செல்வ களஞ்சியமே 3

அந்த முதல் ஆயிரம் நாட்கள்

குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகத் தொடங்கும் முதல் நாளிலிருந்து அதற்கு  இரண்டு வயதாகும் வரை உள்ள காலத்தைத்தான் ‘முதல் ஆயிரம் நாட்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

 

இந்த ‘முதல் ஆயிரம் நாட்களை’ குழந்தையின் வளர்ச்சியில் பொன்னான நாட்கள் என்று சொல்லலாம். இந்த நாட்களில் குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து  குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சத்து நிறைந்த உணவுகளினால் நீண்ட கால நோய்களிலிருந்தும்  குழந்தையை காக்கலாம். தேவைப்பட்ட ஊட்டச்சத்து கிடைக்காது போனால் குழந்தையின் உடல் மற்றும் புலனுணர்வு (cognitive) சார்ந்த வளர்ச்சிகள் பாதிக்கப்படும்.

 

ஒரு தாய் கருவுற்றிருக்கும் காலத்தில் என்ன உணவு உட்கொள்ளுகிறாளோ, அதுதான் குழந்தையின்  நினைவாற்றல், கவனசெறிவு (Concentration), தீர்மானிக்கும் குணம், அறிவுத் திறன், மனநிலை, மன உணர்வு ஆகியவற்றைத் தீர்மானிக்கும் என்று விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்துள்ளனர்.

 

முதல் ஆயிரம் நாட்களில் குழந்தைக்குக் கிடைக்கும் உணவு, நுண்ணூட்டச் சத்துப் பொருட்கள், குழந்தையின் மூளையில் உள்ள சுமார் ஐம்பது இரசாயனங்கள் / நரம்பியல் பரிமாற்றங்களை பாதிக்கின்றன என்று விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்துள்ளனர்.

 

இந்தியாவில் கருவுற்றிருக்கும் பெண்களில் பாதிப் பெண்களுக்கு மேல் இந்த ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மெலிந்தும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும், போதிய அளவு மன, உடல் வளர்ச்சி இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள்.

கர்ப்ப காலத்தை முதல் மூன்று மாதங்கள், இரண்டாவது மூன்று மாதங்கள், மூன்றாவது மூன்று மாதங்கள் என்று பிரிக்கலாம். கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்கள், குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. .

இதனால் கருவுற்றிருக்கும் பெண் தனது உணவுப் பழக்கங்களை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுவது மிகவும் முக்கியம்.

நம்மூரில் கருவுற்றிருக்கும் பெண்ணைப் பார்த்து சிலர், ‘நீ இரண்டு பேருக்கு சாப்பிடவேண்டும்’ என்பார்கள். அதாவது அவளுக்கும், அவளது வயிற்றில் உருவாகி வரும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டுமாம். சூப்பர் காமெடி!

இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? ‘கருவுற்றிருக்கும் போது எப்படியும் எடை கூடும். என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்’ என்ற மிக, மிக, மிக, மிக, மிகத் தவறான எண்ணம்.

இப்படி அளவுக்கதிகமான உணவை உண்டு உடல் கன்னாபின்னாவென்று பெருத்துப்போய் குழந்தை பிறந்த பின்னும் இளைக்க முடியாமல் தவிக்கும் பல இளம் பெண்களைப் பார்க்கிறேன். இந்தத் தவறை செய்யவே செய்யாதீர்கள்.

சாப்பாட்டின் அளவை விட, உணவின் குணநலன்கள் மிகவும் முக்கியம். போலிக் ஆசிட், வைட்டமின் B12, இரும்பு சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிகம் உண்ண வேண்டும்.

கீரை வகைகளில் இந்த போலிக் ஆசிட் நிறைந்திருக்கிறது.

உணவில் முக்கியமாக DHA (Docosahexaenoic acid)) எனப்படும்  கொழுப்பு  சத்து  அவசியம் இருக்க வேண்டும். கருவிலிருக்கும் குழந்தையின்  மூளை மற்றும்  கண்ணின் விழித்திரை நன்கு உருவாவதற்கு இந்த கொழுப்புச் சத்து இன்றியமையாதது.

