Tag Archives: Deepavali

கங்கா ஸ்நானம் ஆச்சு!

‘ஸ்ரீராமா ஜெயஜெயா…..சீதே மனோஹரா ….

காருண்ய சாகரா கருணாநீ ஜெயஜெயா…’

விடியற்காலை 5 மணிக்கே (!) எழுந்து பிள்ளை மாட்டுப் பெண்ணை மணையில் உட்கார வைத்துப் மேற்சொன்ன பாட்டைப் பாடி நலங்கு இட்டு…..தலைக்கு எண்ணெய் வைத்து…

முதலில் இந்தப் பாட்டை பாடி பிறகு இதன் தமிழ் பதிப்பை பாடுவது என் வழக்கம்.

மேலே சொன்ன பாட்டோட தமிழாக்கம் – சம்ஸ்க்ருத / தமிழறிஞர்கள் கோபிக்க வேண்டாம்.

முழுக்க முழுக்க வேடிக்கை!

சீராமா, மொ(மி)ளகாமா – சேர்த்தரைச்சா விழுதாமா

காய்ச்சினா ரசமாமா – கடுப்பு வலிக்கு இதமாமா!

ஒரிஜினல் பாட்டை பாடும் அதே ராகத்தில் இதைப் பாடலாம்!

கங்கா (காவேரி) ஸ்நானம் செய்து புதுசு கட்டிண்டு பட்டாசு வெடிக்க கீழே போனோம்.

மாடி வீட்டு ஸ்ருதி நான் வருவதைப் பார்த்துவிட்டு, ‘பாட்டி, ஹேப்பி தீபாவளி’ என்றது. 3 வயதுக் குழந்தை. அதை அப்படியே கட்டிண்டு, ‘ஹேப்பி தீபாவளி’ என்றேன்.

ஸ்ருதியின் அண்ணா ராகுல் வாசலில் வெடி வெடிச்சுண்டு இருந்தான். ஸ்ருதி காதைப் பொத்திண்டு, ‘எனக்கு வெடின்னா ரொம்ப பயம்’ ன்னு  எங்கிட்ட வந்து ஒட்டிண்டு நின்னுது.

குழந்தைகளை அணைப்பது என்பது எத்தனை பெரிய இன்பம்! நம் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ‘உன்னைத் தழுவிடிலோ… கண்ணம்மா..உன்மத்தம் ஆகுதடி!’

என் பிள்ளை என்னிடம் ‘நீ ஆட்டம்பாம் வைக்கிறயா?’ என்றான்.

‘சரி’ என்று எழுந்தேன்.

‘பாட்டி…! நீ வெடிப்பியா?’ என்றது ஸ்ருதி.

‘ம்ம்ம்ம்…….’ என்றபடியே வெடி வெடித்து விட்டு வந்தேன்.

‘நீங்க செம பாட்டி….!’ என்றான் ராகுல்.

கங்கா ஸ்நானம் ஆச்சு!

பதிவுலக வாசகர்களுக்கும், பதிவாளர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

 

 

ரமாவும் ரஞ்சனியும்!

ரஞ்ஜனியை எல்லோருக்கும் தெரியும். அதாங்க, அ. உ. பு. பதிவாளர்!

ரமா யார்? அ. உ. பு. பதிவாளர் ரஞ்ஜனியின் அக்கா. என்னைவிட 3 வயது மூத்தவள்.

என்னைவிட புத்திசாலி. எல்லாவிதத்திலும் என்னைவிட சிறந்தவள். மிக நன்றாகப் பாடுவாள்.

சின்ன வயதில் அவளுடன் நான் எப்பவுமே எல்லாவற்றிற்கும் போட்டி போடுவேன். அவள் திருமணம் ஆகிப் போகும் வரையிலும் இது தொடர்ந்தது.

கோலம் போடுவதில் வல்லவள். புள்ளிக் கோலங்கள் அனாயாசமாகப் போடுவாள். எனக்கு வராத பல கலைகளில் இதுவும் ஒன்று. நான் போடும் கோலங்கள் மாடர்ன் ஆர்ட் வகையை சார்ந்தவை. மிகுந்த பொறுமையுடன் புள்ளிகள் வைத்து அவள் கோலத்தை போடுவதை காணக் கண் கோடி வேண்டும்.

‘நீ புள்ளி வைத்துப் போடும் கோலத்தை நான் புள்ளி இல்லாமலேயே போடுவேன்’ என்று பல தடவை சவால் விட்டு தோற்றவள் நான்.

வெள்ளிக்கிழமைகளில் வீட்டை நன்கு பெருக்கி, துடைத்து  கூடத்தை அடைத்துக் கோலம் போடுவாள், பாருங்கள்! கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்.

