செல்வ களஞ்சியமே

 

 

நான்குபெண்கள் தளத்தில் 2013 ஆம் ஆண்டு முதல்  வெளிவந்த குழந்தை வளர்ப்புத்  தொடர் இது. 100 பகுதிகள் எழுதியிருந்தேன். எழுதும்போது எனது தளத்தில் இந்தத் தொடரைப் போடக்கூடாது என்பதால் போடமுடியவில்லை. இப்போது இங்கு பதிகிறேன்.

 

‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே!’

எனக்கு மிகவும் பிடித்த, என் குழந்தைகளுக்கும், என் பேரக் குழந்தைகளுக்கும் பாடிய, பாடப் போகும் பாடல் இது.

இந்தப் பாடலில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வரிகளைத்தவிர இன்னும் நிறைய இருக்கிறது.

ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்யும்?

மழலைச் சொல்லாலே நம் துன்பங்கள் தீர்த்திடும்;

முல்லைச் சிரிப்பாலே நமது மூர்க்கத்தைத் தவிர்த்திடும்;

குழந்தையின் மூலம் நாம் பெறும் இன்பம், ஏடுகள் சொல்லாத இன்பக் கதைகள்!

தெய்வத்திற்கு இணையாக, அதற்கும் மேலான அன்பை நம் மேல் பொழியும் குழந்தை.

சரி, கற்பனையை விட்டுவிட்டு இப்போது நிஜ உலகிற்கு வருவோம்:

சின்ன வயதிலிருந்தே எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். எனது திருமணத்திற்கு முன்பே என் அக்காவின் மகனை (அக்கா வேலைக்கு சென்று கொண்டிருந்ததால்) கொஞ்சி சீராட்டி, பாராட்டி, மையிட்டு, பொட்டிட்டு, விதவிதமாக அழகு செய்து பார்ப்பதில் அலாதி ஆசை எனக்கு.

எனக்குக் குழந்தை பிறந்தபின் தான் குழந்தை வளர்ப்பில் இருக்கும் கஷ்டங்கள் தெரிய வந்தன. அக்காவின் குழந்தையை தூக்கி கொஞ்சி விட்டு, அழுதால் அவளிடம் கொடுத்துவிடலாம். நம் குழந்தை என்றால், முழுப் பொறுப்பும் நம்முடையதாயிற்றே!

குழந்தை பிறந்தவுடன் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருப்பேன். அது அழுது எனக்குக் கேட்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று. இன்று போல அப்போது டயபர்கள் கிடையாது. அடிக்கடி குழந்தையின் அடியில் போட்டிருக்கும் துணியை வேறு மாற்ற வேண்டும்.

என் மருத்துவர் என் பயங்களை இதமான வார்த்தைகளால் போக்கினார். “குழந்தைக்கு அசௌகரியமாக இருந்தால் அது கண்டிப்பாக அழும். உனக்கு கட்டாயம் காது கேட்கும். குழந்தை கொஞ்ச நேரம் அழுதால் ஒன்றும் ஆகிவிடாது. அனாவசிய பயங்களை மறந்து விட்டு தூங்கு. உனக்குப் போதுமான ஓய்வு கிடைத்தால்தான் உன்னால் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடியும்”.

புதுத் தாய்மார்கள் எல்லோருமே நினைவில் கொள்ளவேண்டிய ஒரு நல்ல அறிவுரை இது.

குழந்தை வளர்ப்பு பற்றி மேலும் பார்க்கும்முன் செய்தி தாளில் நான் படித்த ஒரு விஷயம் உங்களுடன்:

 

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு அளவுக்கதிகமான உணவை கொடுக்கிறார்கள் அல்லது குழந்தையின் வயிற்றில் உணவைத் திணிக்கிறார்கள்!

‘குழந்தை ரொம்பவும் இளைத்து விட்டாள்’

‘குழந்தை ரொம்பவும் ஒல்லியாக இருக்கிறான்’

‘சரியாகச் சாப்பிடுவதே இல்லை’

‘நான் கலந்து கொண்டு வரும் உணவில் பாதிதான் சாப்பிடுகிறாள்’

 

இப்படி இந்தியத் தாய்மார்கள் மட்டுமல்ல; மேலை நாட்டுத் தாய்மார்களும் சொல்லுகிறார்களாம்!

உண்மையில் தாய்மார்களால் தங்கள் குழந்தைகளின் எடையைப்  பற்றிய நிஜமான கருத்தை அதாவது அவர்கள் நார்மல், அதிக எடை, அளவுக்கு  அதிக எடை என்பதை சரியாகச் சொல்லவே முடியவில்லையாம். எல்லாத் தாய்மார்களும் தங்கள் குழந்தை ஒல்லியாகத் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அதிகளவு உணவை ஊட்டுகிறார்கள்!

சுமார் 300 தாய்மார்களை இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தனர். இவர்களின் குழந்தைகள் ஒரு வயதிலிருந்து ஒன்றரை வயதுக்குள் இருந்தன.  அவர்களது குழந்தைகளின் எடையைப் பற்றி இவர்களிடம் கேட்டபோது 27% தாய்மார்கள் தங்கள் குழந்தை மிகவும் மெலிந்து இருப்பதாகச் சொன்னார்களாம். உண்மையில் ஒரு குழந்தைதான் எடை குறைவாக இருந்ததாம்.

32% குழந்தைகள் அதிக எடையுடன் இருந்தனர். 12 தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தை அதிக எடையுடன் இருப்பதாகச் சொன்னார்களாம்.

27% குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இரண்டு வயதிற்குள் அதிக எடையுடன் இருக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் அதிகப் பருமன் (Obese) ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

இதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் எடை கூடுவது, குறைவது பற்றிய சரியான அறிவைப் பெற வேண்டியது இன்னும் முக்கியம். எல்லாவற்றையும் விட முக்கியம்: உணவை அதிகளவில் குழந்தைக்குக் கொடுக்காதீர்கள்!

குழந்தைகள் ‘கொழுக், மொழுக்’ என்று இருந்தால் பார்க்க அழகாக இருக்கும் தான். அமுல் பேபி போல தன் குழந்தையும் இருக்க வேண்டும் என்று ஒரு அம்மா ஆசைப்படுவதில் தப்பு இல்லை. ஆனால் அந்தக் ‘கொழுக், மொழுக்’ எதிர்காலத்தில் அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றால் தாய்மார்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கொழுக், மொழுக் குழந்தையை விட பிற்காலத்தில் சரியான எடையுடன், ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதும் தாய்மார்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.

இந்தத் தொடரில் குழந்தை வளர்ப்பை அடிப்படையிலிருந்து பார்க்கலாம்.

இளம் குழந்தையை எப்படி தூக்குவது, நீராட்டுவது, பால் புகட்டுவது, தாய் பாலின் அவசியம், கெட்டி ஆகாரத்திற்கு எப்போது மாறுவது, என்னென்ன கொடுக்கலாம், எப்படிக் கொடுக்கலாம் என்று எல்லாவற்றையும் எனது அனுபவத்துடன் சொல்லவிருக்கிறேன்.

என் குழந்தைகளுக்கு அம்மாவாகவும், பேரக்குழந்தைகளுக்குப் பாட்டியாகவும் பலபல அனுபவங்கள். எனது அனுபவங்களும் இந்தத் தொடரில் சேருவதால் இது வெறும் ஏட்டு சுரைக்காயாக இல்லாமல் நடைமுறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

உங்களது ஐயப்பாடுகளையும் கேள்விகளையும் பின்னூட்டம் (feedback) மூலமாகக் கேட்கலாம்.

வாசகர்களும் பங்கு கொண்டு இந்தப் பகுதியை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

செல்வ களஞ்சியமே” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. பிங்குபாக்: இரண்டாவது எண்ணம்!

பின்னூட்டமொன்றை இடுக