அதுமட்டுமில்லாமல், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க் கிருமிகளை வெளியேற்றவும் இந்த கொழுப்புச் சத்து தேவை. உணவில் இருக்கும் இந்த சத்து குழந்தையின் கண் பார்வைக்கும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமைக்கும், பொதுவான வளர்ச்சிக்கும் உதவுகிறது. கடல் உணவுகளிலும், கடுகு, கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மெந்தியம், வால் நட்ஸ், ப்ளக்ஸ் சீட்ஸ் (flax seeds) மற்றும் சோயா பீனிலும்இந்த  DHA கிடைக்கிறது. சிறிய அளவில் கீரை வகைகளிலும் காணப் படுகிறது.

நார் சத்து அதிகம் தேவை:

பேறு காலத்தில் நம் இரைப்பை, நாம் உண்ணும் உணவில் இருந்து அதிகமான  சத்துப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டி சிறிது மெதுவாகவே செயல் படுகிறது. மேலும் கர்ப்பப் பை பெரிதாகிக்கொண்டே இருப்பதால் இரைப்பையை அழுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது உண்டு. நிறைய நார் சத்து உள்ள காய்கறிகளை குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக் காய், வாழைத் தண்டு சாப்பிடுவதால் இதனைத் தவிர்க்கலாம்.

பழங்கள், பச்சை காய்கறிகள் இவற்றை நிறைய சாப்பிட வேண்டும். மிகவும் முக்கியம் நிறைய நீர் குடிப்பது. நம் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற நீர் அவசியம் தேவை.

பொதுவாகவே நம் நாட்டில், பெண்கள் தங்களது ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முதல் குழந்தையைக்  கருவுற்றிருக்கும் போது,  அம்மாவின் கவனிப்பு, மற்றும் இளம் வயது இவற்றினால் ஓரளவு நல்ல ஆரோக்கியத்துடனேயே அந்தப் பெண் இருப்பாள்.

இரண்டாவது குழந்தை பிறக்கும்போது பல தடைகள் இருக்கும்.

முதல் குழந்தைக்கும் இரண்டாவதிற்கும் இடையே நீண்ட இடைவெளி ஆகிவிடும். அதற்குள் முதல் குழந்தை பள்ளிக்குப் போகத் தொடங்கி இருக்கும்.

என் கதை அப்படித்தான் ஆயிற்று. கூட்டுக் குடும்பத்திலிருந்து தனியே வந்திருந்தோம். ஸோ, எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். முதல் குழந்தை முதல் வகுப்பில் இருந்தாள். காலையில் அவளை தயார் செய்ய வேண்டும். கணவருக்கு காலை 7.3௦ க்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். அதனால் காலைத் தூக்கம் போயே போச்சு! என் அம்மா அப்போது பெங்களூரில் தம்பியுடன் இருந்தாள். இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு /கூட்டிக் கொண்டு ஊருக்குப் போக முடியவில்லை. அதனால் அம்மா வீட்டுக் கொஞ்சல்களை அனுபவிக்க முடியவில்லை.

என்னை நானே பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று. தூக்கம் வரும் சமயத்தில் தூங்க முடியாது. மகளுக்கு வீட்டுப் பாடம் செய்ய உதவ வேண்டும். பாடங்கள் சொல்லித் தர வேண்டும்.

இத்தனையையும் மீறி நான் உற்சாகமாக இருக்க எனக்கு உதவியது இசை தான்.

வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருந்தேன். அந்த இசையில் என் உடல் அசதி, களைப்பு பறந்து போனது!

இந்த வாரம் நாம் கற்றுக் கொண்டது: உங்களுக்குப் பிடித்த ஒன்றை செய்யுங்கள். கருவுற்றிருக்கும் இளம் பெண்களுக்கு மட்டுமல்ல இந்த வார்த்தைகள். எல்லோருக்குமேதான்!

குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோமே, என்ன செய்வது என்கிறீர்களா? ஒரு வாரம் கையிலிருக்கும் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருங்கள். இதோ வந்துவிடுகிறேன்.

செல்வ களஞ்சியமே அறிமுகம்

செல்வ களஞ்சியமே 2

பின்னூட்டமொன்றை இடுக