கோலத்திற்கு அடுத்தபடியாக இப்போது அவள் விரும்பிச் செய்வது ஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பது.

திருமணம் ஆவதற்கு முன் சுருக்கெழுத்து.

வானொலியில் வரும் ஆங்கில செய்திகளை கேட்டு சுருக்கெழுத்தில்  எழுதிக் கொண்டே இருப்பாள். சுருக்கெழுத்தில், சுருக்கெழுத்தாளர் எழுதும் ஸ்ட்ரோக்ஸ் (strokes) ரொம்ப முக்கியம். அதை வைத்துதான் எழுதிய விஷயத்தை ஆங்கிலத்தில் transcribe செய்ய வேண்டும். அக்காவின் ஸ்ட்ரோக்ஸ் perfect ஆக இருக்கும். நான் எப்போதும் போல ‘சமாளி’ தான்!

அவளுக்குத் திருமணம் ஆகி குழந்தை பிறந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ஆபீஸிற்கு அப்பா போன் செய்திருந்தார். ‘அக்காவை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறோம். முடிந்தால் லீவு சொல்லி விட்டு வா’ என்று.

எனக்கு ஆபீஸ் போவதை விட லீவு போடுவது பிடித்தமான விஷயம் ஆயிற்றே! உடனே லீவு சொல்லிவிட்டுப் பறந்தேன்.

இன்னும் குழந்தை பிறந்திருக்கவில்லை. அம்மா அப்போதுதான் அக்காவிற்கு காபி கலந்து எடுத்துப் போகலாம் என்று வீட்டிற்கு வந்திருந்தாள். ‘கொஞ்சம் போய் அவள் பக்கத்தில் இரு’ என்றாள்.

நான் உள்ளே நுழையவும் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவும் சரியாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு ஆயா வெளியே வந்து ‘இத பாரு, உங்க அக்கா குழந்தை’ என்று சொல்லிய படியே நல்ல ரோஸ் கலரில் ஒரு பஞ்சு உருண்டையை என் கையில் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டேன்.

‘முதன்முதலில் நான் தான் உன்னைப் பார்த்தேன்; நான்தான் எடுத்துக் கொண்டேன்’ என்று (அதிலும் போட்டி!) இன்றும் என் அக்காவின் பிள்ளை சம்பத்குமாரனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அன்று தொடங்கி இன்றுவரை அவன் தான் என் முதல் பிள்ளை. அந்த வாத்சல்யம் இன்னும் குறைய வில்லை. அவனுக்கு மட்டுமில்லை – அவனுடைய இரு குழந்தைகளுக்கும் – (ஷ்ரேயா, மேக்னா)   நான் சித்தி தான்! இருவரையும் என் பதிவு ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்து விட்டார். அந்த வருடம் தலை தீபாவளி இல்லை. அடுத்த வருடம் என் அக்காவும் அத்திம்பேரும் எங்களை அழைத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் விருந்து கொடுத்தனர்.

எனக்கு பூச்சூட்டல் செய்து, சீமந்தத்திற்கு சீர்கள் கொண்டு வந்து வைத்து, தலைப் பிரசவத்திற்கும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனாள் அம்மாவாக இருந்து.

எங்கள் அத்திம்பேர் சின்ன வயதில் பரமபதித்தது எங்கள் எல்லோருக்கும் இன்னும் ஒரு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

தைரியமாக தனக்கு நேர்ந்ததை எதிர் கொண்டு தனி ஒருவளாக பிள்ளையை வளர்த்து ஆளாக்கினாள். அம்மாவும் அவளும் அத்தனை திவ்ய தேசங்களையும் சேவித்து இருக்கிறார்கள். நாலாயிர திவ்யப்பிரபந்தம் அத்தனையும் அத்துப்படி.

கண்களில் நீர் தளும்பப் பெருமாளை அலுக்காமல் சலிக்காமல் சேவிப்பாள்.

எனக்கு அக்காவாக, அம்மாவாக இருக்கும் ரமா ஆரோக்கியமாக, சந்தோஷமாக பேத்திகளுக்கு திருமணம் ஆகி கொள்ளுப் பேரன்களையும், கொள்ளுப் பேத்திகளையும் பார்த்து பல ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்பெருமாளையும், ரங்கநாயகித் தாயாரையும் பிரார்த்தித்து நிற்கிறேன்.

அவளுடன் கொண்டாடிய தலை தீபாவளி நினைவுகளுடன்………

இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் ‘திவ்ய தம்பதியரின் தீபாவளி’ என்ற பதிவின் தொடுப்பை  இணைத்திருக்கிறார். அருமையான புகைப்படங்கள். தீபாவளித் திருநாளுக்கு முன்பாக திவ்ய தம்பதியரை சேவித்து ஆனந்தப் படுவோம்!

 

நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி