங்கள் எழுத்தில் இருந்தாலும் இவை எத்தனை தூரம் செல்லுபடியாகும் என்பது அந்தந்த காவல் நிலைய மேலதிகாரியைப் பொறுத்தது. சிறிது காலத்திற்கு முன், நாங்கள் மாதாமாதம் குழந்தைகள் நல குழுமங்கள், இளம் குற்றவாளிகளின் நீதித்துறை வாரியம், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் மற்றும் நீதிபதி கலந்து கொள்ளும்  ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். இப்போது வந்திருக்கும் மேலதிகாரி இந்தச் சந்திப்பினால் பயனில்லை என்று கருதுவதால் இப்போது இது நிறுத்தப்பட்டுவிட்டது.’

தில்லி போலீஸ் கமிஷனர் திரு நீரஜ் குமார், ‘என் ராஜினாமா கற்பழிப்பை தவிர்க்கும் என்றால், நான் ஆயிரம் தடவை என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ என்று கூறியது ஓரளவிற்கு சரி. கற்பழிப்புக் குற்றங்களைக் குறைப்பது அவர் கையில் இல்லை என்றாலும்,  அவரது உடனடி நடவடிக்கை நிச்சயம் பலன் அளிக்கும். அவரும் அவரது சகாக்களும் தங்கள் கடமை என்ன என்பதை உணர்ந்தால் போதும்.

மூன்றாவது பகுதி